நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சைக்கு பின் சிக்கல்களுக்கு உள்ளான நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், இவ்வாறு 17 நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளர்களில் சிலர் முழுமையாக கண்பார்வை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குழு அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டு முறை ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிக்கல்களை ஏற்படுத்திய மருந்தை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
2023 ஆம் ஆண்டு மே மாதம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளிகளின் கண்பார்வை சத்திரசிகிச்சையின் பின்னர் கண் பார்வை சிக்கலுக்கு உள்ளாகினர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் இருந்ததால், அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிகளின் கண்பார்வை பலவீனமடைந்து அல்லது முற்றாக இழந்துவிட்தாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.