கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல் – பதிலடி கொடுத்த ட்ரூடோ

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறிய டிரம்ப் – பதிலடி கொடுத்த ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், ஜெஸ்ஸிகா மர்ஃபி
  • பதவி, பிபிசி நியூஸ்

கனடாவை அமெரிக்காவின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சமீபத்திய வாரங்களில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்துப் பலமுறை வலியுறுத்தி வருகிறார்.

ஃப்ளோரிடாவில் தனது மாரா லாகோ இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “செயற்கையாக வரையப்பட்ட கோடுகளை நீங்களே நீக்கினால், அது உங்கள் தேசியப் பாதுகாப்புக்கு நல்ல விஷயமாக அமையும்,” என்று கூறினார்.

அப்போது “கனடா, அமெரிக்கா இரண்டும் ஒன்றிணைவது நிலைமையை மேம்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் கனடா பகிர்ந்து கொண்டுள்ள எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க அந்நாடு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கனடா பொருட்களுக்கு “கணிசமான வரி” விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இந்த அச்சுறுத்தல் அரசியல் ரீதியாக சவாலான சூழலில் கனடா இருக்கும் நிலையில் வந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்

கடந்த திங்கள் கிழமையன்று, ட்ரூடோ தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருப்பினும், மார்ச் மாத இறுதியில் ஆளும் லிபரல் கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வரை அவர் பிரதமராக நீடிப்பார். இந்நிலையில், மார்ச் 24-ஆம் தேதி வரை கனடா நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதியன்று பதவியேற்ற பிறகு, அவர் அச்சுறுத்துவதைப் போல் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டால், அது கனடாவின் பொருளாதாரத்தைக் கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கனடா அரசின் புள்ளிவிவரங்கள்படி, 2023-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் தினசரி கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்கின்றன.

டிரம்ப் அச்சுறுத்துவதைப் போலச் செய்தால், பதிலடியாக எதிர் வரிகளை விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக ட்ரூடோ அரசு கூறியுள்ளது.

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறிய டிரம்ப் – பதிலடி கொடுத்த ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Reuters

செவ்வாய்க் கிழமையன்று பிரதமர் ட்ரூடோ தனது எக்ஸ் பதிவில், “பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில், எங்கள் இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களும் மக்கள் சமூகங்களும் ஒருவருக்கொருவர் பயனடைந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

மாரா லாகோவில் டிரம்ப் நடத்திய நீண்ட செய்தியாளர் சந்திப்பின்போது, மெக்சிகோ மற்றும் கனடா எல்லைகளைக் கடந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து அவர் முன்பு வெளிப்படுத்திய கவலை மீண்டும் வலியுறுத்தினார்.

கனடாவை போலவே, மெக்சிகோவுக்கும் 25% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்க தரவுகளின்படி, அமெரிக்கா – கனடா எல்லையில் கைப்பற்றப்பட்ட ஃபென்டனைல் என்ற போதைப்பொருளின் அளவு மெக்சிகோவில் கைப்பற்றப்பட்டதைவிட மிகக் குறைவு.

நாடு கடந்து மேற்கொள்ளப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் குறிவைக்க, பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் ஒரு “கூட்டுப் படையை” உருவாக்குவது உள்பட எல்லையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதாக கனடா உறுதியளித்துள்ளது.

கனடா ராணுவம் குறித்து டிரம்ப் கவலை

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறிய டிரம்ப் – பதிலடி கொடுத்த ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார். ஆனால், கனடாவின் ராணுவ செலவுகள் குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தினார்.

“அவர்களிடம் இருப்பது மிகச்சிறிய ராணுவம். அவர்கள் நமது ராணுவத்தை நம்பியுள்ளார்கள். அது பரவாயில்லை. ஆனால், அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும். இது மிகவும் நியாயமற்றது,” என்று அவர் தெரிவித்தார்.

நேட்டோ உறுப்பினர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கனடாவின் ராணுவ செலவுகள் குறைந்து வருவதால், அதை அதிகரிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

கனடாவின் பாதுகாப்பு பட்ஜெட் தற்போது 27 பில்லியன் கனடிய டாலராக உள்ளது. இருப்பினும் ட்ரூடோ அரசு 2030க்குள் ராணுவ செலவினத்தை கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர் கனடிய டாலர்களாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளது.

சாத்தியமான வரி உயர்வை நிறுத்த அமெரிக்காவை இணங்க வைக்கும் முயற்சியாக பல கனடிய மாகாண ஆளுநர்கள் விரைவில் வாஷிங்டன் டிசிக்கு பயணிக்க உள்ளனர் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆளுநர் டேவிட் எபி செவ்வாய்க் கிழமையன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

டிரம்புக்கு ஒண்டேரியோ ஆளுநர் பதிலடி

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறிய டிரம்ப் – பதிலடி கொடுத்த ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒண்டேரியோவின் ஆளுநர் டக் ஃபோர்டு

திங்கள் கிழமையன்று, கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒண்டேரியோவின் ஆளுநரான டக் ஃபோர்டு, ட்ரூடோ தனது ஆட்சிக்காலத்தின் மீதமுள்ள நாட்களை டிரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக மாகாண நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும், “ஆளுநர்களே இப்போது நாட்டை வழிநடத்துகிறார்கள்,” என்றும் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஒண்டேரியோ மாகாணம் அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. கனடாவில் மிகவும் ஒருங்கிணைந்த வாகனத் தொழிலின் மையமாக இந்த மாகாணம் இருக்கிறது. ஒண்டேரியோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் 2023இல் 350 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

“நாம் ஒன்றாக வேலை செய்வோம். ஒரு வலுவான வர்த்தக உறவை உருவாக்குவோம். இருப்பதை பலவீனப்படுத்த வேண்டாம்” என்று டக் ஃபோர்டு கூறினார்.

வரி விதிப்பு அச்சுறுத்தலை டிரம்ப் நிர்வாகம் செயல்படுத்தினால் “கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், எரிசக்தி உள்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பொருளாதார உறவுகளை மேற்கோள் காட்டினார்.

அமெரிக்கா ”மின்சாரத்திற்கு ஒண்டேரியோவை சார்ந்துள்ளது. அங்குள்ள 15 லட்சம் வீடுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் நாங்கள்தான் மின்சாரம் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு டக் ஃபோர்டு எதிர்வினை ஆற்றினார்.

அப்போது, “நான் அவருக்கு வேறொரு வழியைக் கூறுகிறேன். அமெரிக்க மாகாணங்களான அலாஸ்கா, மினியாபோலிஸ், மினசோட்டாவை ஒரே நேரத்தில் கனடா வாங்கிக் கொண்டால் என்ன?” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு