தேவையான பொருட்களை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க தவறினால் மக்கள் வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாமல் போகும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை நியாயமான விலைக்கு பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதில் அரசாங்கம் தவறுவிடுமாக இருந்தால் மக்கள் வீதிக்கு வருவதை தவிர்க்க முடியாமல் போகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு முடியுமான சாதகமான சூழலை இந்த நாட்டில் இதுவரை நாங்கள் காணமுடியவில்லை. அரசாங்கம் என்னதான் சொன்னாலும் மனிதனின் வயிற்றோடு சம்பந்தப்பட்ட அத்தியாவசியமான சில பொருட்களை நியாயமான விலைக்கு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதில் அரசாங்கம் தவறுவிடுமாக இருந்தால் மக்கள் வீதிக்கு வருவதை தவிர்க்க முடியாமல் போகும்.
குறிப்பாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரிசி பிரச்சினைக்கு இன்னும் அரசாங்கத்தால் தீர்வுகாண முடியாமல் போயிருக்கிறது. அதேபோன்று உப்பு பிரச்சினைக்கு ஒருசில வாரகாலத்தில் அரசாங்கத்தால் தீர்த்துவைக்க முடியும். ஆனால் அதனை இன்னும் காலதாமதம் செய்து அதற்கு தீர்வுகாணாமல் இருப்பது ஏன் என்று எங்களுக்கு தெரியாமல் இருக்கிறது.
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது அதனை இறக்குமதி செய்து மக்களுக்கு தேவையான உப்பை பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால் இன்னும் அதனை செய்யாமல் இருக்கிறது. அதனால் மக்கள் அதிகவிலைக்கு உப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அத்தியாவசிய பொருட்கள் விடயத்திலும் அரசாங்கம் கவனம்செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தலை மன்னார் பங்குத்தந்தை பிரதமருக்கு முகவரியிட்டு எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், மன்னாரில் 18ஆயிரத்தி தொல்லாயிரம் எக்டயார் காணி வனவள திணைக்கத்துக்கு கீழ் வர்த்தமானி செய்யப்பட்டிருக்கிறது.
அதனால் நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வருகின்ற கிராமங்கள் ஆலாயங்கள் அங்கு இருக்கின்றன.மன்னார் தீவு என்பது இலங்கையில் இருக்கின்ற சர்வதேச தீவாகும். அதில் இருந்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்டயார் காணி வனவள திணைக்களத்துக்கு கீழ் வர்த்தமானி செய்வதன் மூலம் அந்த இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போகிறது. அதனால் இந்த கடிதம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2009, 2010 காலப்பகுதியில் பயிற்சிகளை முடித்த 237 ஆசிரியர்களுக்கு இதுவரை அவர்களுக்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் வழங்கப்பவில்லை.
அதனால் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி இதுதொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களுக்கான சான்றிதழ்களை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் பயிற்றுவிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட நூலகர்கள் அவர்களுக்கான சம்பளம் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் இருப்பது தொடர்பில் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.