by adminDev2

‘உயிர் பிழைச்சதே பெருசு…’ – லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள் சாலைகளின் இரு பக்கங்களிலும் கொழுந்துவிட்டு எரியும் தீ நாக்குகள், வான் நோக்கி எழும் புகைத் தூண்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நடை பயணமாகவோ, காரிலோ, சில பல நல்ல உள்ளங்களின் உதவியாலோ பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் மக்கள்… இதுவே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று அதிகம் காணக் கிடைக்கும் காட்சிகளாக இருக்கின்றன.

அதிக சக்திவாய்ந்த சாண்டா அனா காற்றினால் உந்தப்பட்டு உண்டான காட்டுத் தீ, மாநகரின் ஆயிரக்கணக்கான கட்டமைப்புகளை நாசமாக்கிவிட்டன. அழகிய புல்வெளிகள் எல்லாம் புகையைப் பரப்பிக்கொண்டிருக்கும் சாம்பல் மேடுகளாக மாறியுள்ளன. ஹாலிவுட் படங்களால் பிரபலப்படுத்தப்பட்ட இடங்களை நாசம் செய்துள்ளது காட்டுத் தீ. நவீன லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் மிகவும் மோசமான அழிவு இது என்று குறிப்பிடப்படுகிறது. புகைக் கூண்டுகளாய், இரும்பு மாடிப்படிகளாய் மட்டுமே எஞ்சி தீக்கு தன்னைத் தின்னக்கொடுத்துக் கொண்டிருக்கும் வீடுகளை கைவிட்ட படி, தாங்கள் மட்டும் தப்பித்து வந்த பயங்கரக் கதைகளை பேசித் தீர்க்கிறார்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்வாசிகள்.

முகம் தெரியாதவர்களால் காப்பாற்றப்பட்டேன்: இரண்டு முறை அந்நியர்கலால் காப்பாற்றப்பட்ட கதையை சொல்கிறார் பசிபிக் பாலிசேட்ஸில் தனது மாமனாருடன் அவரை பராமரித்தபடி வசித்து வந்த 48 வயதான சாம்சன். “செவ்வாய்க்கிழமை காட்டுத் தீயின் தாக்கம் தீவிரமானதைத் தொடர்ந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாகனங்கள் ஏதுவும் இல்லாத நிலையில் அண்டை வீட்டாரின் உதவியுடன் அவரது வாகனத்தில் மாமனாருடன் நகரை விட்டு வெளியேறினேன்.

கால் மணி நேர பயணத்துக்கு பின்பு போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் நகரவே இல்லை. தீயோ நெருங்கி வந்து கொண்டிருந்தது. கார்களை விட்டுவிட்டு நடந்தே தப்பிச்செல்ல போலீஸார் அறிவுறுத்திய நிலையில், சிகிச்சையில் இருக்கும் மாமனாரை அழைத்துக்கொண்டு வாக்கரின் உதவியுடன் மெல்ல நடந்து வெளியேற முயற்சித்தேன். அப்போது ‘தீ நாமிருக்கும் இடத்தை நெருங்கிவிட்டால் என்னை விட்டுவிட்டு நீ தப்பிச் சென்று விடு’ என மாமனார் என்னிடம் கூறினார்.

நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குள்ள இரண்டாவது முறையாக மற்றுமொரு நல்ல உள்ளம் கொண்டவர் எங்களை தனது வாகனத்தில் அங்கிருந்து ஏற்றிக்கொண்டு பாதுகாப்பான இடத்தில் விட்டார். அவர்கள் எங்களைக் காப்பாற்றினர்” என்று கண்ணீருடன் கூறுகிறார்.

40 வருட உழைப்பு: அதேபோல், ஈட்டன் தீயின் பிழம்புகள் லாஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளை சூழ்ந்ததால் ஸ்டீவ் லுபன்ஸ்கியும் அவரது மனைவி கான்டேஸும் அவர்களின் வீட்டையும் அவர்கள் அதிகம் நேசித்து உருவாக்கிய உள்ளூர் பின்னி அருங்காட்சியகத்தையும் விட்டுவிட்டு போக வேண்டியது இருந்து. “நாங்கள் இருவரும் இணைந்து 40 வருங்களாக அதை உருவாக்கினோம். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களுடைய மியூசியம் அழிந்துவிட்டது. அது என்னை மிகவும் பாதிக்கும். என்னால் அதனை திரும்ப உருவாக்க முடியுமா என்று தெரியாது. இன்சூரன்ஸ் நிறுவனமும் தீயில் கருகிவிட்டது” என்கிறார் ஸ்டீவ் கண்ணீருடன்.

பெரிய இழப்பு: அல்டடேனாவாசியான எடிடே அபரிசியோ கூறுகையில், “நானும் எனது நண்பரும் வெளியே முயன்றபோது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டோம். வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்தன. எங்கள் வாகங்களைச் சுற்றி சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்தது. காரின் மீது பெரிய மரங்கள் வந்து விழுந்தன. மலையின் மீதிருந்து தீப்பிழம்புகள் பறந்துவந்து வீடுகளின் மீது விழுந்தன. இறுதியாக நாங்கள் எங்கள் நண்பரின் அம்மாவின் வீட்டை அடைந்தோம்.

மறுநாள் காலை என் பக்கத்து வீட்டுக்காரர் மற்ற வீடுகளைப் போல என் வீடும் எரிந்து சாம்பலாகியிருந்த வீடியோ ஒன்றை அனுப்பினார். புகைக் கூண்டு மட்டும் அப்படியே இருந்தது. நான் எனது சமூகத்தை இழந்துவிட்டேன். இது எனக்கு மிகவும் சிக்கலான பிரச்சினை. என்ன நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது” என்றார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத் தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். காட்டுத் தீ காரணமாக தங்களின் உடமைகளை விட்டு விட்டு சுமார் 1,37,000 பேர் வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இந்த பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த வீடுகளை இழந்துள்ளனர். பசிபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்தான் காட்டுத் தீ முதன்முதலில் ஏற்பட்டுள்ளது. பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு காற்றின் வேகத்தால் இந்த காட்டுத்தீ மளமளவென பரவியுள்ளது.

குறிப்பாக, பலிசடேஸ், சைல்மர், ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். 24 மணி நேர உதவி மையங்களும் இதற்காக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்