தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்திக் குறைவுக்கு காரணமாக அமைகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நேற்றும், அதற்கு முந்தைய நாளிலும் நாடாளுமன்ற அமர்வில், நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.
எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு தொடங்கி பத்து நாட்கள் கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது கடந்த ஆறாம் திகதி மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் வட்டவான் கிராமசேவர் பிரிவில் அடங்கும் 224 விவசாயிகளுக்கு சொந்தமான 380 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிரோடு கூடிய விவசாய நிலத்தை தமது தொல்லியல் பகுதி என அறிவித்துள்ளது. அதேபோன்று குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் குச்சவெளி கிராம சேவையாளர் பிரிவில், 1985 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற்களஞ்சியம் மற்றும் சந்தைப் பகுதியை தொல்லியல்துறை தொல்பொருள் பகுதி என அறிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் தொல்லியல் துறையானது, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய் கிராம சேவையாளர் பிரிவில் உள்ளடங்கும் பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட உறுதிகளைக் கொண்ட 150 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்ற, அண்ணளவாக ஆயிரம் ஏக்கர் நிலத்தினை விவசாயம் செய்ய விடாமல் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இதனை விடவும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தென்னைமரபுஅடி, புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, ஜாயா நகர், கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரியகுளம் முதலிய கிராமசேவை பிரிவுகளை உள்ளடக்கிய 1994 ஏக்கர் நிலத்தை எல்லைக்கற்களை இட்டு பிடித்து வைத்துள்ளது. இந்த செயலானது, நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும், இது நாட்டிற்கு பேரிழப்பு என்பதனையும், இந்த அவையின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இது மட்டுமல்லாமல் தொல்லியல் துறை ஆனது, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், இராஜவந்தான் மலை முருகன் கோயில், கூனித்தீவு மத்தளைமலை முருகன் கோயில், கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோயில் அதேபோன்று, சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், திருமங்கலாய் சிவன் கோயில், ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், இலங்கைத்துறை முகத்துவாரம் பெரியசாமி கோயில் மற்றும் கல்லடி மலைநீலியம்மன் கோயில் அதேபோன்று, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ளடங்கும், கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், தென்னமரபுஅடி கந்தசாமிமலை முருகன் கோயில், குச்சவெளி செம்பிமலை சிவன் கோயில் மற்றும் வளத்தான்மலை நாகதம்பிரான் கோயில் முதலிய சைவ கோயில்களையும், அவற்றை சூழவுள்ள விவசாய நிலங்களையும் கையகப்படுத்துகின்ற முன்முயற்சிகளில் தொல்பொருள் துறை ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதற்கு மேலாக, இலங்கையில் புகழ்பெற்ற கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள 453 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு வாழை மரத்தை நடக்கூட தொல்லியல்துறை தடை விதிக்கின்ற அதேவேளை, இங்கு 58 சட்டவிரோத கடைகள் கட்டியிருப்பது பற்றி தொல்லியல் திணைக்களம் எந்த கவலையும் கொள்ளவில்லை என்பதோடு, பல வேளைகளில் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது ஒரு இனவாத போக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
தொல்பொருள்துறை மட்டுமில்லாமல், திருகோணமலை மாவட்டத்தில், 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், போரின்போது மக்கள் உயிர் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்த வேளையில், அரசின் மற்றுமொரு அங்கமான வனத்துறை மக்கள் விவசாயம் செய்த 41,361 ஏக்கர் நிலத்தினை தமது மனம் போன போக்கில் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துக்கொண்டு, காணியினுள் செல்லவோ அல்லது விவசாயம் செய்யவோ விடாமல் தடுத்து வருகின்றது. இது மட்டுமல்லாமல் வனத்துறை எல்லைக் கற்களை இடாத பகுதிகளில் கூட மக்கள் தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையிடம் ஒப்புதலை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.
இதேபோன்று வனவிலங்கு துறையானது கால்நடை வளர்ப்பாளர்கள் பல தலைமுறைகளாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலங்களை, அவர்கள் போரின்போது இடம்பெயர்ந்த வேளையில், எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இவ்நிலங்களில் காட்டு விலங்குகள் மட்டுமே மேயலாம். வீட்டு விலங்குகள் மேய முடியாது என்று தடுத்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் போதிய உணவின்றி இன்னலுருகின்றன. எடுத்துக்காட்டாக ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 600 கால்நடை வளர்ப்பாளர்கள் தமது 28,000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றி இன்னல் படுகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பையே தமது வாழ்வாதாரமாக கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இத்தகைய சிக்கல் தம்பலகமம், குச்சவெளி,கிண்ணியா, மூதூர் மொறவெவ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படுகின்றது.
அதேபோன்று, அரசின் இன்னும் ஒரு அங்கமான துறைமுக அதிகார சபையானது, திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 11 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய 5,572 ஏக்கர் நிலத்தினை கையப்படுத்தி வைத்திருக்கின்றது. இப்பகுதிக்குள் வாழும் 763 குடும்பங்கள் தமது குடியிருப்பு காணிகளில் எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது இருப்பது மட்டுமின்றி, விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத சூழலும் காணப்படுகின்றது என்பது குறிப்பபிடத்தக்கது.
இலங்கை அரசு உணவு உற்பத்தியை பெருக்குமாறு கூறுகின்ற அதேவேளை அரசின் அங்கங்களான தொல்பொருள்த்துறை, வனத்துறை, வனவிலங்குத்துறை, துறைமுக அதிகாரசபை முதலியன விவசாய நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் உணவு உற்பத்தினை குறைத்தும் வருகின்றது என்பது நகைப்பிற்குரிய விடயமாக உள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் மட்டுமன்றி, முற்றும் துறந்த பிக்குகளும் மண்ணாசை கொண்டு குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 2,172 ஏக்கர் நிலத்தினை பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் வருகின்றார்கள்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி தொல்பொருள்த்துறை, வனத்துறை வனவிலங்குத்துறை, துறைமுக அதிகார சபை, புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து, மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும், அதன்வழி நெல் உள்ளிட்ட உணவு உற்பத்தியினை பெருக்கவும் ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.