- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
“என்னுடைய அப்பாவுக்கு 54 வயது. டீக்கடை வைத்து நடத்தி வந்தார். ஜூலை மாதம் அவருடைய டூவீலரில், ஆலங்குளத்தில் இருந்து வீட்டுக்கு வந்த போது விபத்தில் சிக்கிக் கொண்டார். காயமடைந்த அவரை நாங்கள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவருடைய மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.,” என்று விவரிக்கிறார் மகேஷ்.
“அவர் வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே தான் இருக்கும் நிலைமை வரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவருடைய உடல் உறுப்புகளை தானமாக தந்தால் மற்றவர்கள் வடிவில் அப்பா உயிர் வாழ்வார் என்று நினைத்தோம். முதலில் சற்று யோசித்தோம். பின்னர் அதுவே சரியான முடிவு என்று பட்டது.,” என்கிறார் மகேஷ்.
திருநெல்வேலி மாவட்டம் கரும்பனூர் பகுதியில் வாழ்ந்து வந்த மகேஷின் தந்தை எம்மேல்பாண்டியனின் (Emmelpandian) 6 உடல் உறுப்புகள் ஜூலை மாதம் 9-ஆம் தேதி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், உடல் உறுப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த நோயாளிகளுக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஷேக் அய்யூப், ஆலங்குளம் தாசில்தார் ஐ. கிருஷ்ணவேல், எம்மேல்பாண்டியனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி, இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
ஒரே ஆண்டில் 268 பேர் உடல் உறுப்பு தானம்
கடந்த ஆண்டில், எம்மேல்பாண்டியனின் உடல் உறுப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் 200க்கும் அதிகமான நபர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக 90 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
சமீபத்தில் இத்தகைய தானங்கள் அதிகரித்து வரக் காரணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக செயல்படும் மருத்துவ கட்டமைப்பும் தான் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. 2024-ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் தொடர்பாக வெளியான தரவுகள் தெரிவிப்பது என்ன? விளக்குகிறது இந்த கட்டுரை.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம்
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த ரோஸ்மேரி என்பவர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் கல்லீரல் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நாகையகவுண்டபட்டியை சேர்ந்தவர் அஜய். 23 வயதான அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடலை தானம் செய்வதாக அவரது தந்தை தெரிவித்தார்.
“ஆரம்பத்தில் தயங்கினேன்”
எம்மேல்பாண்டியன் விபத்தில் சிக்கிய பிறகு நடந்தவற்றை பிபிசி தமிழிடம் விவரித்தார் அவருடைய மகன் மகேஷ்.
விபத்துக்கு பிறகு திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்மேல்பாண்டியனை சேர்த்துள்ளனர் அவருடைய உறவினர்கள். மூளைச்சாவு அடைந்துவிட்டதால் அவருக்கு எந்த சிகிச்சையும் பலனளிக்காது என்பதை மருத்துவர்கள் தெரிவித்ததாக அவருடைய மகன் மகேஷ் தெரிவித்தார். பிறகு, மற்றவர்களுக்கு அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று மருத்துவர்கள் ஒரு யோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார் மகேஷ்.
“உடனே என்னால் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால அன்றைய தினம் நான் வீட்டுக்கு வந்து அம்மா, சித்தி, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் பேசினேன். தானம் செய்வது நல்ல விஷயமாகவே அவர்களுக்கும் தெரிந்தது.
மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது, மருத்துவரிடம் பேசினோம். தானம் வழங்குவது எப்படி? என்னென்ன உறுப்புகளை எடுப்பார்கள்? எப்படி அது அனுப்பப்படும்? என்பன உள்ளிட்ட எல்லா தகவல்களையும் மருத்துவர்கள் எங்களுக்கு விளக்கமாக கூறினார்கள். எங்கள் அப்பாவின் உடல் உறுப்புகளை தானமாக தருவதால் மற்றவர்களுக்கு மறுவாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததும், சரி என்று சொல்லி விட்டோம்” என்று விவரித்தார் மகேஷ்.
அதன் பிறகு அவருடைய அப்பாவின் இதயம், கல்லீரல், தோல், சிறுநீரகம் மற்றும் கார்னியாக்களை எடுத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டை விட உடல் உறுப்பு தானம் அதிகம்
2023-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பின் அடிப்படையில், உடல் உறுப்புகளை தானம் செய்த அனைவரது உடலுக்கும் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 186-ஆகவும், இதர காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களில் 218 பேர் ஆண்கள். 50 பேர் பெண்கள் என்றும் தமிழக அரசின் தரவு தெரிவிக்கிறது. மொத்தமாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 1,500 உடல் உறுப்புகள் பிறருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்
2008-ஆம் ஆண்டு முதல் முறையாக உடல் உறுப்பு தானம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு அதிமுக ஆட்சியின் போது 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டு இன்று முதல் செயல்பட்டு வருகிறது.
2008-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 7. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து வந்த உடல் உறுப்பு தானம், கொரோனா தொற்று காலத்தில் மட்டும் குறைந்தது. 2023-ஆம் ஆண்டில் 178 பேரும், 2024ம் ஆண்டில் 268 பேரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்கிறது தமிழக அரசின் தரவுகள்.
2022ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானங்கள் நிகழ்ந்துள்ளன. டெல்லியில் 3,818 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அந்த தரவு தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் 2,245 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த உறுப்புகள் உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த தரவில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 85 பேருக்கு இதயம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. நுரையீரல் தானத்தில் தெலுங்கானாவுக்கு அடுத்தபடியாக 50 நுரையீரல்கள் தமிழ் நாட்டில் தானம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அந்த தரவுகள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?
தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரித்து வருவது ஏன்? என்ற கேள்வியை பிபிசி தமிழ், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலராக பணியாற்றும் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணனிடம் முன்வைத்தது.
“அரசு, அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள், ஊடகங்கள் மற்றும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்ற ஐந்து அம்சங்களே உடல் உறுப்பு தானங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது,” என்று தெரிவிக்கிறார் கோபாலகிருஷ்ணன்.
“ஆரம்பத்தில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி (MMC)-யில் தான் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு ‘மரியாதை அணிவகுப்பு’ நடத்தப்பட்டது. உறுப்புகளை தானம் செய்தவரின் உடலை, ஆம்புலன்ஸிற்கு மாற்றும் வரை மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் அந்த அணிவகுப்பை நடத்தி மரியாதை செய்தனர்.
2023-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணைக்குப் பிறகு, இவ்வாறு தானம் செய்யப்பட்ட நபர்களின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதை வழங்கப்படுகிறது. அவர்கள் இல்லாத போது, அவர்களின் உத்தரவுகளின் பேரில் இந்த அரசு மரியாதை தரப்படுகிறது,” என்று தெரிவித்தார் அவர்.
மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து பேசும் போது, “அவர்களின் இதர பணிகளுக்கு மத்தியில் இதனை கூடுதல் பொறுப்பாக, தன்னார்வத்துடன் மருத்துவர்கள் எடுத்துக் கொண்டனர். நோயாளிகள் மூளைச்சாவு அடைந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்வது முதல், அவர்களின் உடல் உறுப்புகளில் தானம் வழங்க ஆரோக்கியமாக இருக்கும் உறுப்புகளை தேர்வு செய்தல் போன்ற பணிகள் வரை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்பு வசதிகளையும் ஒரு முக்கியமாக அம்சமாக அவர் தெரிவிக்கிறார். “ஆரம்பத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வழங்க போதுமான வசதிகள் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தான் இத்தகைய உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை சரியான முறையில் பயன்படுத்தும் வகையில், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்று இதர மருத்துவமனைகளுக்கு அனுப்ப Non-Transplant Organ Retrieval Centres அமைப்பதற்கான உரிமம் பல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலமும் உறுப்பு தானங்கள் அதிகரித்துள்ளன,” என்பதை அவர் தெரிவிக்கிறார்.
“இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தமிழக அரசு செய்து வருகிறது. யாருக்கு எந்த உறுப்புகள் தேவை என்பது துவங்கி, யார் மூளைச்சாவு அடைந்துள்ளார்கள், அவர்களின் உறுப்புகள் எங்கே வழங்கப்படுகிறது என்பது வரை தெரிந்து கொள்வதற்கு வெளிப்படையான இணையதளம் செயல்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணம்,” என்றும் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.