ஆன்லைன் ஷாப்பிங்: ஆண்ட்ராய்டு போனை விட ஐபோனில் பொருட்களின் விலை அதிகமாக காட்டப்படுகிறதா? பிபிசி கண்டறிந்த உண்மை
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி நிருபர்
-
ஆன்ட்ராய்டை விட ஐபோனில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தற்போது பெரிய விவாதம் நடந்து வருகிறது.
தாங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க விரும்பும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை பயன்படுத்த விரும்பினால், ஆன்ட்ராய்டு போன்களில் காட்டப்படும் விலையை விட ஐபோனில் காட்டப்படும் விலை அதிகமாக இருப்பதாக, சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பலர் புகார் கூறி வருகின்றனர்.
நிதி சார் விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பலரும் சமூக ஊடகங்களில் இதுகுறித்து காணொளிகள் பதிவிட்டதால், இதுகுறித்து தொடர்ந்து விவாதம் நடைபெறுகிறது.
பல்வேறு தளங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையைப் பொறுத்தவரை, ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இடையே உண்மையாகவே வித்தியாசம் உள்ளதா எனக் கண்டறிய முயன்றோம்.
இரண்டு வெவ்வேறு தொலைபேசிகளில் தேடப்படும் பொருட்கள் வெவ்வேறு விலைகளைக் காட்டுகின்றன என்ற கூற்றின் அடிப்படையில், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட மூன்று கருத்துக்கள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அதற்கு குறிப்பிட்ட நிறுவனங்களும் விளக்கம் அளித்துள்ளன.
ஸ்விக்கியில் உணவை ஆர்டர் செய்ய விரும்பும்போது, இரண்டு வெவ்வேறு போன்களில் காட்டப்பட்ட விலையில் வித்தியாசம் இருந்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபர், உபெர் (Uber) மூலம் இரண்டு வெவ்வேறு வகையான போன்களில் வாகனத்தை முன்பதிவு செய்ய முயன்றபோது, அவற்றுக்கு இடையே விலை மாறுபடுகிறது என்று குறிப்பிட்டார்.
ஃப்ளிப்கார்ட் தளத்தில் சூட்கேஸ் வாங்க விரும்பியபோது, இரண்டு போன்களில் காட்டப்பட்ட விலை வித்தியாசமாக இருப்பதை மூன்றாவது நபர் கவனித்தார்.
இந்தப் பதிவுகள் வெவ்வேறு சூழல்களில் பதிவிடப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.
நரேன் நெட்வொர்க் மற்றும் விதுல் ப்ரோதி ஆகிய இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து இதுதொடர்பான கருத்துக்களோடு வெளியிடப்பட்ட காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த சமூக ஊடகக் கணக்குகளில் உள்ள மற்ற காணொளிகளுடன் ஒப்பிடும்போது, இதுதொடர்பான காணொளி அதிகளவிலான மக்களைச் சென்றடைந்துள்ளது.
நவம்பர் 22ம் தேதி பதிவிடப்பட்ட இந்தக் காணொளியை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இதனால், ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கு இடையே உள்ள விலை வேறுபாடுகள் தொடர்பாக, நாடு முழுதும் மக்கள் தெரிவிக்கும் பல்வேறு கருத்துக்களை பார்க்க முடிகிறது. பட்டயக் கணக்கர் சர்தக் அஹுஜாவும் இதுதொடர்பாக ஒரு காணொளியை உருவாக்கியுள்ளார்.
பிபிசி விசாரணையில் தெரிய வந்தது என்ன?
மேலும் இந்த விவாதம் தொடர்பாக பிபிசி ஆய்வு செய்தபோது விலை வேறுபாட்டில் பெரியளவில் வித்தியாசம் தெரியவில்லை.
மேக் மை ட்ரிப், ஹோட்டல் அறைகள், உபெர், ஓலா, ரேபிடோ, ஜொமாடோ, ஸ்விக்கி, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், மிந்த்ரா, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை பிபிசி ஒப்பிட்டுப் பார்த்தது.
