டிரம்ப் ‘நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டது’ ஏன்? விசாரணையில் என்ன நடந்தது?

டொனால்ட் டிரம்ப்: ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நிபந்தனையின்றி விடுதலை

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி மெர்ச்சன், “உங்கள் இரண்டாவது பதவிக் காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.

டிரம்பை நிபந்தனையின்றி விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கில் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியதில்லை.

இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளிதான் என்பதை உறுதி செய்த நீதிபதி, அவருக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் என எதுவுமின்றி ‘நிபந்தனையின்றி விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு எந்தச் சிரமமும் இன்றிச் செல்லலாம் என்றாலும், அவரது பதிவேடுகளில் இந்த வழக்கில் குற்றவாளி எனப் பதிவு செய்யப்படும்.

டொனால்ட் டிரம்ப்: ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நிபந்தனையின்றி விடுவிப்பு

இந்த வழக்கில் டிரம்பை நிபந்தனையின்றி விடுவிப்பது நாட்டின் மிக உயர்ந்த பதவியை மீறாமல் வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வ தண்டனை என்று நீதிபதி மார்ச்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த ஆண்டு மே மாதம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஜனவரி 20ஆம் தேதியன்று டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவேற்கவுள்ளார்.

நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?

டொனால்ட் டிரம்ப்: ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நிபந்தனையின்றி விடுவிப்பு

பட மூலாதாரம், Reuters

சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த விசாரணையில், அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவரை “நிபந்தனையின்றி விடுவிப்பதை” நீதிபதி தண்டனையாக விதித்துள்ளார்.

இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனை பெற்ற முதல் அதிபராக வெள்ளை மாளிகையில் பணியாற்றுவார்.

அவருக்கு சிறை, அபராதம் அல்லது நன்னடத்தை என எதையும் எதிர்கொள்ள மாட்டார். அடுத்த 10 நாட்களில் டிரம்ப் பதவியேற்கும் சூழ்நிலையில் இதுதான் “ஒரே சட்டப்பூர்வ தண்டனை” என்று நீதிபதி ஜுவான் மெர்ச்சன் கூறியுள்ளார்.

வீடியோ காலில் ஆஜரான டிரம்ப், இந்த விசாரணையில் பேசியபோது தாம் நிரபராதி என்றும் இது “மிகவும் பயங்கரமான அனுபவம்” என்றும் கூறினார்.

அரசு வழக்கறிஞர் ஜோஷுவா ஸ்டீங்லாஸ் நீதிமன்றத்தில், டிரம்ப் “குற்றவியல் நீதி அமைப்பு பற்றிய பொதுமக்களின் கருத்துக்கு நீடித்த சோகத்தை” ஏற்படுத்தியதாகக் கூறினார். ஆனால், இந்த வழக்கை முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஒப்புக்கொண்டார்.

தண்டனைக்குப் பிறகு ஆன்லைனில் ஒரு பதிவில், டிரம்ப் இந்த விசாரணையை “ஒரு வெறுக்கத்தக்க ஏமாற்று வேலை” என்று குறிப்பிட்டார். மேலும், மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

முன்பு உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?

டொனால்ட் டிரம்ப்: ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நிபந்தனையின்றி விடுவிப்பு

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, இதற்கான தண்டனையை வழங்குவதை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார்.

அதற்காக அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடிய அவர், அவருக்கு வழங்கவுள்ள தண்டனையை நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார். அதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனையை தாமதப்படுத்தத் தனக்கு உரிமை உள்ளதா என்று மேல்முறையீட்டு மனு மூலமாக உச்சநீதிமன்றத்திடம் டிரம்ப் கேட்டிருந்தார்.

ஆனால், 5 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு எதிராகவும், 4 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர்.

அதன் பிறகு, டிரம்பின் வழக்கறிஞர்கள் பலரும், மன்ஹாட்டன் குற்றவியல் வழக்கில் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்புக்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நீதிபதிகளை வற்புறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

மேலும் மன்ஹாட்டன் வழக்கறிஞர்கள், இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்திற்கு அளித்த சிறு விளக்கத்தில், “இத்தகைய விலக்கை எந்தவொரு நீதிமன்றத்தின் முடிவாலும் ஆதரிக்க இயலாது,” என்று குறிப்பிட்டனர்.

தற்போது டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி என்ன?

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார் டிரம்ப்.

ஆபாசப் படங்களில் நடித்தவரான நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 2016ஆம் ஆண்டு, சட்ட செலவுகளுக்காக 1,30,000 அமெரிக்க டாலர்களை டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளார்.

இதுகுறித்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று 2024ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், டிரம்புக்கு நியூயார்க்கில் வரும் ஜனவரி 10ஆம் தேதியன்று தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில், “டிரம்புக்கு சிறைத் தண்டனை, அபராதம் போன்ற எதுவும் விதிக்கப்படாது. மாறாக இதற்கு ‘சரியான தீர்வு கண்டு வழங்கப்படும். அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இந்த விசாரணைக்கு நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ கலந்துகொள்ளலாம்.” என்று நியூயார்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் டிரம்புடனான தனது பாலியல் உறவு குறித்து வெளியே பேசாமல் இருக்க நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பணம் கொடுத்தார். இதை மறைப்பதற்கான முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இடம் பெற்றிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டிரம்ப் மறுத்தார். தான் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கு அவரது 2024 தேர்தல் பிரசாரத்துக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சியாக இருப்பதாக வாதிட்டார்.

அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்புக்கு ஆரம்பத்தில் நவம்பர் 26ஆம் தேதியன்று தண்டனை அறிவிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நீதிபதி மெர்ச்சன் தண்டனை அறிவிக்கும் தேதியை ஒத்தி வைத்தார்.

அதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பளித்த அவர், டிரம்புக்கு ‘நிபந்தனையின்றி விடுவித்து’ தண்டனை வழங்கியுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு