ஊழலை அம்பலப்படுத்தியதால் பத்திரிகையாளர் கொலையா? சத்தீஸ்கரில் செய்தியாளர்கள் சந்திக்கும் சவால்கள்

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், Bastar Junction / YouTube

படக்குறிப்பு, முகேஷ் சந்திரகர் ‘என்டிடிவி’ எனும் செய்தி நிறுவனத்தில் பகுதி நேர பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்தார்.
  • எழுதியவர், அலோக் பிரகாஷ் மேனெக்வின்
  • பதவி, ராய்ப்பூரில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக

சத்தீஸ்கரில் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகரின் படுகொலைச் சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்தும், பஸ்தர் பகுதியில் உள்ள பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் விளக்குகிறது இத்தொகுப்பு.

பிஜப்பூர் தொலைக்காட்சி செய்தியாளர் முகேஷ் சந்திரகர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுரேஷ் சந்திரகரை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஜனவரி 5ம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்தது.

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய், ‘குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள், விரைவில் விசாரணை முடிக்கப்படும்’ என்றும் கூறினார்.

முகேஷ் சந்திரகர் என்ன ஆனார்?

33 வயதான முகேஷ் சந்திரகர் ஜனவரி ஒன்றாம் தேதி இரவு தனது வீட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர் அவரது உடல் ஒப்பந்தக்காரர் சுரேஷ் சந்திரகர் தனது தொழிலாளர்களுக்காக கட்டிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 3 ஆம் தேதி சுரேஷ் சந்திரகரின் இரண்டு சகோதரர்களான ரிதேஷ் சந்திரகர் மற்றும் தினேஷ் சந்திரகர் மற்றும் மேற்பார்வையாளர் மகேந்திர ராம்தேகே ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான சுரேஷ் சந்திரகர் தலைமறைவானார்.

முகேஷ் சந்திரகர் ‘என்டிடிவி’ எனும் செய்தி நிறுவனத்தில் பகுதி நேர பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்தார்.

இது தவிர, யூடியூப்பில் பிரபலமான ‘பஸ்தர் ஜங்ஷன்’ என்ற சேனலையும் அவர் நடத்தி வந்தார். அதில் அவர் பஸ்தர் நகரத்தின் செய்திகளை ஒளிபரப்பினார்.

பஸ்தரில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அல்லது கிராம மக்களை விடுவிப்பதில் முகேஷ் பலமுறை முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிஜப்பூர் காவல்துறை தெரிவித்தது. ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த சனிக்கிழமையன்று, முகேஷ் சந்திரகர் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒப்பந்ததாரரின் வங்கிக் கணக்கை போலீஸார் முடக்கினர்.

மறுபுறம், சட்டத்திற்குப் புறம்பாக கட்டிடத் தொழிலாளர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட இருப்பிடங்களும் கிடங்குகளும் இடிக்கப்பட்டன.

முகேஷ் சந்திரகர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை பத்திரிகையாளர் கவுன்சில் முன்னெடுத்து, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

“செய்திகளின் படி, முகேஷ் ஊழலை அம்பலப்படுத்தினார், அதன் பிறகு அவர் கொடூரமாக கொல்லப்பட்டார்” என்று தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவரது குடும்பத்துக்கு வேலை வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

காவல்துறை என்ன கூறுகிறது ?

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

படக்குறிப்பு, முகேஷ் சந்திரகர் என்டிடிவியில் செய்தியாளராக பணியாற்றினார்.

முன்னதாக, பஸ்தர் நகர காவல்துறை அதிகாரி ஐஜி சுந்தர்ராஜ் பி கூறும்போது, ​​”பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்குச் சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து முகேஷ் சந்திரகரின் உடலை மீட்டோம். இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகரின் கைபேசி மற்றும் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

படக்குறிப்பு, 33 வயதான முகேஷ் சந்திரகர் ஜனவரி ஒன்றாம் தேதி இரவு தனது வீட்டில் இருந்து காணாமல் போனார்.

ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் தனது தொழிலாளர்களுக்காக கட்டிய குடியிருப்பு வளாகத்தில் போலீசார் தேடுதலை தொடங்கினர். புதிதாக போடப்பட்ட கான்கிரீட் அடுக்கு ஒன்றை அவர்கள் கவனித்தனர்.

அது பழைய கழிவுநீர் தொட்டி என்பதும், இரண்டு நாட்களுக்கு முன் கான்கிரீட் போட்டு மூடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், காவல்துறை அதிகாரிகள் அந்த கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதியை உடைத்து பார்த்தபோது, ​​தண்ணீருக்குள் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சடலமாக கிடந்தார். அவரது உடலில் பல ஆழமான காயங்கள் இருந்தன.

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

படக்குறிப்பு, கழிவுநீர் தொட்டியில் இருந்து முகேஷ் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் கொலையால் பாஜக-காங்கிரஸ் மோதல்

இந்தச் சம்பவத்திற்கு பிறகு காங்கிரஸும் பாஜகவும் ஒருவரையொருவர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள சுரேஷ் சந்திரகர் காங்கிரசில் இணைந்ததால், அக்கட்சியை பாஜக சாடுகிறது.

மறுபுறம் மாநிலத்தில் சட்ட ம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறி ஆளும் பாஜகவை காங்கிரஸ் விமர்சிக்கிறது.

“பிஜப்பூரைச் சேர்ந்த இளம் மற்றும் அர்ப்பணிப்புள்ள பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் கொலை செய்யப்பட்ட மிகவும் சோகமான செய்தி, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது”என்று சமூக ஊடகங்களில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய் பதிவிட்டுள்ளார்.

“முகேஷின் மறைவு பத்திரிகை உலகிற்கும், சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குற்றவாளியை எந்த சூழ்நிலையிலும் விடமாட்டோம், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வோம்”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

படக்குறிப்பு, சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் முகேஷ் சந்திரகர் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சியான காங்கிரஸ் குறி வைத்துள்ளது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ்.

இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் தீபக் பைஜ் கூறுகையில், “பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் தங்களது பணிக்காக உயிரை பணயம் வைக்கின்றனர். முகேஷ் சந்திரகரின் உடல் கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது பயங்கரமானது. இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது. “என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள சத்தீஸ்கர் பாஜக தனது சமூக வலைதளப் பதிவில், “அவர் ஒரு ஒப்பந்தக்காரரா அல்லது காங்கிரஸ் ஒப்பந்தக் கொலையாளியா!! பிஜப்பூரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் கொலையில் முக்கிய குற்றவாளியான ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தீபக் பைஜுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிந்ததே” என்று பதிவிட்டுள்ளது.

“காங்கிரஸ் கட்சியின் பட்டியல் பிரிவின் மாநிலச் செயலாளராக சுரேஷ் சந்திரகரை தீபக் பைஜ் நியமித்துள்ளார். அன்பு என்று கூறப்படும் காங்கிரஸின் கடையில் இருந்து பல்வேறு குற்றங்கள் விற்கப்படுகின்றன. விற்பனையாளர்கள் அனைவரும் குற்றவாளிகள். இதற்கு ராகுல் காந்தி பதில் சொல்லுங்கள்.”என்றும் பாஜக குறிப்பிட்டுள்ளது.

எப்போது முதல் முகேஷைக் காணவில்லை?

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

படக்குறிப்பு, செய்தியாளராகப் பணியாற்றிய முகேஷ் சந்திரகர்

புதன்கிழமை (ஜனவரி 1, 2025) மாலை முகேஷ் வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது மூத்த சகோதரரும் தொலைக்காட்சி ஊடகவியலாளருமான யுகேஷ் சந்திரகர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், மறுநாள் காலையி தான் இதுபற்றி குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. ஆரம்பத்தில் தனது சகோதரர் ஏதாவது செய்திக்காக அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று யுகேஷ் நினைத்தார். ஆனால், அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் கவலையடைந்தனர்.

யுகேஷின் கூறுகையில், “நானும் முகேஷும் தனித்தனியாக வாழ்கிறோம். புத்தாண்டின் முதல் நாள் மாலை முகேஷை கடைசியாக சந்தித்தேன். மறுநாள் காலை வீட்டில் முகேஷ் இல்லை. அவரது தொலைபேசியும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. எனவே அவரது நண்பர்களிடம் இது குறித்து விசாரிக்கத் தொடங்கினேன் . ஆனால் அவரை எங்கும் காணவில்லை, பிறகு காவல்துறையில் புகார் அளித்தேன்” என்று தெரிவித்தார்.

ஒப்பந்ததாரரான சுரேஷ் சந்திரகர், ஜனவரி ஒன்றாம் தேதி மாலை தனது சகோதரரைச் சந்திக்கவிருந்ததாக யுகேஷ் கூறுகிறார். சுரேஷ் சந்திரகரும் அவரது நெருங்கிய உறவினர் ஆவார்.

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

படக்குறிப்பு, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர்

‘ஊழல்’ செய்தி வெளியிட்டதால் கொலையா?

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் சாலை அமைப்பதில் ஊழல் நடந்திருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்த செய்திக்கு பிறகு, அந்த சாலை கட்டுமான ஒப்பந்தம் குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

“ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் அமைத்த சாலையில் ஊழல் நடந்ததாக என்டிடிவியில் ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில அரசு இதுகுறித்து விசாரணையை அறிவித்தது. எனது சகோதரர் காணாமல் போன பிறகு, நாங்கள் அவரது மடிக்கணினியை சோதனை செய்தோம். ஒப்பந்ததாரர்களான தினேஷ் சந்திரகர், சுரேஷ் சந்திரகர் மற்றும் ரித்தேஷ் சந்திரகர் ஆகியோரின் வேலையாட்களுக்காக கட்டப்பட்ட வளாகத்தில் அவரது தொலைபேசி கடைசியாக இருந்ததாக காட்டியது. அது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது”என்று யுகேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

காவல்துறையிடம் அளித்த புகாரில், ஒப்பந்ததாரர்கள் தினேஷ் சந்திரகர், சுரேஷ் சந்திரகர் மற்றும் ரித்தேஷ் சந்திரகர் ஆகியோர் முகேஷுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்ற அச்சத்தையும் யுகேஷ் வெளிப்படுத்தியிருந்தார்.

யார் இந்த சுரேஷ் சந்திரகர்?

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், aloka putul

படக்குறிப்பு, சுரேஷ் சந்திரகர் திருமணத்தின் போது

முகேஷ் சந்திரகரின் உடலை, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்குச் சொந்தமான கழிவுநீர் தொட்டியில் இருந்து காவல்துறை மீட்டெடுத்தது.

ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர், பஸ்தரில் அரசு கட்டுமான பணிகள் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய ஒப்பந்ததாரர்களில் ஒருவர்.

இவர் சத்தீஸ்கர் மாநிலக் காங்கிரஸின் பட்டியல் பிரிவின் மாநில துணைத் தலைவராகவும் உள்ளார்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட ‘சல்வா ஜூடும்’ பிரசாரத்தில் ஈடுபட்ட சுரேஷ் சந்திரகர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கடந்த சில ஆண்டுகளில், மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கான அரசாங்க ஒப்பந்தம் எடுத்து பஸ்தரின் முக்கிய ஒப்பந்ததாரர்களில் ஒருவராக மாறினார்.

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

படக்குறிப்பு, சுரேஷ் சந்திரகர் அரச முறையில் திருமணம் செய்து கொண்டு பிரபலமானார்.

40 வயதான சுரேஷ் சந்திரகர் 2021-ஆம் ஆண்டு, டிசம்பர் 23 ம் தேதி அன்று, 73 சதவீத பழங்குடிகள் வாழும் பிஜப்பூரில் அரச முறைப்படி திருமணம் செய்து கொண்டதன் மூலம் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தார். அவர் தனது மனைவியின் வீட்டிற்கு செல்ல ஒரு தனி ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருந்தார்.

இது தவிர, பிஜப்பூர் போன்ற ஒரு இடத்தில், ரஷ்ய நடனக் கலைஞர்கள் குழுவை அவர் தனது திருமண விழாவில் நடனமாடவும் பாடவும் அழைத்தார்.

திருமணம் முடிந்த மறுநாள் பிஜப்புரில் உள்ள மைதானத்தில் விருந்து நடத்தினார். இதுபோன்ற அரச முறையிலான திருமணம் இதற்கு முன்பு பஸ்தரில் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பஸ்தரில் பத்திரிகையாளர்களுக்கு உள்ள சவால்கள்

பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சத்தீஸ்கரில் பத்திரிக்கையாளர்கள் காவல்துறை மற்றும் மாவோயிஸ்டுகள் தரப்பிடம் இருந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய், “பஸ்தர் போன்ற மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் பத்திரிகைத் துறையில் அதிகமாக சவால்கள் உள்ளன. அரசாங்கம் இதை முழுமையாக அறிந்திருக்கிறது மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக உள்ளது.”என்று பிபிசியிடம் குறிப்பிட்டார்.

அதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.

தெற்கு பஸ்தரில் உள்ள குமியாபால் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் பழங்குடி பத்திரிகையாளர் மங்கள் குஞ்சம், முகேஷ் சந்திரகர் கொலை செய்யப்பட்ட சம்பவம், மற்ற பத்திரிகையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக கருதுகிறார்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘நியூட்டன்’ படத்தில் பத்திரிகையாளராக நடித்த மங்கள் குஞ்சம் பிபிசியிடம் பேசுகையில், “இதற்கு முன்பும் மிரட்டல்கள் வந்துள்ளன. சில காலமாக இரும்பு உற்பத்தியுடன் தொடர்புடையவர்கள் என்னை எப்படி கட்டுப்படுத்துவது என்று பேசி வருகிறார்கள். ஆனால் முகேஷ் சந்திரகர் கொலைக்குப் பிறகு, என் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்பட ஆரம்பித்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், சத்தீஸ்கரில் பஸ்தர் முதல் சுர்குஜா பகுதி வரை, கிராமப்புறங்களில் பணிபுரியும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு நாளிதழ்கள் அல்லது தொலைக்காட்சி சேனல்கள் நியமனக் கடிதம் வழங்கப்படுவதில்லை அல்லது அவர்களின் பணிக்கு ஈடாக நிலையான சம்பளம் எதுவும் பெற முடிவதுமில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால், ஊடக நிறுவனங்கள் பொதுவாக அதிலிருந்து விலகியே இருக்கும்.

இதுகுறித்து ராய்ப்பூர் பிரஸ் கிளப் தலைவர் பிரபுல் தாக்கூர் கூறுகையில், “பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம். ஆனால், பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் கோப்புகளைத் தாண்டி இன்னும் சட்டமாக்கப்படவில்லை.

இந்த பாதுகாப்புச் சட்டம் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வராது, ஆனால் குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்ற கிடைக்கும்” எனக் கூறுகிறார்.

இருப்பினும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக சட்டசபை சபாநாயகரும், மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் தெரிவித்துள்ளார்.

மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய், “பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள முரண்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அது திட்டமிட்டபடி செயல்படுத்தப்படவில்லை. அரசியலமைப்பு விதிகளின் வரம்புகளுக்குள் எந்த வகையான முன்னேற்றம் தேவைப்பட்டாலும், அவற்றை செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக கலந்தாலோசித்த பிறகு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.”என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

வெளிப்படையாகக் கூறவேண்டுமென்றால், பஸ்தர் மற்றும் சத்தீஸ்கர் பத்திரிகையாளர்கள் சவால்களை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் இன்னும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.