by wp_shnn

மியன்மார் அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் பணம் செலுத்தி படகில் வருபவர்கள் அகதிகளல்ல,  இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து அனைத்து இனத்தவர்களுடன் இணக்கமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறார்கள்.   பிற நாட்டு முஸ்லிம்கள் ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே  அவர்கள்  இலங்கையில் இணக்கமாக செயற்படமாட்டார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்களை இங்கு தங்க வைத்தால் தேவையில்லாத பிரசச்சினைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ  லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மியன்மார் நாட்டு ரோஹின்யா அகதிகள் இலங்கைக்கு  வருகைத் தந்துள்ளமை பாரியதொரு பிரச்சினையாக  மாற்றமடைந்துள்ளது.எதிர்வரும் காலப்பகுதியில் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு  1இலட்சம் பேர் இலங்கைக்கு வரவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக  பொதுமக்கள்  பாதுகாப்பு  அமைச்சர்  ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்கள் அகதிகள் அல்ல  படகுக்கு பணம் செலுத்தி  இலங்கைக்கு  சட்டவிரோதமாக வருகைத் தந்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள்  தொடர்பான நிறுவனம்  இவ்விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஏனெனில்  அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகளில் இலங்கை கைச்சாத்திடவில்லை.

நிதி வழங்குகிறோம் மியன்மார் அகதிகளை பொறுப்பேற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையின்  அகதிகள் நிறுவனம் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. இந்த அகதிகளை ஏன் இலங்கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பிரச்சினை.

இலங்கை இராணுவம் யுத்தக் குற்றம் செய்தது என்று ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக பல யோசனைகள் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு எதிராக சாட்சியம் திரட்டப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் சட்டவிரோத அகதிகளை பொறுப்பேற்குமாறு எவ்வாறு  அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள்  சபையின் காரியாலயத்தின் முன்பாக ‘ தமக்கு கௌரவமான வாழும் சூழல் வேண்டும்’ என்று பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் பின்னணியில் ஒரு சக்தி உள்ளது  என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் அவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால் இலங்கையில்  வாழும் முஸ்லிம் சமூகத்தினர்கள் சிங்கள,தமிழ் மக்களுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். அனைத்து இன மக்களின் கலாச்சாரங்களுக்கும் மதிப்பளித்து சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள்.பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இவ்வாறு இணக்கமாக செயற்படமாட்டார்கள்.

பிற நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கின்றார்கள். அவ்வாறான கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்கள் இலங்கையின் கலாச்சாரத்துக்கு அமைய செயற்படமாட்டார்கள். உலகில் 50 .இற்கும் அதிகமான முஸ்லிம்  நாடுகள்  உள்ளன அவற்றில் பெரும்பாலானவை செல்வந்த நாடுகள். இலங்கைக்கு வருகைத் தந்துள்ள மியன்மார் அகதிகளை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம் ஏன்  கவனம் செலுத்தவில்லை என்பது பிரச்சினைக்குரியது.

இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு இன்றும் தீர்வு காணப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் உயர்வடைந்துள்ளது. எமது நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில்  மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்னர்  ஏனைய தரப்பினர் குறித்து அவதானம் செலுத்தலாம்.

இலங்கை சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன நிலையில் மியன்மார் நாட்டு அகதிகளை இங்கு நிரந்தரமாக தங்க வைப்பது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.அகதிகள் என்ற பெயரில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே தேசிய பாதுகாப்பு குறித்து  விசேட கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு  வரும் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது அத்தியாவசியமானது.

மியன்மார் நாட்டு அகதிகளை இலங்கையில் தங்க வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம் ஆகியோர் பேசுகிறார்கள்.யுத்தத்தால் இடம்பெயர்ந்து 11 ஆயிரம் பேர் இன்றும் முகாம்களில்  வாழ்கிறார்கள்.

இவர்கள் பற்றி பேசாமல் பிற  நாட்டு அகதிகள் பற்றி பேசுவது அரசியல் செயற்படாகும். பணம் செலுத்தி படகுகளில் வருபவர்கள் அகதிகளல்ல,அகதிகள்  என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் போர்த்துக்கேயர்களும் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு தான்  இலங்கைக்கு வந்து இலங்கையை ஆக்கிரமித்தார்கள். மியன்மார்  ரோஹிங்கியா அகதிகளை   நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்