- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும் மலையாளத்திலும் அற்புதமான திரைப்படப் பாடல்களைப் பாடிய பி. ஜெயச்சந்திரன் காலமானார். தமிழில் அவர் பாடிய 15 பாடல்களின் பட்டியல் இது.
எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரான திருப்புனித்துரா ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவுக்கும் பிறந்தவர் ஜெயச்சந்திரன்.
ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்ற ஜெயச்சந்திரன், எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத் தொடங்கினார்.
1960களின் பிற்பகுதியில் மலையாளப் படங்களில் பாட ஆரம்பித்தார். 1972ல் வெளிவந்த பணிதீராத வீடு படத்தில் அவர் பாடிய ‘நீலகிரியூடே’ பாடலுக்காக கேரள மாநில விருது கிடைத்தது.
1973ஆம் ஆண்டில் ஸ்ரீதர் இயக்கிவந்த அலைகள் படத்திற்கு, எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அந்தப் படத்தில் ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை அளித்தார் எம்.எஸ்.வி. அதே ஆண்டில் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போலே’ என்ற பாடலையும் பாடினார். இதற்குப் பிறகு, தமிழில் தொடர்ச்சியாகப் பாட ஆரம்பித்தார் ஜெயச்சந்திரன்.
அவர் பாடிய பாடல்களில் மறக்க முடியாத 15 பாடல்கள் பற்றிய தொகுப்பு இது.
1. பொன்னென்ன பூவென்ன கண்ணே
ஸ்ரீதர் இயக்கி 1973ல் வெளிவந்த ‘அலைகள்’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கன்னட நடிகரான விஷ்ணுவர்த்தன் இந்தப் படத்தில் தமிழில் அறிமுகமானார். கிட்டத்தட்ட எல்லோருமே மறந்துவிட்ட இந்தப் படத்தில், ஜெயச்சந்திரன் பாடிய இந்தப் பாடல் மறக்க முடியாத பாடலாக நிலைத்துவிட்டது. பாடலை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
2. வசந்தகால நதிகளிலே
1976ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடலைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். இது ஒரு அபூர்வமான பாடல். அந்தாதி வகையில் எழுதப்பட்டிருந்த பாடல் இது. ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தையை வைத்து, அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தை அமைந்திருக்கும். இந்தப் பாடலை, பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து பாடியிருப்பா்கள். கமல்ஹாசனின் வாயசைப்புக்கு ஜெயச்சந்திரன் குரல் கொடுத்திருப்பார். ஆரம்பத்தில் ஒரு உணர்ச்சியையும் முடிவில் வேறொரு உணர்வையும் ஏற்படுத்தும் பாடல் இது.
3. ஒரு வானவில் போல வந்தாய்
1978ல் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் முத்துராமன், கவிதா ஆகியோர் நடித்து வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தையும் பஞ்சு அருணாச்சலம் இயற்றியிருந்தார். படம் தோல்விப் படம்தான். ஆனால், பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் வரிகள், இளையராஜாவின் இசை, ஜெயச்சந்திரனின் குரல் ஆகிய எல்லாம் சேர்ந்து இந்தப் பாடலை நிலைக்கச் செய்துவிட்டன. இதே படத்தில் ‘சித்திரச் செவ்வானம்’ என்ற பாடலையும் ஜெயச்சந்திரன் பாடியிருந்தாலும், இந்தப் பாடலே மனதை கொள்ளைகொண்ட பாடலாக அமைந்தது.
4. கவிதை அரங்கேறும் நேரம்
கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தது எம்.எஸ். விஸ்வநாதன். இந்தப் பாடலை எழுதியவர் குருவிக்கரம்பை சண்முகம். மிக அட்டகாசமாக இசைக் கோர்ப்புடன் உருவாகியிருந்த இந்தப் பாடலை, ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார் ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரன் பாடிய பாடல்களில் சிறந்த பாடல்களில் ஒன்று என்பதைவிட, தமிழ் சினிமாவின் சிறந்த பாடல்களில் ஒன்று என்றும் சொல்லலாம். இதே படத்தில், ‘தென்றலது உன்னிடத்தில் சொல்லி’ என்ற பாடலையும் அவர் பாடியிருந்தார். அதுவும் இனிமையான ஒரு பாடல்தான்.
5. வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
70களின் பிற்பகுதியிலும் 80களின் துவக்கத்திலும் ‘வசந்தம்’ என்ற வார்த்தைக்கு ஏகப்பட்ட ஈர்ப்பு இருந்தது. அந்த காலகட்டத்தில் உருவான பாடல் இது. 1981ல் வெளிவந்த ‘ரயில் பயணங்களில்’ இடம்பெற்றிருந்தது இந்தப் பாடல். இந்தப் படத்தை இயக்கி இசையமைத்திருந்தவர் டி. ராஜேந்தர். பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே வரவேற்பைப் பெற்றிருந்தன என்றாலும், இந்தப் பாடல் தனித்துத் தெரிந்ததற்கு, ஜெயச்சந்திரனின் குரல் மிக முக்கியமான காரணம்.
6. காளிதாசன் கண்ணதாசன்
ராம நாராயணன் இயக்கத்தில் 1983ல் வெளிவந்த ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பிரபுவும் சில்க் ஸ்மிதாவும் நடித்த இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். பி. சுசீலாவுடன் இணைந்து ஜெயச்சந்திரன் பாடியிருந்த இந்தப் பாடல், பார்ப்பதைவிட கேட்பதற்கு மிக இனிமையான பாடல்.
