நாட்டின் நிதி நிலைவரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் : பாட்டலி சம்பிக்க ! on Saturday, January 11, 2025
2025 ஆம் ஆண்டு 4500 பில்லியன் ரூபா வரையில் அரச வருவாயை திரட்டிக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. வரி அதிகரிப்பை தவிர்த்து அரசவருவாய் அதிகரிப்புக்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது.
நாட்டின் நிதி நிலைவரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச நாணய நிதியமே இன்று நாட்டை நிர்வகிக்கிறது. 4500 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை இந்த ஆண்டு திரட்டிக் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த வருவாயை வரிகள் ஊடாக திரட்டிக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வரிகளை விதித்தே 4500 பில்லியன் ரூபா வருவாயை திரட்டிக் கொள்ள முடியும்.
இதுவே உண்மை. நாட்டின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு உண்மையை குறிப்பிடாமல் இருந்தால் கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கைத் திட்டங்கள் ஏதும் கிடையாது.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள 196 செயற்திட்ட யோசனைகள் சிறந்தது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டும்.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தனியார் மயப்படுத்தலாக அமையாது. அரச நிறுவனத்தின் உரிமத்தை அரசு தனதாக்கிக் கொண்டு ஏனைய பங்குகளை தனியார் தரப்பினருக்கு வழங்க வேண்டும்.
தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று போர் கொடி உயரத்துபவர்கள் கடந்த காலங்களில் தேசிய வளங்களை தனியார் மயப்படுத்துவதற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கியவர்கள்.
மின்கட்டணம் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு புறக்கணித்துள்ளது.
மின்கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை நிதி நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் மின்சார சபை இலாபமடைந்துள்ளது. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
நீர்மின்னுற்பத்தியின் ஊடாக 56 சதவீதமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்கட்டணத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறைக்கும் வரை காத்துக்கு கொண்டிருக்க முடியாது. மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றார்.