ஓயோ: மீரட்டில் திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அறை கிடைக்காதா? – புதிய விதி கூறுவது என்ன?

OYO Rooms, அறைகள்

பட மூலாதாரம், OYO

  • எழுதியவர், கோட்டேரு ஸ்ராவனி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ஹோட்டல் ரூம்களை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கும் நிறுவனமான ஓயோ (OYO), தனது கூட்டாளி ஹோட்டல்களுக்கு புதிய செக்-இன் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கொள்கையின்படி, ஓயோ அறையை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பும் ஜோடிகள், முன்பதிவு செய்யும் போதும், அறையில் வந்து தங்கும்போதும் (Check-in.) தங்களுடைய திருமண உறவை உறுதி செய்யும் வகையில் உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும். இது தற்போது உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

திருமணமாகாத ஜோடிகளை தங்கள் விடுதியில் தங்க அனுமதிக்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்ய ஓயோ அதன் கூட்டாளி ஹோட்டல்களுக்கு விட்டு விட்டது. அதாவது திருமணமாகாத ஜோடிகளின் தங்கும் அறைகள் முன்பதிவு குறித்து அந்தந்த விடுதிகள் இனி முடிவு செய்யும்.

மீரட்டில் கிடைக்கும் எதிர்வினையை பொறுத்து மற்ற நகரங்களிலும் இந்த கொள்கைகளை விரிவுபடுத்தப்படலாம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

மீரட் நகரில் உள்ள ஓயோ கூட்டாளி ஹோட்டல்களில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதி இல்லை என்பது அவர்களின் விதிமுறைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்

ஓயோ நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்பதிவு கொள்கையின்படி, தங்கும் விடுதில் முன்பதிவு செய்யும்போது, அறையை முன்பதிவு செய்பவரின் வயது குறைந்தது 18 ஆக இருக்க வேண்டும். அறையில் வந்து தங்கும்போது, அறையை முன்பதிவு செய்தவர்கள் தற்போது செல்லுபடியாகும் புகைப்படம் கொண்ட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை மட்டுமே அடையாள சான்றிதழ்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

பான் கார்டில் முகவரி இல்லாததால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. அறையில் தங்க வரும்போது அடையாள அட்டையின் அசல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒருவர் தங்கும்விடுதியை அடைந்ததும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ஓயோ நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

இயற்கை சீற்றங்கள், தீவிரவாத தாக்குதல்கள், வேறு ஏதேனும் கட்டாய நடவடிக்கை காரணமாக ஓயோ விடுதிகளில் அறைகள் கிடைக்காதபோது, முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்களுக்கு முன்பதிவு தொகை திருப்பித் தரப்படாது.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

OYO Rooms, அறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தங்கும் அறைகள் எப்போது நிராகரிக்கப்படுகின்றன?

சில ஹோட்டல்களில் திருமணமாகாத ஜோடிகளின் முன்பதிவுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று ஓயோ தனது கொள்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், அடையாள அட்டைகள் இல்லாவிட்டாலும் முன்பதிவுகள் நிராகரிக்கப்படும்.

“சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் அரசு வழங்கிய அடையாள அட்டையைக் காட்ட முடியாதபோது, சிறுவர்கள் யாருடைய துணை இல்லாமல் தனியாக வரும்போது, அறையில் தங்கவரும் ஒரு நபரின் நடத்தை ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், அவர்களது முன்பதிவினை ரத்து செய்யும் அதிகாரம் ஹோட்டலுக்கு உண்டு” என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

‘ஓயோவின் முடிவு வரவேற்கத்தக்கது’

“தற்போது ஓயோ நிறுவனம் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இந்த முடிவு ஓயோவின் கண்ணியத்தை மேம்படுத்தும்” என்று விஜயவாடா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.ரமணா கூறுகிறார்.

“ஹோட்டல்களில் தங்குவதற்கான கொள்கைகளில் சிறிய மாற்றங்கள் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ளன. ஆனால், அனைவரும் ஆதாரை கட்டாயமாக எடுத்துக்கொள்கிறார்கள். வயதைக் கருத்தில் கொண்டு முன்பதிவு மற்றும் அறையில் தங்க அனுமதிக்கப்படுகிறது. ஜோடிகள் திருமண சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று இருப்பதிலும் சில பிரச்னை இருக்கின்றது. ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலானோர் திருமண சான்றிதழை பெற்றுக்கொள்வதில்லை. அந்த நேரத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண புகைப்படம் அல்லது சான்றிதழை ஃபோனில் எடுத்துச் செல்வது நல்லது” என்கிறார் ரமணா

“முன்பு, யார் வேண்டுமனாலும் அறையில் தங்க அனுமதி வழங்கப்பட்டது. இதை கேட்க ஹோட்டலுக்கு உரிமை இல்லை. ஆனால் இப்போது இதுபோல் இருக்காது என்று ஓயோ செய்தி அனுப்பியுள்ளது. ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இது குறித்து கேட்க உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் அறையில் தங்க வருபவருக்கு எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓயோ அறை என்று வரும்போது குடும்பங்கள் மத்தியில் இது குறித்து இருக்கும் தவறான எண்ணத்தை அகற்ற இந்த முடிவு உதவும் என்று நான் நம்புகிறேன்”, என்று ரமணா கூறினார்.

“மருத்துவமனைக்கு வருபவர்கள் அல்லது கிராமங்களிலிருந்து வேலை நேர்காணலுக்கு வருபவர்கள் பெரிய ஹோட்டல்களுக்கு சென்று தங்க முடியாது. அதனால் அவர்கள் சிறிய ஹோட்டல்களில் தங்குவர். அந்த நேரத்தில், அவர்கள் சில சமயங்களில் தம்பதிகளாக இருந்தாலும், அவர்களின் திருமணத்தை நிரூபிக்கும் வகையில் உரிய சான்றிதழ்களை கொண்டு வர மாட்டார்கள். அப்போது, அவர்களை தங்க அனுமதி அளிக்காவிட்டால் பிரச்னை ஏற்படலாம்”, என்று ஒரு வாடிக்கையாளர் கூறுகிறார்.

OYO Rooms, அறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

‘கொள்கைகளின்படி தங்க அனுமதி வழங்கப்படும்’

“ஓயோ ஹோட்டல்கள் காதலர்களுக்கானது என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால் எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டே தங்க அனுமதி வழங்கப்படுகிறது. உள்ளூர் காவல் நிலைய விதிகளின்படியே ஓயோ தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன.

ஓயோ என்பது என்பது சாமானிய மக்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தங்குமிடத்தை வழங்கும் ஒரு தளமாகும். இது வந்தவுடன், குறைந்த கட்டணத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. யாருக்கும் எந்த அசௌகரியமும் இல்லாமல் அனைவருக்கும் தங்குமிடம் வழங்குவதே ஓயோ நிறுவனத்தின் குறிக்கோள் ” என்று ஓயோ ஊழியர் ஒருவர் கூறினார்.

“ஒரு காலத்தில் ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்யும் போது எதில் ஒருவரின் ஆதார் அட்டையை மட்டுமே எடுத்துச் செல்வார்கள். ஆனால் இப்போது, அறையில் தங்க வரும் அனைவரின் அல்லது குறைந்தது இரண்டு பேரின் ஆதார் அட்டைகளை சமர்ப்பிக்குமாறு கேட்கிறார்கள். பொதுவாக, கோயில்களுக்கு அருகில் ஹோட்டல்கள் அமைந்திருப்பதால், திருமணமான தம்பதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஹோட்டல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டுள்ளன, “என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சுற்றுலா முகவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.