துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம்: புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு ஏன்?
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில், விதிகளை உருவாக்கி, அதற்கான வரைவை வெளியிட்டிருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி). இதற்கு தமிழ்நாடு அரசும் பல அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த வரைவு விதிமுறைகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கட்கிழமையன்று (ஜன. 06) வெளியிட்டார்.
இந்த வரைவு விதிமுறைகளில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான மூன்று நபர் தேடல் மற்றும் தேர்வுக் குழுவை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக வேந்தருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனைச் செயல்படுத்தாத பல்கலைக்கழங்கள் யுஜிசியின் திட்டங்களில் பங்குபெற முடியாது என்றும் பட்டப் படிப்புகளை வழங்க முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, கருத்துத் தெரிவிக்க பல்கலைக்கழகங்களுக்கும் பொதுமக்களுக்கும் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது இதுபோன்ற தேடல் மற்றும் தேர்வுக் குழுவை மாநில அரசுகள்தான் அமைத்துவருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநர்களுடன் மோதல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
“துணைவேந்தர் பதவிக்கான தேர்வு குறித்து அகில இந்திய அளவில் செய்தித் தாள்களிலும் பொது அறிவிப்புகள் மூலமும் அறிவிக்க வேண்டும். தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் தேடல் மூலமோ, அழைப்புகள் மூலமோ விண்ணப்பங்கள் கோரப்படலாம் என்கிறது இந்த புதிய விதிமுறை.
இந்தத் தேடல் குழுவின் தலைவர் வேந்தரால் நியமிக்கப்படுவார். யுஜிசி தலைவரின் சார்பில் ஒருவர், செனட், சிண்டிகேட் போன்ற பல்கலைக்கழக உயர்மட்டக் குழுக்களின் சார்பில் ஒருவர் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவையெல்லாவற்றையும்விட, துணை வேந்தர்களுக்கான தகுதியை வரையறுக்கும்போது, தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுக் கொள்கை, பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க கல்வித் தகுதியைக் கொண்ட மூத்த அதிகாரிகளும் இதற்கு தகுதி பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு கண்டனம்
இந்தப் புதிய விதிமுறைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது, கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் என்பது போன்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். பா.ஜ.க. அரசின் இந்த எதேச்சதிகார முடிவு அதிகாரக் குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும், பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
“தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிகளவில் கொண்டுள்ள தமிழ்நாடு, தமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதால், தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யு.ஜி.சி. வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் இந்த வரம்புமீறிய செயலை ஏற்கமுடியாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். “இதற்கு எதிராக, சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு முன்னெடுக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு இந்திய மாணவர் சங்கமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது “அதிகாரத்தை மையப்படுத்தி, பல்கலைக்கழகங்களை கார்ப்பரேட் மயமாக்கும்” முயற்சி என, அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, துணைவேந்தர் தேர்வுக்கான குழுவை அமைக்கும்போது அந்தக் குழுவில் வேந்தரின் சார்பில் நியமிக்கப்படும் ஒருவரை மாநில அரசே நியமித்து வந்தது. ஆனால், பல மாநிலங்களில் ஆளுநர்கள் தாங்களே உறுப்பினர்களை நியமிக்க ஆரம்பித்ததால், மாநில அரசுகளுடன் மோதல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என். ரவி வந்த பிறகு, இந்த விவகாரம் மாநில அரசுடனான மோதலாக மாறியது.
இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டில் மாநில அரசு இது தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை வேந்தர்களுக்குப் பதிலாக மாநில அரசே நியமிக்கும் என அந்தச் சட்டம் கூறியது.
இந்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது பேசிய மு.க. ஸ்டாலின், “கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாதது, உயர்கல்வியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்துவந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது மக்களாட்சித் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
மாநில அரசுகள் எதிர்ப்பு
கேரள மாநிலத்திலும் இதுபோல, துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கேரள முன்னாள் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சொல்லும் அளவுக்கு இந்த விவகாரம் முற்றியது.
இதையடுத்து, பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்டத்தை அம்மாநில சட்டமன்றம் 2022ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றியது. வேந்தர்களை முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ள குழு தேர்வு செய்யுமென அந்தச் சட்டம் கூறியது. இதேபோன்ற சட்டங்களை, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களும் இயற்றின.
