ஆஸ்கர் பட்டியலில் ‘கங்குவா’ திரைப்படம் இடம் பிடித்தது எப்படி?

கங்குவா, ஆஸ்கர்

பட மூலாதாரம், Studio Green

  • எழுதியவர், அம்ரிதா பிரசாத் & சுபகுணம் க
  • பதவி, பிபிசி தமிழ்

2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்த விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வெளியானது.

சிறந்த படம் (Best Picture) என்ற பிரிவின் கீழ் உலகின் பல்வேறு மொழிகளில் இருந்தும் 323 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. இந்த பட்டியலில், தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கங்குவா’ திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இருந்து தேர்வாகும் 10 படங்கள் மட்டும் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும்.

கங்குவா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகுமா? ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம் பெறுவதற்கான வரையறை என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மார்ச் 2-ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திரைத்துறையில் உள்ள சிறந்த படைப்புகளையும், கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஹாலிவுட் வழங்கும் உயரிய விருதுகளில் ஆஸ்கர் ஒன்று. இந்த ஆஸ்கர் விருதினை அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு வழங்குகிறது.

வரும் மார்ச் 2ஆம் தேதி 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசை, சிறந்த இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இதில் சிறந்த படம் (Best Picture) என்ற பிரிவின் கீழ் இந்திய மொழிகளை சேர்ந்த 7 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை கங்குவா, ஆடு ஜீவிதம், சந்தோஷ், ஸ்வதந்திர வீர் சவார்க்கர், ஆல் வி இமேஜின் அஸ் எ லைட், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் மற்றும் புதுல்.

கங்குவா, ஆஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்கர் பட்டியலில் கங்குவா எவ்வாறு இடம்பிடித்தது?

கடந்த நவம்பர் மாதம் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோரின் நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியானது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. இசை, ஒளிப்பதிவு, ஒப்பனை, விஎஃப்எக்ஸ் என்று பல்வேறு பிரிவுகளில் இந்த படம் பாராட்டப்பட்டாலும், படத்தின் திரைக்கதை குறித்த எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்த படம் தற்போது ஆஸ்கர் கதவுகளை தட்டியுள்ளது. சிறந்த படம் என்ற பிரிவின் கீழ் கங்குவா திரைப்படமும் போட்டியில் இருக்கிறது. அத்துடன், மேலும் 322 படங்கள் என மொத்தம் 323 படங்கள் போட்டியில் இருக்கின்றன.

இதில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம் பெறும் 10 படங்களை அகாடமி உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். அதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 8-ம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைபெறும்.

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியல் ஜனவரி 17-ஆம் தேதி வெளியாகும்.

“ஒரு விளம்பர உத்தி”

ஆஸ்கர் போட்டியில் கங்குவா படத்தை இடம்பெறச் செய்திருப்பதை ஒரு விளம்பர உத்தி என்று குறிப்பிடுகிறார் திரைப்பட விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆஷாமீரா ஐயப்பன்.

“இதன் மூலம், ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக அல்லது படைப்பாளியாகத் தனது கலைப் படைப்பைப் பரவலாகக் கொண்டு செல்ல அவர்கள் முயலக்கூடும். தென்னிந்திய நடிகர்களில் அகாடமியில் உறுப்பினரான முதல் நடிகர் சூர்யாதான். அதனை படத்துக்காகக் பயன்படுத்திக் கொள்ளவும் அவர் நினைத்திருக்கலாம்,” என்றும் ஆஷாமீரா தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து சூர்யா அதில் உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அகாடமியில் நடிகர், இயக்குநர் எனப் பல பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொரு பிரிவினரும் அந்தந்தப் பிரிவில் சிறந்த விருதுக்கு வாக்களிப்பார்கள். உதாரணமாக, நடிகர்கள் பிரிவில் அகாடமி உறுப்பினர்களாக இருப்போர் சிறந்த நடிகர்களுக்கு வாக்களிப்பார்கள். அதேபோல் இயக்குநர் பிரிவில் உறுப்பினர்களாக இருப்போர் சிறந்த இயக்குநர் பிரிவுக்கு வாக்களிப்பார்கள். இப்படியாக அந்தந்த பிரிவுகளில் நாமினேஷன் நடைபெறும். அதில் நாமினேட் செய்யப்படும் படங்கள்தான் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும்,” என்று ஆஷாமீரா தெரிவித்தார்.

“ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெற சில தகுதிகள் இருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்தால் போதுமானது. அதிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் படங்கள்தான் கவனம் ஈர்க்கும்,” என்று திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் கூறுகிறார்.

கங்குவா, ஆஸ்கர்

பட மூலாதாரம், ashameeraaiyappan

படக்குறிப்பு, திரைப்பட விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆஷாமீரா ஐயப்பன்

ஆஸ்கர் விருதுக்கு படங்கள் தேர்வாவது எப்படி?

ஆஸ்கர் விருதுக்காக, படத்தின் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர் உரிய ஆவணங்களுடன் ஆஸ்கர் படிவத்தை (OSF) நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. இதுவே ஒரு முக்கியமான படியாகும். இதன் மூலம் ஒரு திரைப்படத்தின் முழு விவரம் அகாடமி குழுவுக்கு கிடைக்கிறது.

சிறந்த படம் (Best Picture) என்ற பிரிவின் கீழ் ஒரு திரைப்படம் போட்டியிட, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் சயின்ஸ் சில வரையறைகளை வகுத்துள்ளது.

  • ஒரு திரைப்படத்தின் மொத்த நீளம் (Running time) 40 நிமிடங்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • 2024ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வெளியான ஒரு திரைப்படம் அமெரிக்காவின் ஆறு பெரிய நகரங்களில் (லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், பே ஏரியா எனப்படும் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மற்றும் அட்லாண்டா) குறைந்தது ஒரு திரையரங்கில் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் திரையிடப்பட்டிருக்க வேண்டும்.
  • அகாடமி பிரதிநிதித்துவம் மற்றும் உள்ளடக்கம் தர நிலைகளில் (Academy’s Representation and Inclusion Standards (RAISE))குறைந்தது இரண்டு தர நிலைகளை அந்த திரைப்படம் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த தர நிலைகள், திரைப்படத்தின் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்பதை உறுதி செய்கின்றது.
  • ஒரு திரைப்படம் வெளியான 45 நாட்களுக்குள் அமெரிக்காவின் முதல் 50 பெரிய சினிமா சந்தைகளில் குறைந்தது பத்து சந்தைகளில் திரையிடப்பட்டிருக்க வேண்டும்.

இதுபோன்ற வரையறைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுவிடாது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினர்கள் தத்தமது பிரிவுகளில் வாக்களித்து விருதுக்குரியவர்களை தேர்வு செய்வர்.

கங்குவா, ஆஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்கர் விருதுக்குரிய படம் எவ்வாறு தேர்வாகும்?

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம் பெறும் 10 படங்களில் இருந்து சிறந்த படத்தை தேர்வு செய்ய ‘விருப்ப வாக்கு’ (Preferential Balloting) முறை கடைபிடிக்கப்படும்.

10 படங்களையும் அகாடமி உறுப்பினர்கள் பார்த்துவிட்டு, அவற்றை ஒன்று முதல் பத்து வரை தரவரிசைப்படுத்துவார்கள்.

அதில் எந்த திரைப்படம் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுகிறதோ அந்த படம் சிறந்த படமாக ஆஸ்கர் விருது பெறும்.

வாக்களிப்பில் எந்த ஒரு திரைப்படமும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், ‘முதல் முன்னுரிமை’ வாக்குகளை குறைவாகப் பெற்ற திரைப்படம் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அந்த படத்திற்கு முதல் முன்னுரிமை அளித்த உறுப்பினர்கள் இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.

ஏதாவது ஒரு படம் குறைந்தபட்சம் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறும் வரை இந்த செயல்முறை தொடரும்.

இறுதியாக, 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் படம், சிறந்த படம் என்ற பிரிவின் கீழ் ஆஸ்கர் விருது பெறும்.

கங்குவா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான 10 படங்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்பது வரும் ஜனவரி 17-ம் தேதி தெரியவரும். ஒருவேளை அந்த பட்டியலில் கங்குவா இடம் பெற்றால், ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பது மார்ச் 2-ஆம் தேதி தெரியும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.