பிபிசி இந்த செயலிகள் அனைத்தையும் ஐபோன் 13 மற்றும் ரெட்மி K20 Pro (ஆன்ட்ராய்டு ) ஆகிய இரண்டு போன்களில் பதிவிரக்கம் செய்தது. இரண்டு தொலைபேசிகளில் உள்ள செயலிகளும் இரண்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒப்பிட்டது. நட்சத்திர ஹோட்டல் அறைகள் முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தது. ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு தொலைபேசிகளும் காட்டிய விலையில் பெரிதாக வித்தியாசம் இல்லை.
உபெர் செயலியின் விலையில் மட்டுமே வேறுபாடுகளைக் காண முடிந்தது. வகைகளைப் பொறுத்து, அதுவும் சிறியளவிலான வேறுபாடுகளைக் காண முடிந்தது. அதிகபட்ச வேறுபாடு 50 ரூபாய் வரை மட்டுமே இருந்தது.
இருப்பினும், அதே உபெர் செயலியை சாம்சங் S22 அல்ட்ரா (ஆன்ட்ராய்டு) போனில் பதிவிறக்கம் செய்தபோது, மற்ற ஆன்ட்ராய்டு போன்களில் காட்டப்பட்ட விலையில் இருந்து இதில் வேறுபாடு தென்பட்டது.
எனவே, ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு இடையே உபெர் விலைகள் முற்றிலும் மாறும் என்று சொல்ல முடியாது, அதே நேரத்தில் பிபிசியால் ஆய்வு செய்யப்பட்ட மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை.
உத்தி மாறிவிட்டதா?
ஆனால் பிபிசி இந்த வேறுபாட்டைக் கண்டுபிடிக்காததற்கு வேறு காரணமும் இருக்கலாம். ஒன்று, சமூக ஊடகங்களில் இந்த விலை வேறுபாடு தொடர்பாக ஏற்பட்ட விவாதங்களுக்குப் பிறகு, பல்வேறு இணையதள வணிக நிறுவனங்கள் தங்களது உத்தியை மாற்றி, இந்த விலை வேறுபாடுகளை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தியிருக்கலாம்.
அல்லது பிபிசி ஆய்வு செய்த பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை ஒரே மாதிரியாக அமைந்திருக்கலாம், பிற பொருட்களின் விலையில் வேறுபாடுகள் இருக்கலாம். அதற்கான காரணத்தை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், பிபிசியின் ஆய்வில் இந்த வேறுபாடுகள் நேரடியாகக் காணப்படவில்லை என்றாலும், இந்தியாவில் உள்ள ஏராளமான நுகர்வோர் இந்த வித்தியாசத்தை உணர்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட, டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரையிலான ஹோட்டல் அறைகளில் விலை வித்தியாசம் காணப்பட்டதாக பலர் பதிவிட்டுள்ளனர். ஹோட்டல் அறைகளைப் பொறுத்தவரை, விலை வித்தியாசம் 20 சதவிகிதம் வரை உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரீமியம் சேவைகளில் என்ன நிலை?
இந்த வேறுபாடுகள் பொருள் சேவைகளில் மட்டுமல்ல, பணம் செலுத்தி வாங்கப்படும் உயர் ரக சேவைகளிலும் (பிரீமியம்) வெளிப்படுகின்றன.
ஐபோனில் யூடியூப் பிரீமியம் போன்ற பயன்பாடுகளின் விலை சற்று அதிகம். ஏனென்றால், ஐபோன் ஆப் ஸ்டோரில் ஒரு செயலியின் பயன்பாட்டை வைத்திருப்பதற்கு குறிப்பிட்ட அந்த நிறுவனம் அதிக தொகை செலுத்த வேண்டியதன் காரணமாக விலைகளில் வேறுபாடுகள் உள்ளதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், இந்த வேறுபாடுகள் பெரியளவில் இருப்பதில்லை. ஆனால், மற்ற நேரங்களில் பெரியளவிலான வித்தியாசங்களைக் காண முடியும்.
“இந்த விலை வேறுபாடு பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் உள்ளது. நமது சந்தைகளிலும், கடைகளிலும் வாங்க வருபவர்களின் தேவையையும், பொருளின் மீதுள்ள ஆர்வத்தையும் கவனித்து விலையைக் கூறுவார்கள். வாடிக்கையாளர்கள் பதிலுக்கு பேரம் பேசுவதையும் காண முடியும். ஆனால், இணையதளத்தில் பொருட்களை வாங்கும்போது, நமது பொருள் வாங்கும் பழக்கம், அதன் வரலாறு, நாம் உபயோகிக்கும் தொலைபேசி நிறுவனம், நிதித் திறன் போன்ற நமது சொந்த தரவுகளைப் பயன்படுத்தி விலையை உயர்த்தினாலும், நம்மால் அவர்களிடம் பேரம் பேச முடியாது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக சிரமம் ஏற்படும்.
