பெரியார் குறித்து சீமான் சர்ச்சைப் பேச்சு, கொந்தளித்த தி.க.வினர் – பாஜகவின் பி டீம் என குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் குறித்து பெரியார் பேசியதாக, அவமதிக்கும் வகையிலான கருத்துகளை சீமான் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
அவரின் சர்ச்சை கருத்து குறித்து வியாழக்கிழமை அன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் சீமான். பெண்களை அவமதிக்கும் வகையில் பெரியார் பேசினார் என்று கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்று கேள்வி எழுப்பியபோது, “அரசு மற்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது போன்று பெரியாரின் புத்தகத்தை நாட்டுடமையாக்குங்கள். அதில் உள்ளது ஆதாரங்கள்,” என்று குறிப்பிட்டார்.
பெரியார் தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் பல கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டி பேசிய சீமான், “பெரியார் தமிழ் மொழியை இப்படிப் பேசிவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தியலை இதே மொழியில்தான் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்,” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், வள்ளலாரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார் பெரியார் என்று கேள்வியை எழுப்பியுள்ளார். பிறகு அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாகப் பேசுவது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
முன்பு பெரியாரை தன்னுடைய தாத்தா என்று கூறியது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம் கேட்ட போது, “முன்பு பெரியார் பற்றிய தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தற்போது தொடர்ச்சியாகப் படித்து வரும்போது எனக்கு அந்தத் தெளிவு கிடைத்துள்ளது” என்றும் கூறியுள்ளார் சீமான்.
போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை (ஜனவரி 9), தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கூட்டமாக வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதுவையிலும் நாம் தமிழர் கட்சியின் கொடியைப் பறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமானின் பேச்சைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புதுவை காவல்துறை கைது செய்துள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் கூறியதாக பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பியதற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையரிடம் தெரிவித்தனர். சென்னை மட்டுமின்றி, தஞ்சாவூர், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
‘சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய திராவிடர் கழக வட்டாரங்கள், “சீமானின் கருத்து குறித்து அதிகம் விவாதிக்க ஒன்றும் இல்லை. அவரின் பேச்சுகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இந்த வழக்குகளை எதிர்கொள்ளட்டும்,” என்றும் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன், “தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. முன்பு திராவிடம் குறித்து அதிகமாக அவர் விமர்சனம் செய்து வந்தார். ஆனால் அவரின் சமீபத்திய பேச்சுகள் மிகவும் முகம் சுளிக்க வைக்கின்றன,” என்றார்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினர், தங்களால் இயன்ற அளவு பெரியாருக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை என்ற காரணத்தால் தற்போது சீமானை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேற்கொண்டு பேசிய அவர், “விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிமுகமான பிறகு, சீமானின் ஆதரவும், வாக்கு வங்கியில் சரிவும் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால், இங்கு அரசியல்மயமாக்கப்படாத வாக்காளர்களைத் தன்னுடைய கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்,” என்று கூறினார்.
“சீமானின் கருத்துகள் அனைத்தும், சமூகத்திற்கு எதிரானது. அவருடைய பாணியில் அவருக்கு பதில் அளிக்க இயலாது. ஆனால் இதற்கு சட்டரீதியாக நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என்றும் சுபகுணராஜன் குறிப்பிட்டார்.
ஜனவரி 8ஆம் தேதியன்று வெளியிட்ட அந்தப் பதிவில், பேசாத ஒன்றைப் பேசியதாக சீமான் சொல்வது கண்டிக்கத்தக்கது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீமான் அவர்கள் நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், “பொதுவெளியில் பேசும்போது சிந்தித்துப் பேசுங்கள். வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியாரை இழிவுப்படுத்தும் விதத்தில் சீமான் பேசிய பேச்சு அநாகரிகமானது. முகம் சுளிக்கும் வகையில் பேசி இருப்பது வேதனையளிக்கிறது,” என்று லயோலா மணி தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு