அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், செவ்வாய்க்கிழமை (7) இரவு கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது.
ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.
ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து,மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீ பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் – கவுண்டியில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் கூறுகையில்,
“காட்டுத்தீயில் பல கட்டமைப்புகள் அழிந்துள்ளன. ஆனால் சரியான எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 13 ஆயிரம் கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
புதன்கிழமை (8) இரவு, காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீ இன்னும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது