by admin

அரச பணியாளர்களின் நடத்தை மாற்றத்தினூடாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (09) காலை நடைபெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர்  சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய வட மாகாண ஆளுநர், ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் கௌரவ ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது என்பதையும் இந்த அரசாங்கத்தின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் சேவைகளை விரைவாகவும் தரமாகவும் அன்பாகவும் வழங்குவது அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மாற்றத்தை அரச பணியாளர்களின் நடத்தையில் ஏற்படுத்துவதன் ஊடாக செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த நடத்தை மாற்றங்கள் உடனடியாக செய்யக்கூடியவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், 2025ஆம் ஆண்டினை வட மாகாணத்தில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றுவோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்