- எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம்
- பதவி, பிபிசிக்காக
-
கடனில்லா வாழ்க்கையே அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் கடன் இல்லாமல் வாழ்வது இன்றைய கால கட்டத்தில் சாத்தியமற்றது.
வீட்டுக் கடனாகவோ, வாகனக் கடனாகவோ, தனிநபர் கடனாகவோ… அல்லது குறைந்தபட்சம் கிரெடிட் கார்டாகவோ… கடன் என்பது ஏதோ ஒரு வகையில் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது.
தனிநபர்கள் மட்டுமல்ல, மாநிலங்களும் நாடுகளும் கடன் வாங்கி பொருளாதாரத்தை நடத்துகின்றன. நாடுகளுக்கு `கிரெடிட் ரேட்டிங்’ (கடன் மதிப்பீடு) என்பதை வைத்து மதிப்பிடப்படுவது போல், தனி நபருக்கு `கிரெடிட் ஸ்கோர்’ மதிப்பீடு அவசியம்.
`கிரெடிட் ஸ்கோர்’ என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் நம்மிடம் உள்ளதா என்பதை குறிக்கும் மதிப்பீடு. ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அவ்வளவு கடனை பெறும் தகுதியை அவர் பெற்றிருக்கிறார் என்று அர்த்தம்.
புதிதாக பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இதுவரை கடன் வாங்காதவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் கணக்கிட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு கடன் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
அப்படியெனில், புதிதாக கடன் வாங்கத் திட்டமிடுபவர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது? எதிர்காலத்தில் பெரிய கடன் (வீட்டுக்கடன், வணிகக் கடன்) எடுக்கத் திட்டமிடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கியம்?
டிரான்ஸ் யூனியன் சிபில் (TransUnion CIBIL), எக்ஸ்பீரியன் (Experian), மற்றும் சிஆர்ஐஎஃப் (CRIF ), ஈக்விஃபாக்ஸ் (Equifax) போன்ற நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் கடன் பணியகங்களாக (credit bureaus) செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் செயல்படுகின்றன.
ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ கடனை வழங்குவதா என்பதை இந்த கிரெடிட் பீரோக்கள் முடிவு செய்வதில்லை. இவை கிரெடிட் ஸ்கோரை மட்டுமே கணக்கிடுகின்றன.
அவர்கள் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை எடுத்து, அவற்றை ஆய்வு செய்து, தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் நிதி சார்ந்த சுயவிவரங்களை உருவாக்குகிறார்கள்.
கடனை திரும்ப செலுத்தும் முறைகள் (கடன்கள் எவ்வாறு திரும்ப செலுத்தப்படுகின்றன) மற்றும் கடன் வாங்கும் முறைகள் (எவ்வளவு அடிக்கடி கடன்கள் எடுக்கப்படுகின்றன) போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த தரவுகள் உருவாக்கப்படுகின்றன.
கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் வழங்கலாமா வேண்டாமா, மற்றும் அவ்வாறு செய்தால் ஏற்படும் அபாயத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் ரேட்டிங்கை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன.
நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் பல நன்மைகள் உள்ளன. அதனால்தான், நாம் கடன் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் கிரெடிட் ஸ்கோரைப் பராமரிப்பது முக்கியம்.
உங்களுக்கு நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ கடன் தேவை என்றால், நல்ல கிரெடிட் ஸ்கோர் இல்லாவிடில் நீங்கள் சிரமப்படுவீர்கள்.
உங்களிடம் சிறந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால்..
- கிரெடிட் கார்டுகள் எளிதாகக் கிடைக்கும்
- குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கும்
- வங்கிகளும் நிதி நிறுவனங்களும் போட்டியிட்டு சிறந்த சலுகைகளுடன் கடன்களை வழங்கும்.
- பெரிய கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்
- கடன் வாங்கும் நேரத்தில் செயலாக்க கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படவோ அல்லது வட்டி விகிதங்களில் சிறிய மாற்றங்கள் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது.
ஒரே இரவில் கிரெடிட் ஸ்கோரை உருவாக்க முடியாது. இது ஒரு செயல்முறை. இந்த ரேட்டிங் புள்ளிவிவரங்கள் மற்றும் பெரிய தரவு பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
எதற்காக கடன் வாங்குகிறோம், எவ்வளவு வாங்குகிறோம், எப்படி திருப்பிச் செலுத்துகிறோம், வருமானம் என்ன, செலவுகள் என்ன, எத்தனை முறை நாம் கடன் பெற முயற்ச்சித்துள்ளோம் எனப் பல காரணிகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது.
1. முதலில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கவும்!
நீங்கள் இதுவரை கடன் பெற்றதில்லை எனில் , வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே எந்த வங்கியாவது சிறிய தொகைக்கு கிரெடிட் கார்டை வழங்குமா என்று பாருங்கள். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் ஒரு வங்கியில் சம்பளக் கணக்கை வைத்திருக்கும் அல்லவா, அந்த வங்கியைத் தொடர்பு கொள்ளவும். அதாவது நீங்கள் எந்த வங்கியின் வாயிலாக ஊதியம் பெறுகிறீர்களோ அந்த வங்கியில் கிரெடிட் கார்டுக்கு முயற்சிக்கலாம்.
அல்லது, ஒரு குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்புத்தொகையாக கொடுத்து, அதற்கு இணையாக ஒரு செக்யூர்டு கிரெடிட் கார்டை (secured credit card) பெறுங்கள். இதனால் வங்கிகளுக்கு அதிக ஆபத்து இல்லை. ஏனெனில் கார்டு வரம்பு நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்தின் அளவு மட்டுமே. உதாரணமாக, உங்களிடம் நிலையான வைப்புத்தொகை கணக்கில் ரூ. 50,000 இருந்தால், அதே தொகையின் கிரெடிட் கார்டு வரம்பைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் டெபாசிட்டுகளுக்கு வட்டியும் கிடைக்கும்.
இந்தக் கார்டை வழக்கமான பணம் செலுத்தும் இடங்களில் பயன்படுத்துங்கள். மாத தவணைகளாக (EMI) மாற்ற வேண்டாம். அந்த கார்டின் சிறந்த பயன்பாடு நாளடைவில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை உருவாக்கும்.
2. `கிரெடிட் பில்டர்’ கடன்கள்
ஐசிஐசிஐ வங்கி போன்ற பெரிய வங்கிகள் இத்தகைய கடன்களை வழங்குகின்றன. இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த அல்லது அதிகரிக்க உதவும்.
இது கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்களுக்கு அதனை மேம்படுத்துவதற்கான ஒரு வழி. அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கிரெடிட் பில்டர் (Credit Builder) திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு `இன்ஸ்டா பிளாட்டினம் கிரெடிட் கார்டு’ வழங்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கியின் இணையதளம் கூறுகிறது. இருப்பினும், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
கிரெடிட் பில்டர் கடன் வாங்க விரும்புவோர் ஒருவேளை ஏற்கனவே ஏதேனும் வங்கி கடன் வைத்திருந்தால் , அவற்றை முதலில் செலுத்த வேண்டும்.
இந்த கிரெடிட் பில்டர் கடனை பெற, ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் குறிப்பிட்ட தொகை கடனாக வழங்கப்படும். அதில் இன்ஸ்டா பிளாட்டினம் அட்டை வழங்கப்படும். அதாவது இதற்கு முன்பு பார்த்த செக்யூர்டு கிரெடிட் கார்டை போலவே இதிலும் தொகை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். வட்டி விகிதமும் குறைவு.
இந்த கிரெடிட் பில்டர் முறை என்பது நமது சொந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதற்கு ஈடாக ஒரு தொகையை கடன் வாங்குவதாகும். நம்மிடம் நல்ல பணம் இருந்தாலும் கிரெடிட் ஸ்கோர் இல்லை என்றால் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி கிடைக்காது. மேலும் நீங்கள் ஆரம்பத்தில் வங்கியில் செலுத்திய தொகையை எடுக்க முடியாது. கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை இந்தப் பணத்தை உங்கள் டெபாசிட்டில் இருந்து எடுக்க முடியாது.
எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில்…இந்த கிரெடிட் பில்டர் திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.50,000 டெபாசிட் செய்ததாக வைத்துக் கொள்வோம். அதில், உங்களுக்கு மொத்தம் ரூ. 50,000 கடனாக வங்கி கொடுக்கும். இப்போது நீங்கள் வட்டியுடன் மாதாந்திர தவணைகளை செலுத்த வேண்டும்.
உங்களின் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டும் செலுத்தப்படும் வரை இந்த ரூ.50,000 தொகை விடுவிக்கப்படாது. நீங்கள் கடனை முழுமையாக செலுத்திய பிறகு உங்கள் பணம் விடுவிக்கப்படும்.
டாடா கேபிடல் போன்ற நிறுவனங்களும் இத்தகைய கடன்களை வழங்குகின்றன. இந்த முறையில் கடன் பெறுவதன் மூலம், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மெதுவாக அதிகரிக்கும். ஏனெனில் வங்கிகளும் இந்த தகவலை கிரெடிட் பணியகங்களுக்கு வழங்குகின்றன.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் கணிசமாகக் குறைந்து, நீங்கள் இனி கிரெடிட் கார்டை பெறத் தகுதிபெறவில்லை என்றால், இதுபோன்ற கிரெடிட் பில்டர் கடன்களை நீங்கள் பெற்று மீண்டும் உங்கள் கிரெடிட் பயணத்தைத் தொடங்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட பயனர் (Authorized User) – நீங்கள் ஒரு கிரெடிட் கார்டைப் பெற விரும்பினால், நிறுவனங்கள் வருமான ஆவணங்கள், சம்பள அறிக்கைகள் போன்றவற்றைச் சரிபார்க்கின்றன. இவை எதுவும் உங்களிடம் இல்லாவிட்டாலும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனர் அட்டையைப் பெறலாம்.
அதாவது, நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் உங்களுக்கு கிரெடிட் கார்டை வழங்குகின்றன. முதன்மை உறுப்பினர் உத்தரவாதத்தில்(primary member security) இந்த அட்டையைப் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் கார்டைப் பெற்றவுடன், உங்கள் செயல்பாடுகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் முறை ஆகியவை உங்கள் CIBIL ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எவ்வாறாயினும், நீங்கள் ஒருவருக்கு உத்தரவாதம் (surety) கொடுத்திருந்தால், அந்த நபர் சரியாக கட்டணத்தை செலுத்த தவறிவிட்டால் அது உங்களையும் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, ஒருவருக்கு உத்தரவாதம் வழங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இந்தக் கார்டைப் பயன்படுத்தி உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் தொடர்ந்து அதிகரிக்கும்.
3. சிறு கடன்கள்
இன்றைய காலகட்டத்தில் தனியார் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) சிறிய நுகர்வோர் கடன்களை வழங்குகின்றன. தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றிற்கு இவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிறுவனங்கள் சிறியளவிலான `ரிஸ்க்’ உடன் சிறுகடன்களையும் தருகின்றன. அவர்கள் பான் மற்றும் ஆதார் அடிப்படையில் கடன்களை வழங்குகிறார்கள், கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் அல்ல. இவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை மெதுவாக மேம்படுத்த உதவும்.
4. ‘இப்போது வாங்கி, பிறகு செலுத்தவும்’ (`Buy now, pay later’ )
இவையும் நுகர்வோர் கடன்கள் போன்றவை தான். நிறுவனங்கள் இத்தகைய `Buy now, pay later’ (BNPL) கடன்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு மிகச் சிறிய அளவில் வழங்குகின்றன. ஒரு பொருளை வாங்கும் போது மட்டுமே இந்த கடன்கள் கிடைக்கும்.
நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள நுகர்வோர் கடன்கள் மற்றும் இப்போது வாங்கும் கடன்கள் இரண்டுமே அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இவை நமது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், ஆனால் தேவையில்லாத சமயங்களில் கடன் பெற்றால், நாம் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டால், அதைத் திரும்பப் பெறுவதற்கு நீங்கள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
5. கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் காரணிகள்
கீழே உள்ள புள்ளிகள் ஒவ்வொன்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோரின் ஒரு பகுதியைக் கணக்கிடுகிறது. இதன் பொருள் ஒவ்வொரு புள்ளியும் கிரெடிட் பணியங்களால் கவனமாக பரிசீலிக்கப்படுகிறது.
