வடக்கு – கிழக்கில் பொலிஸ் வெற்றிடங்களுக்கு தமிழரை நியமிப்பதற்கு தீர்மானம் ! on Tuesday, January 07, 2025
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளிலுள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படுமென, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
நாட்டின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடுமின்றி பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போலல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்குப் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது பொலிஸாருக்கு ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக வடக்கு – கிழக்கிலிருந்து அதிகளவான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.