இதுபோன்ற பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வரும்போது, அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு, விமர்சனங்களுக்கு வழிவகுக்கும். அதேபோன்று ஒருமுறை, 2000ம் ஆண்டில், அமேசான் டிவிடி விலை நிர்ணய பரிசோதனையில் சிக்கியது,” என சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள யூனியன் வங்கியின் பொருளாதாரப் பேராசிரியரான வித்யா மஹம்பரே பிபிசியிடம் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பதற்கான தந்திரமா ?
இந்தப் பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் உள்ளது. அமெரிக்காவில் உள்ள டோர்டேஷ் என்ற நிறுவனத்திற்கு எதிராக அங்குள்ள ஒருவர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.
ஆன்ட்ராய்டு பயனர்களை விட ஐபோன் பயனர்களிடம் அதிக விலை வசூலிக்கப்படுவதாக மே 2023 இல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
“வெவ்வேறு இடங்களில் அல்லது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே தயாரிப்பு அல்லது சேவையில் காணப்படும் வெவ்வேறு விலைகள், சந்தர்ப்ப அடிப்படையிலான விலை மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரம் என்று அழைக்கப்படுகிறது” என சர்தக் அஹுஜா தெரிவித்தார்.
வெளிக் கடைகளில் ஒரே பொருள் ஒரு விலையிலும், விமான நிலையங்களில் இன்னொரு விலையிலும், வணிக வளாகங்களில் மற்றொரு விலையிலும் விற்கப்படுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால், இந்த விலை வேறுபாடுகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவை விலைப் பாகுபாடு மற்றும் வாடிக்கையாளர்களை பிரித்தல் என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு செயலியை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கான தள்ளுபடிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கான தள்ளுபடிகளை இதற்கான உதாரணமாகக் கருதலாம்.
மேலும் சில சமயங்களில், குறைந்த கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்கள், பொருட்களை வாங்காமல் சென்றுவிடுவதைத் தவிர்க்க அவர்களுக்குக் குறைந்த விலையைக் காட்டி, அவர்களை வங்கச் செய்ய வைக்கும் நடைமுறைகளும் உள்ளன.
மொபைலின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகின்றதா?
”இது மிகவும் சிக்கலானது. நாம் பயன்படுத்தும் மொபைல்பேசியை பொறுத்து விலை தீர்மானிக்கப்படுகிறது தான். ஆனால், தொலைபேசியை மட்டும் வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அதில் பிற விஷயங்களும் அடங்கும்.
இந்த பெரிய நிறுவனங்கள் அதிகத் தகவல்களை சேகரிக்கின்றன.
பல ரகசிய வழிகளும் பின்பற்றப்படுகின்றன. நமது தனிப்பட்ட விவரங்கள், நமது குடியிருப்புப் பகுதி, நாம் பயன்படுத்தும் இணையதள முகவரி, நாம் கடந்த காலத்தில் வாங்கிய பொருட்கள், வருமானம், பிற கொள்முதல், இவை அனைத்தையும் அடிப்படையாகக்கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் இந்த வேறுபாடு, நேரம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் விலை மாற்றங்களை உள்ளடக்கியது. விலையில் உள்ள வேறுபாடுகள் நீங்கள் ஆப்பிள் அல்லது ஆன்ட்ராய்டு சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைப் பொறுத்தும் மாறலாம்”
என்று பெங்களூரில் உள்ள இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த கார்த்திகா ராஜாமோகன் பிபியிடம் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு மொபைல் அல்லது மடிக்கணினி, விலை மாற்றத்தைத் தீர்மானிக்கும் பல கருவிகளில் ஒன்றாகும்.
அதிநவீன கணினி தொழில்நுட்பம், நமது இருப்பிடம், நாம் பயணிக்கும் இடங்கள், பொருள் வாங்கிய நேரம் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கின்றன. கியூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தும்போதும் விலைகள் அடிக்கடி மாறலாம்” என்று வித்யா மஹம்பரே மேலும் விளக்கினார்.
கணக்கெடுப்புகள் காரணமா?
விலை மாற்றம் உண்மையானது தான். அதற்கு வெவ்வேறு மொபைல்கள் உண்மைக் காரணமாக சில சமயங்களில் இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விலை நிர்ணயத்தின்போது வணிக நிறுவனங்கள் இதைவிட பல தந்திரங்கள் செய்கின்றன என்றும் கார்த்திகா விளக்கினார்.
“அவர்கள் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அதாவது, உங்களது வாங்கும் திறன் மற்றும் பின்புலத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது ஃபிளாஷ் விற்பனை என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் வாங்கவில்லை என்றால் சலுகை இருக்காது என்று உங்களிடம் கூறப்படுகிறது. இதுபோன்ற பல உத்திகளில் ஐபோன்-ஆன்ட்ராய்டும் ஒன்று,” என்கிறார் கார்த்திகா ராஜாமோகன்.
சில ஆய்வுகள் கூட விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆன்ட்ராய்டு பயனர்களை விட ஐபோன் பயனர்கள் அமெரிக்காவில் ஹோட்டல் அறைகளுக்கு அதிக கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது .
எனவே, அத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில் விலையும் நிர்ணயிக்கப்படலாம்.
சிக்கலாக உள்ள சட்டம்
ஆனால், மேற்குறிப்பிட்ட உத்திகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையின் கீழ் வருகிறதா, இல்லையா என்பது குறித்து நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இந்தியாவில் நுகர்வோருக்குக் கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், இணையதள சேவைகளைப் பொறுத்தவரை, அந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவது மிகவும் சிக்கலானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இந்த விஷயம் சட்ட அளவியல் அமைப்பின் கீழ் வருகிறது. இந்தச் சட்டங்களின்படி, பேக்கேஜ் செய்யப்பட்ட எந்தவொரு பொருட்களுக்கும் வெவ்வேறு அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) நிர்ணயிப்பது சட்டவிரோதமானது. இருப்பினும், இந்த விதிமுறைகள் சேவைத் துறைக்கு நேரடியாகப் பொருந்தாது”
இருப்பினும், இந்த விவாதம் சமீபத்தில் அதிகரித்துள்ளதை அடுத்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனம் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு பிரச்னையை கையில் எடுத்துள்ளது. என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“ஆனால், இந்தச் சிக்கல் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது. இப்போது இந்த நிறுவனங்கள் பெரிய வழக்கறிஞர்கள் மூலம் மத்திய நுகர்வோர் உரிமைகள் அமைப்பின் முன்பும், தேவைப்பட்டால் நீதிமன்றங்களிலும் வாதிடுகின்றன.
நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கின்றன என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்” என்று கார்த்திகா ராஜாமோகன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தீர்வு இல்லையா?
இந்த விலை வித்தியாசம் ஒரு மோசமான விஷயம் அல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
“இருப்பினும், இது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும், ஏனெனில் இந்த வழிமுறையானது அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் குறைந்த விலையைக் காண்பிக்கும்.
ஆனால் அதே நேரத்தில், அதிக வருமானம் கொண்ட வாடிக்கையாளர் இந்த உயர் விலைகளைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆராயலாம். அதாவது விலைகளை ஒப்பிட்டு அதனை கண்டறிய முடியும்.
வெவ்வேறு ஃபோன்கள் அல்லது மடிக்கணினிகளின் விலைகள், ஃபோன்களில் குக்கீகளை (இணையதளங்களில் எவற்றையெல்லாம் என்பது குறித்தது) அழிப்பது, அவர்கள் பல்வேறு வழிமுறைகளை கண்டறியலாம்.
நிறுவனங்கள் அத்தகைய முறைகளை மாற்றும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், அப்படி செய்யும்போது, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், ஒரே விலையைக் காட்டத் தொடங்கினால், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் அதே விலைதான் இருக்கும்” என்கிறார் வித்யா மஹம்பரே.
தற்போது, எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவைக்கும் அதிக கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், வெவ்வேறு சாதனங்களில் அதன் விலையை ஒப்பிடுவதே ஒரே வழியாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு