சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நேபாளம், இந்தியாவில் உணரப்பட்ட அதிர்வு
நேபாள தலைநகர் காத்மாண்டு மற்றும் வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை கடும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையம் சீனாவின் திபெத் ஆகும். அங்கு 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அந்த மையம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள ஷிகாட்சே நகரில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 6:35 மணிக்கு 6.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் அரசு நடத்தும் சிசிடிவி சேனல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது.
“அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை” என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார்.
”ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா.
“இது ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.
தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், “இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.” என்றார்.
திபெத் பகுதியில் உள்ள ஷிகாட்சே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு கணிசமான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.