சிறிதரனுக்கு பயணத்தடை?

by adminDev

சென்னை செல்வதற்காக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் குறிப்பிட்டு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை நீண்டநேரம் கெடுபிடிகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

தமிழக அரசின் ஏற்பாட்டில் இன்றைய தினமும் நாளைய தினமும் நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தினம் – 2025 நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தமிழக அரசின் அழைப்பின்கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் நேற்று வெள்ளிக்கிழமை சென்னைக்குப் பயணமானார்.

சென்னைக்குப் புறப்படுவதற்காக கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற சிறிதரன், அங்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மிகையான கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகவும், எனவே அவரை சென்னை செல்வதற்கு அனுமதிக்கமுடியாது எனவும் குறிப்பிட்ட அதிகாரிகள், இதுகுறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் நாடு திரும்பியதும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் விசாரணைகள் நடத்தப்படும் எனக்கூறி, சிறிதரனை சென்னை செல்வதற்கு அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்