மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை (10) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர், நிகழ்வுகள் இடம்பெற்றன.
மலையக தமிழ்மக்களுக்குரிய தொழில்சார் உரிமைகள், காணி உரிமை, மொழி உரிமை, அரசியல் உரிமை, பொருளாதார உரிமை உள்ளிட்ட விடயங்களுக்கான போராட்டங்களினபோது உயிர் நீத்தவர்களே வெள்ளிக்கிழமை (10) நினைவுகூரப்படுகின்றனர். பிடிதளராதே அமைப்பு மற்றும் மலையக உரிமைக்குரல் என்பன இணைந்து 2019 டிசம்பர் மாதம் சர்வதேச தேயிலை தினத்தன்று மலையக தியாகிகள் தினத்தை நடத்தி இருந்தன.
நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை, டெவோன் தோட்டத்தில் உள்ள மலையக மக்களுக்கான காணி உரிமை போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த சிவனு லெட்சுமனனின் கல்லறையில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படியே ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2020 ஜனவரியில் மஸ்கெலியாவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 2021 இல் பத்தனையில் நடைபெற்றது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கொட்டகலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இம்முறை கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.