நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றாலும் விவசாயி, புலி சின்னம் கிடைக்காதது ஏன்?
இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (11/01/2024) வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரஷா ஆகிய தேசிய சட்டங்களில் உள்ள 17 பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க, தமிழக அரசின் திருத்த மசோதாக்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தாலோ, மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலோ, திராவகம் வீசி கொடுங்காயங்களை ஏற்படுத்தினாலோ மரண தண்டனை விதிக்கப்படலாம்.
பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். திராவகம் வீச முயன்றாலே 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்.
இந்த குற்றங்கள் எதற்குமே ஜாமீன் கிடையாது. குற்றவாளி உடனே கைது செய்யப்படுவார். ஆயுள் தண்டனை என்பது குற்றவாளி இயற்கையாக இறக்கும் வரை நீடிக்கும்.
இந்த மசோதா இன்று சட்டப்பேரவையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்ட்டு, நிறைவேற்றப்படும். மத்திய அரசின் சட்டங்களில் செய்யப்படும் திருத்தம் என்பதால், ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்படும்.
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, 2010-ஆம் ஆண்டு கட்சியாக பதிவு செய்யப்பட்டது. அதன் தலைமை ஒருஙகிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்த நாம் தமிழர் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால் தற்போது மாநிலக் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்தாலும் கூட, நாம் தமிழர் கட்சி கேட்ட விவசாயி அல்லது புலி சின்னம் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அந்த சின்னங்கள் ஏற்கனவே வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அவற்றைத் தர முடியாது என்று அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து
மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டம் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இத்திட்டம் வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ரயில்வேக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, மீளவிட்டான் வழியே தூத்துக்குடிக்கு 143.5 கி.மீ. தொலைவுக்கு 260 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டங்களும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சில்வர் நோட்டீஸ் – இன்டர்போல் அறிமுகம்
ஒரு நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய சில்வர் நோட்டீசை சர்வதேச காவல்துறையான இன்டர்போல் அறிமுகம் செய்திருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் இந்தியா உள்பட 52 நாடுகள் இணைந்துள்ளன. அதன்படி, இத்தாலியைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் வெளிநாடுகளில் குவித்துள்ள சொத்துகளை கண்டறிய அந்நாடு விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் முதல் சில்வர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது.
இந்த சில்வர் நோட்டீஸ் இந்தியாவுக்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று தங்கிவிட்ட 10 குற்றவாளிகளின் பெயர் இந்தியாவிடம் இருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி இட மாற்றமா? பாகிஸ்தான் மறுப்பு
பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்று வெளியான தகவல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆ கிய நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள மைதானங்களில் கட்டுமானப் பணிகள் இன்னும் நீடிப்பதால் போட்டிகள் மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியானதாக கூறப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள 3 மைதானங்களையும் பாகிஸ்தான் மதிப்பில் 1,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்து நாளிதழ் கூறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.