பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவைக்கு என்ன இடம்? எத்தனை மதிப்பெண்கள்?

பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களுக்கான பாதுகாப்பான சிறு நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது கோவை

இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 09) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறு நகரங்களுக்கான பட்டியலில் கோவை முதலிடம் பிடித்துள்ளது.

மொத்தமாக, 8 தமிழக நகரங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பணியிட கலாசார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் எனும் ஆராய்ச்சி முடிவுகளை புதன்கிழமை வெளியிட்டது.

சமூக உள்ளடக்க மதிப்பெண், தொழில் துறை உள்ளடக்க மதிப்பெண், மக்கள் அனுபவ மதிப்பெண் ஆகிய 3 குறியீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள் வாரியான மதிப்பீட்டில் கேரளம் 20.89 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், தெலங்கானா 20.57 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் 19.93 புள்ளிடளுடன் மூன்றாம் இடத்திலும், 19.38 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உள்ளன.

நகரங்கள் வாரியான மதிப்பீட்டில் குருகிராம் 10க்கு 7.68 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. பெரிய நகரங்களில் மும்பை 7.60 மதிப்பெண்ணும், பெங்களூரு 7.54 மதிப்பெண்ணும், சென்னை 7.08 மதிப்பெண்ணும் பெற்றுள்ளன என்று ‘தினமணி’ நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு நகரங்களுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளது கோவை மாவட்டம். 7.75 மதிப்பெண்களுடன் பெண்களுக்கான சிறந்த சிறு நகரங்கள் பட்டியலில் கோவை முதலிடம் பிடித்துள்ளது என்றும் ‘தினமணி’ செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஹெச்.எம்.பி.வி. தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சை இல்லை – மா.சு

ஹெச்.எம்.பி.வி. தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சையோ, மருந்தோ இல்லை, 3 முதல் 6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என்று தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று ஹெ.ச்.எம்.பி. வைரஸ் தொற்று குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.

“இந்த வைரஸ் தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 2001ம் ஆண்டிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. குளிர்காலம், இளவேனில் இந்த வைரஸ் பரவக்கூடும். இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள். இந்த வைரஸ் பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாட்கள் வரை ஆகும். இணைநோய் உள்ளவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் ஓரளவு தீவிரத்தன்மை அடைந்து நுரையீரல் பாதிக்கப்படும்.

2024-ல் 714 பேருக்கு பரிசோதனை செய்ததில் பலருக்கு இந்த நோய் பாதிப்பு இருந்தது, தமிழகத்தில் சென்னை, சேலத்தில் இருவர் நோயால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது. சுவாசநோய் தொற்று தானாகவே குணமடையும் என்பதால் தான் மருத்துவ வல்லுநர்கள் இதற்காக சிறப்பு சிகிச்சைகள் தேவை இல்லை என்கின்றனர்,” என்று சுப்பிரமணியன் பேசிய உரையை சுட்டிக்காட்டியுள்ளது ‘இந்து தமிழ் திசை’.

ஹெச்.எம்.பி.வி. தொற்று

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ஹெச்.எம்.பி.வி. தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சையோ, மருந்தோ இல்லை. 3 முதல் 6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும்’

ஜராவா பழங்குடியினருக்கு வாக்குரிமை

அந்தமானில் வசிக்கும் மிக பழமையான பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜராவா சமூகத்தினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 19 உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது, என இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“அந்தமான்-நிக்கோபார் நிர்வாகத்தின் கடினமான உழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது. அவர்களின் அன்றாட வாழ்வில் தலையீடு குறைவாக இருக்கும் வகையில் வாக்காளர் சேர்க்கை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களின் உரிமைகள் பற்றிய புரிதல் அவர்களுக்கு அதிகபட்சமாகவே உள்ளது.” என, தலைமை செயலாளர் சந்திர பூஷண் குமார் தெரிவித்தார். இதன்பின் அவர், ஜராவா சமூகத்தினருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

ஜராவா பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய ஜனநாயக பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய சாதனை என்று அந்தமான் மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா பிடிஐ செய்தி முகமையிடம் கூறியதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஜராவா பழங்குடியினருக்கு வாக்குரிமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜராவா சமூகத்தினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு 19 உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து கூட்டுக்குழுவின் முதல் ஆலோசனை

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா சமீபத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

அதன் முதல் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 8ம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியினர் இந்த மசோதா இந்திய அரசியல் அமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று விவாதம் செய்ததாகவும், தேசத்தின் நலன் கருதியே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

“ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் ஏற்படும் செலவீனங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். மேலும் 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலமாக தேர்தல் செலவீனங்கள் குறைக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்து பேசிய எம்.பி. வி.டி. ஷர்மா, மக்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலமையில் உருவாக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளையும் மேற்கோள்காட்டினார். கூட்டுக்குழுவில் இடம் பெற்றிருந்த பாஜக உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்ற காரணத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதாடியுள்ளனர் என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு