திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன.
நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை.
திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது
சீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோ பதிவுகளில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் சென்று மீட்புப் பணியாளர்கள் அங்கு சிக்கி உள்ள மக்களுக்கு தடிமனான போர்வைகளை வழங்குவதைக் காட்டுகின்றன.
சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீன ஊடகமான சிசிடிவியிடம், “ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்” என்று கூறினார்.
5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், “பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது”என்று ஜியாங் கூறினார்.
1950 களில் சீன அரசாங்கம் திபெத் பகுதியை தனது கட்டுப்பாட்டில் இணைத்துக்கொண்ட பிறகு, இப்பகுதி மீது சீனா வலுவான கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது.
ஷிகாட்சேயில் உள்ள ஒரு ஹோட்டலில் வசித்து வந்த நபர் ஒருவர் சீன ஊடகமான ஃபெங்மியன் செய்திகளிடம் நில நடுக்கத்தின் அதிர்வுகளால் அவர் தூக்கத்தில் இருந்து விழித்ததாகக் கூறினார்.
உடனே அவர் தெருவுக்கு விரைந்து ஓடி வந்து பார்த்தபோது வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
“எனது படுக்கை தூக்கப்படுவது போல் உணர்ந்தேன்”, என்று அவர் கூறினார். சமீபத்தில் திபெத்தில் பல சிறிய நிலநடுக்கங்களை அவர் அனுபவித்ததால் தற்போது ஏற்பட்டது பூகம்பம் என்பதை அவர் உடனடியாக அறிந்ததாகவும் அவர் கூறினார்.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது.
அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீன விமானப்படை மீட்புப் பணிகளையும், ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது.
நேபாளத்தில் அதிர்வு
இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது.
“அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை” என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார்.
”ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா.
“பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.
தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், “இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.” என்றார்.
2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.