இந்திய இழுவைப் படகு அடாவடி; யாழ். மீனவரின் வலைகள் நாசம் இலங்கை கடற்பரப்பில் புதன்கிழமை (08) இரவன்று இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் குறித்த மீனவர், புதன்கிழமை (08) இரவு ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்து உள்ளன. இதனால் அவரிடம் இருந்து 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் ஆறு வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
புதன்கிழமை (08) இரவு 10 மணியளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்து உள்ளன. இப்பொழுது மீன்பிடி பருவகாலம். இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்துள்ளார்.
ஏழு இலட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்று, இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன், வங்கி கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கின்றேன் என்றார்.