அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளர் ராஜி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை காவல் ஆணையர் அருண் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை தண்ணீர் கேன் விற்பனை (சப்ளை) செய்யும் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட்டில் புகார் அளித்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயரை புகாரிலிருந்து நீக்கக் கோரி காவல் ஆய்வாளர் ராஜி உள்ளிட்ட போலீஸார், அவர்களை தரக்குறைவாக பேசியதோடு, தாக்கவும் செய்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், சிறுமி போலீஸாரிடம் அளித்த வாக்குமூல ஆடியோவும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அதேபோல, தனது மகளுக்கும், தங்களுக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி சிறுமியின் தாயாரும் தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனையடுத்து, சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்ததோடு, தமிழகத்தில் பணியாற்றும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சிறுமி பாலியல் வழக்கில் 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அதிமுகவைச் சேர்ந்த தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 103 வட்டச் செயலாளர் சுதாகர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ததன் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
சிறுமி வன்கொடுமை வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜியையும் போலீஸார் கைது செய்தனர். இவர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க பணம் பெற்றதோடு, புகார்தாரர் தரப்பினரைத் தாக்கியதாகவும் எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரையும் வரும் 21-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜியை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவிட்டார்.