by wp_shnn

தேசியத்துக்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவேன் – சரத் வீரசேகர தேசிய  பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த அரசியலமைப்பு உருவாக்க சட்ட வரைபு சமஸ்டி ஆட்சி அரசியலமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. தேசியத்துக்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவேன்  என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் சிறந்தது. இருப்பினும் அந்த திட்டத்தை அமுல்படுத்திய  முறைமை தவறு. பேருந்துகள், முச்சக்கரவண்டிகளில்  பொருத்தப்பட்டுள்ள உதிரிபாகங்கள் நீக்கப்பட்டுள்ளன.  இதனால்  நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில்  போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தபோது கொழும்பு நகரை அழகுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு  அவற்றை செயற்படுத்தினார். இன்று கொழும்பு நகரம் குப்பைகளால் சூழ்ந்துள்ளது. வடிகான்களில் குப்பைகள்  தேங்கி நிற்கின்றன. க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை சுற்றுச்சூழலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி இன்று இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகிறது.இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்துவோம்.

தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. இந்த நாடு 30 வருடகால பிரிவினைவாத போராட்டத்தை எதிர்கொண்டது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். விடுதலை புலிகள் தான் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த அமைப்பின்  நோக்கம் அழியடையவில்லை. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின்  கொள்கையை கொண்டுள்ளவர்கள் இன்றும் உள்ளார்கள்கள். ஆகவே தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தக் கூடாது.

புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்படுகிறது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்விடயத்தில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதை அறிய முடிகிறது.திய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக  நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த அரசியலமைப்பு உருவாக்க சட்ட வரைபு சமஸ்டியாட்சி  அரசியலமைப்பு  அம்சங்களை கொண்டுள்ளது. தேசியத்துக்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில்  ஈடுபடுவேன்.

நாட்டின் ஒற்றையாட்சியை  பாதுகாப்பதற்காகவே  பல்லாயிர இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள். ஆகவே சமஸ்டியாட்சி  அரசியலமைப்பை உருவாக்கி படையினரின் உயிர் தியாகத்தை மலினப்படுத்த இடமளிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை இல்லாதொழிக்க மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்