7. காத்திருந்து, காத்திருந்து
1984ஆம் ஆண்டில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டாக அமைந்திருந்தன. வழக்கமாக, கதைக்காக பாடல்களை உருவாக்குவது வழக்கம். ஆனால், ஏதாவது ஒரு படத்தில் பயன்படுத்தலாம் என உருவாக்கிவைத்திருந்த மெட்டுகளை வைத்து பாடல்கள் உருவாக்கப்பட்டு, அதற்காக கதை எழுதப்பட்ட படம் வைதேகி காத்திருந்தாள்.
எதிர்பார்த்ததைப் போலவே படமும் பாடல்களும் மிகப் பெரிய ஹிட். இந்தப் படத்தில், ‘ராசாத்தி உன்னை’, ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ’, ‘காத்திருந்து காத்திருந்து’ ஆகிய மூன்று பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருந்தார். மூன்றுமே சிறப்பான பாடல்கள் என்றாலும், ‘காத்திருந்து, காத்திருந்து’ பாடல் கூடுதல் கவனத்தைப் பெற்றது.
8. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்:
பாலு ஆனந்த் இயக்கத்தில் 1985ல் வெளிவந்த நானே ராஜா நானே மந்திரி படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. விஜயகாந்த், ராதிகா நடித்திருந்த இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைக்க, பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார். 80களின் பிற்பகுதியில் ஒரு தலைக் காதலர்களின் தேசிய கீதமாக இந்தப் பாடல் இருந்தது.
9. பூவ எடுத்து ஒரு
1986ல் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா நடித்து வெளிவந்த ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒரு பாடலை மட்டுமே ஜெயச்சந்திரன் பாடியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் பாடல்களுக்கு கங்கை அமரன் பாடல்களை எழுதியிருந்தார். இந்தப் படத்தில் எட்டுப் பாடல்கள் இருந்தாலும், எஸ். ஜானகியுடன் இணைந்து ஜெயச்சந்திரன் பாடியிருந்த இந்தப் பாடலும் வெகுவாகக் கவனிக்கப்பட்டது.
10. கொடியிலே மல்லிகைப்பூ
1986ல் வெளிவந்த கடலோரக் கவிதைகள் படத்தில் இடம்பெற்றிருந்த ஆறு பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். எஸ். ஜானகியுடன் ஜெயச்சந்திரன் பாடியிருந்த இந்தப் பாடலில் ஒரு இசை ராஜாங்கத்தையே நடத்தியிருப்பார் இளையராஜா. பல்லவியை இருவரும் பாடி முடித்ததும், தேவாலயத்தின் மணிகள் ஒலிக்க, தொடர்ந்து கிடாரின் இசை உச்சத்தை எட்டும். இருவருக்குமே பரஸ்பர ஈர்ப்பு இருக்க, அதைச் சொல்லாமல் தடுமாறும் நிலையில், இந்தப் பாடல் ஒலிக்கும்.
11. சின்னப்பூவே மெல்லப்பேசு
1987ல் ராபர்ட் – ராஜசேகர் இயக்கத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் வெளிவந்த திரைப்படம் இது. இந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். பாடல்கள் அனைத்தையும் எஸ்.ஏ. ராஜ்குமாரே எழுதவும் செய்திருந்தார். இந்த 9 பாடல்களில் தொலைந்துபோகாமல், தனித்து நின்றது ‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ என்ற இந்தப் பாடல்.
12. எனது விழி வழிமேலே
1988ல் பி. லெனின் இயக்கத்தில் வெளியான ‘சொல்லத் துடிக்குது மனசு’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில், ‘பூவே செம்பூவே’, ‘தேன்மொழி’ ஆகிய பாடல்களும் மிக நன்றாக அமைந்திருந்தாலும் ஜெயச்சந்திரன் – எஸ். ஜானகி குரலில் வெளியான ‘எனது விழி வழிமேலே’ பாடலே, மிக இனிமையாக அமைந்திருந்தது.
13. கத்தாளங் காட்டுவழி
பாரதிராஜா இயக்கத்தில் 1993ல் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான பாடல் இது. இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். ‘கிழக்குச் சீமையிலே’ படத்திற்கு முன்பாக தமிழில் ரோஜா, புதிய முகம், ஜென்டில்மேன் ஆகிய படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேற்கத்திய இசையின் தாக்கம் அவரது படங்களில் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் கிராமிய இசையிலும் தனது புதுமையை நிரூபித்தார் ரஹ்மான். இந்தப் பாட்டுக்காக ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருது கிடைத்தது.
14. சொல்லாமலே யார் பார்த்தது
1995ல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். இந்தப் பாடலை பழனி பாரதி எழுதியிருந்தார். தமிழ்த் திரையிசை ஒரு பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கிக்கொண்டிருந்த தருணத்தில் வெளியான இந்தப் பாடல், வானொலி, தேநீர் கடைகள் என பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
15. கன்னத்தில் முத்தமிட்டால்
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ எனும் பாடலை பாடினார். இந்தப் படத்தில் ஏழு பாடல்கள் இருந்தாலும், வழக்கம்போலவே தனித்து ஒலித்தது ஜெயச்சந்திரனின் குரல். இந்தப் பாடலுக்காக வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் கிடைத்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு