மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
மியான்மரில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் ராணுவம் பணிந்து ஜனநாயக ஆட்சிக்கு வழிவட்டது.கடந்த 2015-ம் ஆண்டில் பொதுத்தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 2021-ம் ஆண்டில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக எம்என்டிஏஏ, டிஎன்எல்ஏ மற்றும் ஏஏ ஆகிய 3 கிளர்ச்சிக் குழுக்கள் ஒன்றிணைந்து ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. மியான்மரின் 50 சதவீத பகுதிகள் கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சூழலில் ஏஏ என்ற கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ராம்ரி தீவின் கியாக் நி மா என்ற கிராமத்தின் மீது மியான்மர் ராணுவம் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.