சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; 9 பேர் உயிரிழப்பு!

by adminDev

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் சென்ற வாகனத்தை நக்சலைட் பிரிவினைவாதிகள் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG ) ஜவான்களும், சாரதியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(DRG என்பது மாநில காவல்துறையின் ஒரு பிரிவு)

பாதுகாப்புப் பணியாளர்கள் தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் ஆகிய பகுதிகளின் கூட்டு நடவடிக்கையிலிருந்து முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திங்கட்கிழமை (06) பிற்பகல் 02.15 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் பிஜப்பூர் மாவட்டத்தின் குத்ரு பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள அம்பேலி கிராமத்தின் அருகே பாதுகாப்பு பணியாளர்கள் பயணித்த வாகனத்தை வெடிக்கச் செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2023 ஏப்ரல் 26 அன்று, தண்டேவாடா பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணியின் ஒரு பகுதியாக இருந்த நக்சல்கள் தங்கள் வாகனத்தை வெடிக்கச் செய்ததில் பத்து பொலிஸாரும் ஒரு சிவிலியன் சாரதியும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்