இலங்கையின் இராஜதந்திர சேவையில் பணியாற்றுவதற்காக உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி
அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வ நியமனங்கள் வழங்கப்பட்டன.
நியமனங்களைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஜனாதிபதியுடன் சுருக்கமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள்:
திருமதி ஆர்.எஸ். கான் அசார்ட், கத்தாருக்கான தூதுவர்
திரு. டபிள்யூ.ஜி.எஸ். பிரசன்னா, நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகர்.திருமதி. எஸ்.கே. குணசேகர, ரஷ்யாவுக்கான தூதுவர்
திரு. எல்.பி. ரத்நாயக்க, குவைத்துக்கான தூதுவர்.
திரு. ASK செனவிரத்ன, எகித்துக்கான தூதுவர்.
இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், அந்தந்த நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் அவர்களின் பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மீது ஜனாதிபதி திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், நாட்டின் சர்வதேச மதிப்பை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய ரீதியில் அதன் நலன்களை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
உத்தியோகபூர்வ வைபவத்தின் போது நியமனம் பெற்றவர்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி, அவர்களின் அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளிலும் இலங்கையை சாதகமாக பிரதிநிதித்துவப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்து அவர்களுக்கு சமமான நலன்புரி சேவைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் பணிபுரியும் மத்திய கிழக்கு, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற பிராந்தியங்களில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் நலனில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் அபிலாஷைகளை அடிக்கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி திஸாநாயக்க, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இராஜதந்திரிகளை வலியுறுத்தினார்.
இந்த இலக்குகளை அடைவது தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பொறுப்பு என்று அவர் கூறினார். இந்த முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் பூரண ஆதரவை இராஜதந்திரிகளுக்கு உறுதியளித்த ஜனாதிபதி, இம்முயற்சிகளின் முன்னேற்றம் தொடர்பிலான தொடர் கலந்துரையாடலுக்கான திட்டங்களையும் அறிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகள் இலங்கை வெளிநாட்டு சேவையில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள தொழில் இராஜதந்திரிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் நிபுணத்துவம், திறன் மற்றும் இலங்கையின் உலகளாவிய ஈடுபாடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் திறன் ஆகியவற்றிற்காக அங்கீகரிக்கப்பட்டனர்.
புதிய நியமனம் பெற்றவர்கள், இலங்கையின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசத்தின் இராஜதந்திர முயற்சிகளுக்குப் பங்களித்து, விரைவில் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்பார்கள் என்று PMD தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.