தேசியப்பட்டியலை தூக்குவோம்:தமிழரசின் சண்டியர்!

by 9vbzz1

தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு அன்றி பொதுச்சபைக்கே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியில் இருந்து என்னை இடைநீக்கியதாக கூறப்படும் கடிதம் கிடைத்தால் என்னை நீக்குவதற்கு பதில் செயலாளருக்கு அதிகாரங்கள் ஒன்றும் இல்லை என்று கூறி அவரை உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து நான் வழக்கினை தாக்கல் செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாப்பே அதன் முதுகெலும்பு. அதன் கொள்கைகள் அது பயணிக்கும் வழித்தடம். அந்த அடிப்படையில் ஒரு கட்சியை நிர்மூலமாக்குவதற்கு யாப்பை மீறி செயற்பட்டால் அதனை முடக்கலாம்.

திருகோணமலையில் கட்சிமீது தொடரப்பட்ட வழக்கின் மூலம் எமது பொதுச்சபையானது முடக்கப்பட்டுள்ளது. அப்போது இனிமேல் யாப்பு மீறல் செய்யமாட்டோம் என்று பேசப்பட்டது.

ஆனால் மீண்டும் அதே யாப்பு மீறலை மத்தியசெயற்குழு செய்கிறது என்றால் அதன் நோக்கம் என்ன. அந்த பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்ற வழக்குகளை நடத்தியவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டிய விடயம்.

மத்தியகுழுவை அரசியல் மாபியாக்களின் கூடாரமாக மாற்றக்கூடாது. கடந்த ஒரு மத்திய குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவை கதிரையில் இருக்க வேண்டாம் உங்கள் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்ன நபர் மத்திய குழுவிலேயே இல்லாத ஒருவர். நிலமை அவ்வாறே உள்ளது.

அதேவேளை பதில் செயலாளர் என்ற போர்வையில் ஒருவர் இருந்துகொண்டு யாப்பைமீறி செயற்பட்டமையாலேயே அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

பொதுத்தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட ஒருவர் சொன்னார் நான் தோற்றால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று. ஆனால் இரண்டாம் தரமும் தோற்றுவிட்டு தேசியப் பட்டியலை பெறும் ஆசையில் இருக்க கூடாது.

கட்சியின் பொதுக்குழு கூடும்போது தேசியப் பட்டியலை நாங்கள் மீள் பரிசீலனை செய்வோம். கட்சியை மீட்பதற்காக மாத்திரமே நான் போராடுகிறேன். மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு இல்லை என்று கட்சியினுடைய யாப்பின் விதி ஏழு கூறுகிறது. அந்த அதிகாரம் பொதுச்சபைக்கே இருக்கிறதெனவும் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்