2013ஆம் ஆண்டின் யுஜிசி விதிகளின்படி, தேடல் மற்றும் தேர்வு கமிட்டிகள் அந்தந்த பல்கலைக்கழகச் சட்டங்களின்படி உருவாக்கப்படும். பொதுவாக, தமிழக பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் தேடுதல் குழுக்களில் அரசின் பிரதிநிதி ஒருவர், வேந்தரின் பிரதிநிதி ஒருவர், செனட் – சிண்டிகேட்டின் பிரதிநிதி ஒருவர் என நியமிக்கப்படுவார்கள்.
இவர்கள் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், முன்னாள் துணைவேந்தர் ஒருவர் என இருப்பார்கள். 2018ஆம் ஆண்டில், யுஜிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அந்த விதிமுறைகளில், யுஜிசியின் சார்பில் ஒருவரும் தேர்வுக் குழுவில் இடம் பெற வேண்டுமெனக் கூறியது.
அந்தத் தருணத்தில்தான் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அவர் வேந்தருக்கான பிரதிநிதியை தானே நியமிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு ஆளுநராக வந்த ஆர்.என். ரவியும் இதனைத் தொடர்ந்தார்.
முன்னாள் வேந்தர்கள் கருத்து
“தமிழ்நாட்டில் 29 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் யார் முதலீடு செய்திருக்கிறார்களோ, அவர்கள்தான் வேந்தர்களாகவே இருக்கிறார்கள். அதேபோல, மத்தியப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசுதான் குடியரசுத் தலைவருக்கான பிரதிநிதியை நியமித்து, துணைவேந்தர் நியமனங்களைச் செய்கிறது.
அப்படியிருக்கும்போது, மாநிலங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்காக செலவு செய்யும் அந்தந்த மாநில அரசுகளுக்குப் பதிலாக, ஆளுநர்கள் வேந்தர்களாக இருந்து, தம் விருப்பப்படி துணைவேந்தர்களைத் தேர்வு செய்வார்கள் என்பது எப்படி சரியாக இருக்கும்?,” எனக் கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி.
இதுபோன்ற விதிமுறைகள் கல்வி மத்தியப் பட்டியலின் கீழ் இருப்பதைப்போல மாற்றுகின்றன; அது ஏற்கத்தக்கதல்ல என்கிறார் கல்வியாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி.
“பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமையுடையவை. அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ளவை. யுஜிசி இதுபோன்ற விதிகளை உருவாக்குவதால், அது கிட்டத்தட்ட மத்திய அரசின் பட்டியலுக்கே வந்ததுபோல ஆகிவிட்டது.
இந்தியாவில் கல்வியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்வதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை என்கிறார்கள். ஆனால், கல்வியில் முன்னேறிய நாடுகளில், அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு முழுமையான தன்னாட்சி உரிமை தரப்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் அப்படித்தான் இருக்கிறது. அதனால்தான் அவை கல்வியில் முன்னேறிய நாடுகளாக இருக்கின்றன” என்கிறார் வசந்திதேவி.
இந்த நாடுகளில் இந்தியாவைப் போல கலாசார, மொழி, பிராந்திய வேறுபாடுகள் கிடையாது எனக்கூறும் வசந்திதேவி, இருந்தபோதும் தன்னாட்சி உரிமை தருகிறார்கள் என்று கூறினார்.
“வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மத்திய அரசை விடுங்கள், மாநிலங்களே தலையிட முடியாது. இங்கே எல்லாவற்றிலும் மத்திய அரசு தலையிடுகிறது. இது மிகமிக மோசமானது” என்கிறார் வசந்திதேவி.
ஆனால், இப்போதுள்ள விதிமுறையை மிகவும் எதிர்மறையாக பார்க்கத் தேவையில்லை என்கிறார் ராமசாமி. “காரணம், ஒரு பிரதிநிதியை வேந்தர்தான் நியமிப்பார் என இருக்கிறது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஆளுநர்களை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் முயற்சியில் இருக்கிறது. அவ்வாறு நடக்கும்போது மாநில அரசுக்கு இந்த விதி சாதகமாக இருக்கும். இப்போதைக்கு இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும்.
அதற்கு ஆளுநருடன் அமர்ந்து பேசி, ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், இதில் பாதிக்கப்படப் போவது மாணவர்களாகத்தான் இருப்பார்கள்” என்கிறார் அவர்.
இந்த புதிய வரைவு விதிமுறைகள் குறித்து, பிப்ரவரி 5ஆம் தேதிவரை கருத்துகளைப் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு