இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் எந்தவொரு திணைக்களமும் இஸ்ரேலிய பிரஜைகளால் மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.
எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று நிலைமையை அவதானித்துள்ளோம். அத்தகைய அனுமதி இதுவரை வழங்கப்படாததால், இந்த நடவடிக்கைகள் அனுமதியின்றி நடைபெறுகின்றன என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
அதேநேரம், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
எவ்வாறெனினும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கான மத மற்றும் கலாச்சார மையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.
இதுபோன்ற இடங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.