பேஸ்புக் காதலியைத் தேடி எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்ற இந்திய இளைஞர் – என்ன ஆனார்?

இந்தியா - பாகிஸ்தான் எல்லை கடந்த காதல்

பட மூலாதாரம், PUNJAB POLICE

படக்குறிப்பு, பாதல் பாகிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் தொடங்கிய நட்பு, பாகிஸ்தானின் மண்டி பஹவுதீனில் உள்ள சிறையில் தன்னை தள்ளும் என்று உத்தரபிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வசிக்கும் பாதல் பாபு நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

தையல் வேலை செய்ய குடும்ப உறுப்பினர்களிடம் அனுமதி கேட்டு நாக்லா கிட்காரி என்ற தனது கிராமத்திலிருந்து வெளியே வந்த பாதல், இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத பாகிஸ்தானில் உள்ள அந்த நகரத்தை எப்போது, ​​எந்த வழியில் அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நவம்பர் 1-ம் தேதி பாகிஸ்தான் எண் ஒன்றில் இருந்து இருந்து பெற்றோருக்கு போன் செய்து அவரைப் பற்றி தெரிவித்திருப்பது உறுதியானது.

இருபது வயதான பாதல் பாபு இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு அவசரமாக சென்றுவிட்டதால், எந்த அடையாள அட்டையையும் உடன் வைத்திருக்கவில்லை என்று கவலைப்படும் அவரது தாய், இந்த ஆவணத்தை உள்ளூர் ஊடகங்களில் காட்டி இந்திய அரசிடம் முறையிடுகிறார்.

ஒருவேளை தனது தாயை சமாதானம் செய்ய, பாகிஸ்தான் எண்ணிலிருந்து அழைத்து, தான் உண்மையில் துபாய் வந்துவிட்டதாக பாதல் ஆறுதல் கூறியிருக்கலாம். ஆனால் பாதல் தற்போது பாகிஸ்தானில் காவலில் உள்ளார்.

அவர் மீது மண்டி பஹவுதீன் நகரக் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர்.

அதன் படி, மோங் பகுதியில் உள்ள ரங்வாலி தொழிற்சாலைக்கு அருகில் இந்திய குடிமகன் ஒருவர் சட்டவிரோதமாக வசிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

முதல் தகவல் அறிக்கையின் படி, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞனை விசாரித்த போது, ​​அவரிடம் பாகிஸ்தானில் வாழ்வதற்கான அனுமதி அல்லது விசா இல்லை என்பது தெரியவந்தது.

காவலில் எடுக்கப்பட்ட போது, ​​குற்றம்சாட்டப்பட்ட பாதல், இந்தியாவின் அலிகர் மாவட்டத்தில் உள்ள நாக்லா கிட்கார் பகுதியைச் சேர்ந்தவர் என்ற தகவலை கூறினார்.

சதர் மண்டி பஹாவுதீன் காவல் நிலையத்தின் அதிகாரியான , அஞ்சும் ஷாஜாத், பாதலின் கைது குறித்து பிபிசியின் ஷெஹ்சாத் மாலிக்கிடம் பேசினார்.

அதேநேரத்தில் டெல்லியில் உள்ள பிபிசி நிருபர் ஷகீல் அக்தர் உள்ளூர் பத்திரிகையாளரின் உதவியுடன் பாதலின் குடும்பத்தினர் குறித்து அறிய முயன்றார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லை கடந்த காதல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பேஸ்புக் தோழியைத் தேடி பாகிஸ்தான் சென்றது எப்படி?

இந்தியா - பாகிஸ்தான் எல்லை கடந்த காதல்

பட மூலாதாரம், AJAY KUMAR

படக்குறிப்பு, பாகிஸ்தானில் உள்ள செல்வாக்கு மிக்க நபரின் வீட்டில் பாதல் தங்கியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிபிசியிடம் பேசிய அதிகாரி அஞ்சும் ஷாஜாத் கூறும் போது, பாதல் பாகிஸ்தானியப் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் நட்பு கொண்டதாகவும், அவர் அப்பெண்ணைச் சந்திக்க வந்ததாகவும் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ”அந்தப் பெண் மத நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தப் பெண்ணுடனான நட்பின் காரணமாக பாதல், மண்டி பஹாவுதீன் நகரை அடைந்தார்” என்று தெரிவித்தார்.

அஞ்சும் ஷாஜாத் தொடர்ந்து பேசுகையில், “பாதல் வெளி ஆள் என்பதால், இந்த நபர் நீண்ட காலமாக இங்கு இருக்கிறார், ஆனால் அவரை எங்களுக்குத் தெரியாது என்று மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்”என்று கூறினார்.

அந்தப் பகுதியில் உள்ள செல்வாக்கு மிக்க ஒருவரின் வீட்டில் பாதல் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

மண்டி பஹவுதீன், நாட்டின் எல்லையில் உள்ள நகரம் அல்ல. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் மத்தியில் இருக்கும் இந்த நகரத்திற்கு பாதல் எப்படி வந்தார் என்பதை பாகிஸ்தான் காவல்துறையினரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு பாதல் பாபுவை 14 நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

காவல்துறையின் கூற்றுப்படி, பாதல் பாகிஸ்தானுக்கு வந்ததற்கு காரணமான பெண் அல்லது அவரது குடும்பத்தினர் இந்த விசாரணையில் சேர்க்கப்படவில்லை.

‘அம்மா, நான் துபாய் வந்துவிட்டேன் ‘

இந்தியா - பாகிஸ்தான் எல்லை கடந்த காதல்

பட மூலாதாரம், AJAY KUMAR

படக்குறிப்பு, பாதல் தனது தாயாருக்கு போன் செய்து தான் துபாயில் இருப்பதாக கூறியுள்ளார்.

பாதலின் தந்தை கிரிபால் சிங், உள்ளூர் பத்திரிகையாளர் அஜய் குமாரிடம் பேசியபோது, “எங்கள் மகன் இங்கிருந்து டெல்லிக்கு வேலைக்குச் சென்றிருந்தான். அவன் தையல் வேலை செய்து வந்தான்” என்று கூறினார்.

“தீபாவளிக்கு 15 நாள் முன்பு எங்கோ சென்றுவிட்டான், யாருடன் சென்றான் என்பது எங்களுக்குத் தெரியாது.”என்று கூறினார்.

கிரிபால் சிங்கை ஒரு நாள் அழைத்து “அப்பா, நான் என் இடத்தை அடைந்துவிட்டேன், என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். என்னால் அழைக்க முடியாது. அம்மாவிடம் நான் ஒரு முறை பேச வேண்டும்” என்று பாதல் கூறியுள்ளார்.

“என்னிடம் தொலைபேசி இல்லை. என்னால் இப்போது அழைக்க முடியாது. நான் என்னுடைய நண்பரின் தொலைபேசியில் இருந்து பேசுகிறேன்” என்றும் பாதல் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பாதலுடன் பேசியதாகவும், அதன் பிறகு அவரால் தனது மகனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது தந்தை கூறினார்.

வாட்ஸ்ஆப் அழைப்பு குறித்து, உள்ளூர் பத்திரிகையாளர் அஜய்குமாருக்கு அவரது தந்தை தகவல் அளித்துள்ளார். கடந்த அக்டோபர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் பாகிஸ்தான் தொலைபேசி எண்ணில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததை அவரது வாட்ஸ்ஆப் அழைப்புகளில் காண இயலும்.

உள்ளூர் பத்திரிகையாளர் அஜய் குமாரிடம் பேசிய ​​பாதலின் தாயார், தீபாவளி தினத்தன்று அவருடன் கடைசியாக பேசியதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டது. அவர், “வீடியோ அழைப்பில் பேசும் போது, அம்மா, நான் துபாய்க்கு வந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

பணி நிமித்தமாக டெல்லி செல்லும் போது பாதல் அடையாள அட்டை எடுத்துச் செல்லவில்லை என்றும், அவரின் அடையாள அட்டை வீட்டில்தான் உள்ளது என்றும் அவரது தாயார் குறிப்பிட்டார்.

இந்தியா – பாகிஸ்தான் மக்களின் காதல் கதை

இந்தியா - பாகிஸ்தான் எல்லை கடந்த காதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு இடையேயான காதல் கதைகளுக்கு பல உதாரணங்கள் உள்ளன

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான சில காதல் கதைகள் ஒவ்வொரு நாளும் வெளிவருகின்றன.

சமூக வலைதளங்களால் ஏற்பட்டுள்ள காதல் கதைகளில் முதல் கதை இது மட்டுமல்ல.

இதற்கு முன்பும், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சமூக ஊடகங்களில் நண்பர்களாகி, பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பல சம்பவங்கள் நடந்துள்ளன.

2023-ம் ஆண்டு டெல்லிக்கு அருகே 27 வயது பாகிஸ்தான் பெண்ணை இந்திய காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு இந்திய குடிமகன் மற்றும் அவரது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக அவர் இந்தியாவில் வசித்து வந்தார்.

2019 ஆம் ஆண்டு கோவிட் ஊரடங்கின் போது பப்ஜி எனும் இணையதள விளையாட்டில் தான் சச்சினை சந்தித்ததாக விசாரணையின் போது அந்த பெண் காவல்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

பின்னர் அவர்கள் வாட்ஸ்ஆப்பில் பேச ஆரம்பித்தனர். விரைவில் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினர். அந்த பெண்ணின் கூற்றுப்படி, அவர் தனது காதலனைக் கண்டுபிடிக்க நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளார்.

இதேபோல், 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த இக்ரா ஜிவானி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இணையதளத்தில் லூடோ விளையாடும் போது ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

அப்போது இரு நாடுகளின் எல்லையைத் தாண்டி, உறவுகளைப் பேணுவதில் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இக்ரா மீது அவரது குடும்ப உறுப்பினர்களின் அழுத்தமும் அதிகரித்தது.

இதன் காரணமாக முலாயம் வேண்டுகோளின் பேரில் பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நேபாளம் சென்றடைந்தார் இக்ரா.

இருவரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேபாளத்தில் இருந்து பாட்னா வழியாக 2022 செப்டம்பரில் பெங்களூரு சென்றடைந்ததாக போலீசார் கருதுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு