ட்ரூடோ சகாப்தத்தின் முடிவு!

by guasw2

மூன்று கூட்டாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று (06) தனது பதவி விலகலை அறிவித்தார்.

லிபரல் கட்சிக்கான மக்கள் ஆதரவு குறைந்து வருவதையும், பல முக்கிய இடைத்தேர்தல் தோல்விகளையும் காட்டிய பல மாத வாக்கெடுப்புகளுக்குப் பின்னர், ட்ரூடோ பதவி விலக அவரது கட்சிக்குள் பெருகிய அழுத்தத்தை எதிர்கொண்டார்.

இதற்கு மத்தியில் அவரது பதவி விலகல் வந்துள்ளது.

தனது லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பதாகவும், மார்ச் 24 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் – அல்லது இடைநிறுத்தப்படும் என்று ட்ரூடோ ஒட்டாவாவில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இப்போது, ​​நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் போது லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய கட்சித் தலைவர் தேர்வுக்கான பணிகள் ஆரம்பம்

லிபரல் கட்சியின் தலைவரான இந்தோ-கனேடிய தொழிலதிபர் சச்சித் மெஹ்ரா, திங்களன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இராஜினாமாவை அறிவித்ததை அடுத்து, புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

2023 இல் கட்சியின் முன்னாள் தலைவர் மீரா அகமதுவை தோற்கடித்து பதவியை பெற்ற மெஹ்ரா, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியைத் தொடங்குவதற்கு கட்சியின் பணிப்பாளர்கள் குழு கூட்டம் இந்த வாரம் நடைபெறும் என்று கூறினார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்ட அவர்,

நாடு முழுவதும் உள்ள தாராளவாதிகள் எங்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தலைமைத்துவத்தில் இருந்து வழிநடத்தியதற்காக ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக உள்ளனர்.

பிரதமர் என்ற முறையில், அவரது தொலைநோக்கு கனேடியர்களுக்கு மாற்றத்தக்க முன்னேற்றத்தை அளித்ததாகவும் கூறினார்.

ட்ரூடோவின் இராஜினாமாவில் எதுவும் மாறவில்லை

ட்ரூடோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து “எதுவும் மாறவில்லை” என்று கன்சர்வேடிவ் தலைவர் Pierre Poilievre கூறினார்.

ஒவ்வொரு லிபரல் எம்.பி. மற்றும் தலைமைப் போட்டியாளரும் 9 ஆண்டுகளாக ட்ரூடோ செய்த அனைத்தை விடயங்களையும் ஆதரித்தனர்.

இப்போது அவர்கள் ட்ரூடோவைப் போலவே கனேடியர்களை இன்னும் 4 ஆண்டுகளுக்கு துன்புறுத்த மற்றொரு லிபரல் முகத்தை மாற்றி வாக்காளர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

லிபரல் கட்சியின் அழுத்தம்

53 வயதான ட்ரூடோ தனது லிபரல் கட்சிக்குள் இருந்து வெளியேறுவதற்கான அழைப்புகளை கடந்த சில மாதங்களில் எதிர்கொண்டார்.

இந்த அழைப்புகள் டிசம்பரில் துணைப் பிரதமரும் நீண்ட கால நண்பருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென இராஜினாமா செய்தபோது அதிகரித்தது.

ஃப்ரீலேண்ட் தனது இராஜினாமா கடிதத்தில், “அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீதான வரி தொடர்பாக பல அச்சுறுத்தல்களை விடுக்கிறார்.

ஆனால் டிரம்ப் முன்வைக்கும் இந்த ‘கடுமையான சவாலை’ எதிர்கொள்ள ட்ரூடோ போதுமான அளவு பணியாற்றவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ட்ரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான எல்லையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தப்போவதாக கனடா அறிவித்துள்ளது.

இதனிடையே, ட்ரம்ப் ஒரு பதிவில், வரிகள் தொடர்பான அழுத்தம் ட்ரூடோவின் இராஜினாமாவுக்கு வழிவகுத்தது என்று கூறினார், மேலும் கனடாவை, ‘அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக மாற்ற வேண்டும்’ என்ற தனது வழக்கமான கருத்தை மீண்டும் எடுத்துரைத்தார்.

ட்ரூடோ சகாப்தத்தின் முடிவு

1970 கள் மற்றும் 1980 களில் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய கனேடிய பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் ட்ரூடோ.

“சன்னி வேஸ்” இன் புதிய, முற்போக்கான சகாப்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான வாக்குறுதியின் மத்தியில் 2015 தேர்தலில் லிபரல் கட்சி பெரும் பெரும்பான்மையைப் பெற்ற பின்னர் ட்ரூடோ பிரதமரானார்.

அவரது அமைச்சரவையில் 50% பெண்களாக இருக்கும் பாலின சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பு, கனடாவில் உள்ள பழங்குடி மக்களுடன் நல்லிணக்கத்தில் முன்னேற்றம்; தேசிய கார்பன் வரியை கொண்டு வருவது; குடும்பங்களுக்கு வரியில்லா குழந்தை நலனை செயல்படுத்துதல்; மற்றும் பொழுதுபோக்கு கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குதல் என்பன அவரது சாதனையில் அடங்கும்;

இந்த நிலையில் ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் முறைப்பாடுகள் எழுந்தன. அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காலத்தின் தடுப்பூசி தொடர்பான ஆணைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளும் சில கனேடியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டன.

இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ‘ஃப்ரீடம் கான்வாய் டிரக்’ (Freedom Convoy truck) போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில் போராட்டக்காரர்களை அகற்ற அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தினார் ட்ரூடோ.

மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் ட்ரூடோவின் ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

செப்டம்பர் மாதம் `Ipsos’ தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர்.
ஒட்டாவாவில், ட்ரூடோவின் இராஜினாமாவைக் கொண்டாடும் வகையில், ஒரு சிறிய எதிர்ப்பாளர்கள் குழு நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே நடனமாடினர்.

எவ்வாறெனினும் ஒரு வழிப்போக்கர், ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் எல்ல விடயங்களும் நன்றாக இருப்பதாக தான் கருதுவதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்