படைகளில் அனுரவிற்கு நம்பிக்கையில்லை!

by wamdiness

இலங்கையின் முப்படைகளிலும் தமக்கான ஆதரவாளர்களை அனுர அரசு தேடிக்கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத் துறையில் பதவி நீடிப்புக்கோரிய பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முப்படைகளின் பிரதானியான சவேந்திர சில்வா, இராணுவ தளபதி மற்றும் இன்னும் பலரது பதவி நீடிப்பு கோரிக்கைகளும் நிராகரிப்பில் அடங்குகின்றது. 

சில பொறுப்புக்களிலிருந்து அதிகாரிகளை தூக்கியுள்ளதுடன், பாதுகாப்பு துறையில் தொடர்பில்லாதவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் எவரையும் நியமிக்கப்படாத வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.     

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு நடந்ததுபோல் எதிர்காலங்களில் தங்களுக்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் ஜனாதிபதி அனுரகுமாரவின் அரசாங்கம் மிக விழிப்பாக உள்ளது. 

இறுதிப்போரில் யுத்தக் குற்றம் செய்ததாக சவேந்திர சில்வா மீது தமிழ் தரப்பினர் குற்றம் சுமத்திய நிலையிலும், அவரை ஐ.நா சபையின் தூதுவராக மஹிந்த ராஜபக்ச அரசு நியமித்து கௌரவித்ததுடன், படைத்துறையில் மூத்த அதிகாரிகள் இருக்கத்தக்கதாக பல உயர் பதவிகளை சவேந்திர சில்வாவுக்கு ராஜபக்சவினர் வழங்கினர்.   

ஆனாலும் அரகலய போராட்டம் உச்சம் தொட்டபோது அலரி மாளிகையில் அகப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறுவதற்காக உதவிகோரி சவேந்திர சில்வாவை பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோதும், அதற்கு அவர் பதில் வழங்காமல் புறக்கணித்ததன் காரணமாக இராணுவத்தில் நம்பிக்கை இழந்து கடற்படையின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் மஹிந்த ராஜபக்ச தஞ்சமடைந்தார். 

எனவே கடந்த காலங்களை அனுபவமாகக்கொண்டு பலமான ஆட்சியை கொண்டுசெல்வதற்கு பாதுகாப்புத்துறை முதன்மையானது என்பதனால்தான் அதனை ஆட்சிக்கு விசுவாசமான ஒன்றாக கட்டியமைப்பதில் அனுரகுமாரவின் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்