தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பினர் முறைப்பாடளித்ததை தொடர்ந்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்திரகரன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தில் இருந்து வீசப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த 20 நாய்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் விலங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
31 நாய்களில் 20 நாய்கள் இறந்து கிடந்ததாகவும், காயமடைந்த 11 நாய்கள் விலங்குகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு நாகோலில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.