வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டிக்கெட்டுகளை வாங்க மக்கள் முண்டியடித்துச் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 நபர்கள் உயிரிழந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று, புதன்கிழமை, டிக்கெட்டுகள் வாங்க பக்தர்கள் காத்திருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் உடனடியாக அங்கே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அன்று தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி கோவிலில் உள்ள 8 இடங்களில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலையன்று அதிகளவில் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
திருப்பதியில் உள்ள ராமநாயுடு பள்ளி மற்றும் பைராகிபெட்டெடாவில் அமைந்துள்ள விஷ்ணு நிவாசம் கேந்திராஸ் ஆகிய இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் ரூயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரபாபு நாயுடு அறிக்கை
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்கெட்டுகள் வாங்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளிடம் பேசிய அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட மற்றும் தேவஸ்தான நிர்வாகிகளிடம் தொடர்ச்சியாக இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை பெற்று வருவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அனிதா, திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பா ராயுடுவை தொடர்புகொண்டு இந்த அசம்பாவிதத்திற்கான காரணங்களை விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரங்கல் தெரிவித்த ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அரசு விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான, சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
விசாரணை நடத்த வேண்டும்
ஆந்திரப் பிரதேசத்தின் பாஜக தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரி, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
டிக்கெட்டுகள் வாங்குவதற்காக அதிகமாக மக்கள் கூடிய இடத்தில் ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகளை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு