by adminDev2

நடிகர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விஜய்யின் வலதுகரமாக இருந்து வரும் தவெகவின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் குறித்து ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அந்த ஆடியோ பதிவில், ‘‘புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்துவதால் கட்சிக்குதான் பின்னடைவு ஏற்படுகிறது. விஜய் என்ற ஒற்றை நபருக்காக தான், இந்த கட்சிக்கு வாக்குகள் வரப்போகிறது. அப்படி இருக்கும்போது, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்தி வருவது கட்சிக்கு பின்னடைவுதான்.

திமுகவில் ஸ்டாலின் புகைப்படத்துக்கு பதிலாக, துரைமுருகன் படத்தை போட்டால் வாக்குகள் கிடைக்குமா? ஜெயலலிதா புகைப்படத்துக்கு பதிலாக சசிகலா புகைப்படத்தை வைத்தால் வாக்குகள் வருமா? நான் பாமகவுக்கு வேலை பார்க்கும்போது, ராமதாஸை தவிர்த்து, அன்புமணியை மட்டுமே தான் முன்னிலைப்படுத்தினேன்.

எந்த கட்சியாக இருந்தாலும், முதல்வர் வேட்பாளரைதான் முன்னிலைப்படுத்த வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணா வரிசையில் விஜய்யை இடம்பெற செய்ய நான் வேலை செய்து வருகிறேன். அப்படியிருக்க, கோமாளி கூட்டங்களை கட்சிக்குள்ளே விட்டால் எப்படி? இது தவறு.

கட்சிக்கு விஜய்யின் முகம் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி புஸ்ஸி ஆனந்த்தான் எல்லாம் என நிர்வாகிகள் நினைத்துவிட்டனர். 30 சதவீதம் வாக்குகள் வாங்கும் அளவுக்கு நான் வேலை பார்த்து வருகிறேன். ஆனால், இப்படியே போனால், 2 சதவீத வாக்குகள் கூட தேறாது’ என அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது. இந்த ஆடியோவால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் மீதான அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறும்போது, ‘ஏற்கெனவே, கட்சியில் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாட்டால் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், விஜய்யின் ஆலோசகரே இவ்வாறு பேசியிருப்பது, புஸ்ஸி ஆனந்த் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான் என்று எண்ண வைக்கிறது.

சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக தவெகவினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது கைது செய்யப்பட்டனர். அப்போது, மகளிர் அணியினரும் கைது செய்யப்பட்டனர். இதைக் கேள்விப்பட்டு, தலைவர் விஜய், மகளிர் அணியை தொடர்பு கொண்டு பேசினார். மகளிர் அணியினரிடம் விஜய் பேசியதை கூட, புஸ்ஸி ஆன்ந்த் வெளியிடாமல் மறைத்துவிட்டு, அந்த நேரத்திலும் தன்னை தான் முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

இவரை மீறி ஒருவராலும், விஜய்யை நெருக்க முடியவில்லை. முன்பு, நிர்வாகிகளுக்குள்ளயே பேசி வந்தது, தற்போது விஜய்யின் ஆலோசகர் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது’ என்றனர். இதனால், தற்போது, தவெகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க, புஸ்ஸி ஆனந்தை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.

ஆலோசனைக் கூட்டம்: இதற்கிடையே, தவெக​வில் மாவட்ட செயலா​ளர்கள் பட்டியல் தயார் செய்​யும் பணியில் கடந்த 3 மாதமாக புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அப்போது, மாவட்ட வாரியாக நிர்​வாகி​களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, வாக்​கெடுப்பு மூலம் இரண்டு அல்லது மூன்று தொகு​திக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம், 100 மாவட்​டங்​களுக்​கான, மாவட்ட செயலா​ளர்கள் பட்டியலை புஸ்ஸி ஆனந்த் தயார் செய்து, அந்தபட்டியலுக்கு விஜய்​யிட​மும் ஒப்புதல் பெற்றுள்​ளார். இந்நிலை​யில், அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய மாவட்ட செயலா​ளர்​களுடன் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவல​கத்​தில் இன்று நடக்​கிறது. இதில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்