- கட்டணத் தரவுகள் (Payment history) – 35 சதவீதம்
- கடன் பயன்பாடு (Credit utilization) – 30 சதவீதம்
- கிரெடிட் ஹிஸ்டரி நீளம்(Length of credit history) – 15 சதவீதம்
- கிரெடிட் மிக்ஸ் (Credit mix) – 10 சதவீதம்
- புதிய கடன் – 10 சதவீதம்
கிரெடிட் ஸ்கோர் என்பது மேலே குறிப்பிட்டபடி பிரிக்கப்பட்டு, அந்தந்த சதவீதங்களின் அடிப்படையில் இறுதியான மதிப்பீடு தீர்மானிக்கப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு கடன் வாங்கியுள்ளீர்கள், எதற்காக கடன் வாங்கியுள்ளீர்கள், உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை எவ்வளவு பயன்படுத்தியுள்ளீர்கள், எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் எவ்வளவு பாதுகாப்பற்றது, எத்தனை கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை எடைபோடுவதன் மூலம் உங்கள் ஸ்கோர் கட்டமைக்கப்படுகிறது.
இதில் முக்கிய காரணி உங்களில் பணம் செலுத்துதல் முறை ஆகும். ஏற்கனவே நீங்கள் பெற்றிருக்கும் கடனுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் மாத தவணை செலுத்தப்படுகிறதா இல்லையா என்பதுதான் முக்கிய அளவுகோல்.
குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்துவது கூட உங்கள் கட்டண தரவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் கடன் வரம்பில் 40 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நீங்கள் அதற்கு மேல் பயன்படுத்தினால், உங்கள் பயன்பாட்டு புள்ளிகள் (utilization points) மெதுவாக கரைந்துவிடும்.
நீங்கள் கடன் வாங்கத் தொடங்கி எவ்வளவு காலம் ஆகிறது, எத்தனை ஆண்டுகளாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு சரியாகத் திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்பதை உங்களது வங்கி தரவுகள் சொல்லிவிடும்.
கிரெடிட் மிக்ஸ் (credit mix) என்பது, வீடு மற்றும் வாகனங்கள் போன்ற பாதுகாப்பான கடன்களின் சதவீதத்தையும், கிரெடிட் கார்டுகள் போன்ற பாதுகாப்பற்ற கடன்களின் சதவீதத்தையும் குறிக்கிறது.
அடமானம் (mortgages) மூலம் பெறப்படும் வீடு, வாகனம் மற்றும் தங்கக் கடன்கள் குறைந்த அபாயகரமானவை. கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்குவது மிகவும் ஆபத்தானது.
கூடுதலாக, நீங்கள் எவ்வளவு விரைவாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் மற்றும் தனிநபர் கடனுக்காக வங்கிகளை எவ்வளவு முறை நாடுகிறீர்கள் என்பதும் உங்கள் ஸ்கோரை பாதிக்கிறது. உங்கள் கடன் தரவுகளை மதிப்பாய்வு செய்யும்படி கடன் வழங்குபவர்கள் உங்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். அதனால் அடிக்கடி வங்கி கடனுக்கு முயற்சிக்கக் கூடாது.
எனவே, கடன் தரவுகளை படிப்படியாக மேம்படுத்த மேலே உள்ள காரணிகளை ஒருவர் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இது ஒரே இரவில் நடக்காது. அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் வீட்டுக் கடன் போன்ற பெரிய கடனை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், கிரெடிட் ஸ்கோர் ஏதும் இல்லை என்றால் சிரமம்தான். அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நல்ல மதிப்பீட்டை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
(குறிப்பு: இது விழிப்புணர்வுக்காக மட்டுமே. முடிவெடுப்பதற்கு முன் நிதி நிபுணரை அணுகவும்)
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு