தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் பெண்கள் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) நிராகரித்துள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து பெப்ரவரி 26 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
ஆனால் 160 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இப் போட்டியை புறக்கணிக்க வலியுறுத்தி ECB க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில்,
தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொடூரமாக நடத்தப்படுவதற்கு எதிராக இங்கிலாந்து ஆண்கள் அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்.
அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டியை புறக்கணிப்பதைப் பற்றி ECB பரிசீலிக்க வேண்டும்.
இத்தகைய கோரமான உரிமை மீறல்களை பொறுத்துக்கொள்ள முடியாது.
பாலியல் நிறவெறிக்கு எதிராக நாம் நிற்க வேண்டும்.
மேலும், ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் உறுதியான செய்தியை வழங்க ECB ஐக் கேட்டுக்கொள்வதாகவும் அந்த கடித்தில் குறிப்படப்பட்டுள்ளது.
புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கும் கடிதத்திற்கு பதிலளித்த ECB தலைவர் ரிச்சர்ட் கோல்ட்,
தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் நடத்தப்படுவதை தமது வாரியம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அதே நேரத்தில், இந்த விடயம் தொடர்பில் தனியாக செயல்படுவதை விட அனைத்து உறுப்பு நாடுகளிடமிருந்தும் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் எனக் கூறி அழைப்பினை நிராகரித்தார்.