- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் கல்லூரி.
விருத்தாசலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளை, சிவப்பு களிமண் அதிகளவில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 1965-ம் ஆண்டு இங்கு பீங்கான் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.
அந்த தொழிற்பேட்டையின் தற்போதைய நிலை, கல்லூரியின் செயல்பாடு, உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்து அறிவதற்கு அங்கு சென்றோம்.
தமிழ்நாட்டின் ஒரே செராமிக் டிப்ளமோ கல்லூரி
தமிழ்நாடு அரசின் (சிட்கோ) பீங்கான் தொழிற்பேட்டை உள்ளே நுழையும்போது, வலதுபுறத்தில் அரசு செராமிக் டிப்ளமோ கல்லூரி உள்ளது.
“தமிழ்நாட்டிலேயே செராமிக் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ வழங்கும் ஒரே கல்லுாரி இதுதான். மூன்றரை வருட டிப்ளமோ படிப்பு இங்கு வழங்கப்படுகிறது. இங்கு பீங்கான் தொழிற்சாலைக்குத் தேவையான வெள்ளை, சிவப்பு களிமண் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களும் எளிதாகக் கிடைப்பதால், இங்கு இந்த டிப்ளமோ கல்லூரி தொடங்கப்பட்டது” என்கிறார் இந்த கல்லூரியில் பயிற்றுநராக பணிபுரியும் இளவரசி.
‘இங்கு படித்தால் வேலை நிச்சயம்’
இங்கு ஒவ்வொரு ஆண்டும் 55 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டிலேயே செராமிக் டிப்ளமோ இக்கல்லுாரியில் மட்டுமே வழங்கப்படுவதால், செராமிக் நிறுவனங்கள் இங்கு படித்த மாணவர்களை அதிகளவில் தேர்வு செய்வதாக கூறுகிறார் அவர் இளவரசி.
தொடர்ந்து இங்கு படிக்கும் மாணவர் இம்ரான் பேசும்போது, “இப்படிப்புக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக தேவை இருப்பதால், இங்கு சேர்ந்தேன். நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் உள்ளனர் என்ற போதிலும் கூடுதலாக பொறுப்பாசிரியர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார் மாணவர் ஒருவரான தேவநாதன்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் வனஜாவிடம் கேட்டபோது, “இங்கு அனைத்து பாடங்களுக்கும் தேவையான ஆசிரியர்கள் உள்ளனர், தேவைக்கேற்ப தற்காலிக ஆசிரியர்கள் மூலமும் பாடம் எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
“செராமிக் தொழில் தொடர்பான பெரிய தொழிற்சாலைகள் இந்தப் பகுதியில் இல்லாததால், வெளிமாநிலங்கள், வெளிநாட்டை நோக்கித்தான் என்னைப் போன்ற இளைஞர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வழங்கும் செராமிக் தொழிற்சாலைகள் இருந்தால் நன்றாக இருக்கும்” என கூறினார் தேவநாதன்.
அங்கிருந்து ஆலடி செல்லும் அதே சாலையில் 44 ஏக்கரில் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடங்கள் உள்ளன.
அதற்கு அருகில் உள்ள கடைகளில் இந்த பீங்கான் தொழிற்பேட்டையில் தயாரிக்கப்பட்ட டீ கப், வாட்டர் ஃபில்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர், கடவுள் சிலைகள், தலைவர்களின் சிலைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பீங்கானால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதை மொத்தமாகவும் சில்லறையாகவும் மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக அங்கு கடை வைத்திருக்கும் சங்கர் கூறினார்.
“இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன” என கூறினார் சங்கர்.
சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடேசன் பிபிசி தமிழிடம், “நான் இங்குள்ள செராமிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்துக் கூடுதலாக B.Tech படிப்பும் முடித்தேன். தொடர்ந்து வேலை செய்த அனுபவத்துடன் நானே இங்கு தொழில் தொடங்கினேன் . கடந்த 2000ம் ஆண்டு வரை அரசு மூலப் பொருட்களை (களிமண் வகைகள்) வழங்கி உதவிகளையும் செய்து வந்தது என்ற போதிலும், தற்போது அவ்வாறு கிடைப்பதில்லை” என தெரிவித்தார்.
எனினும், தற்போது பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் மூலப் பொருட்களை அவர்களே கொள்முதல் செய்து பொருட்களை தயாரித்து விற்பதன் மூலம் நல்ல லாபமும் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.
“ஆந்திரா, குஜராத், கரூர் மற்றும் விருத்தாசலம், நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மூலப் பொருட்களை நாங்களே வாங்கிக் கொள்கின்றோம். நாளொன்றுக்கு 60 டன் வரை மூலப்பொருட்கள் இங்கிருக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன” என்று கூறினார்.
பெரும்பாலும் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி, பாலக்கொல்லை, பூவனூர் போன்ற பகுதிகளில் கிடைக்கும் மண் வகைகளே மூலப்பொருட்களாக பயன்படுவதாகவும் கூடுதலாக வெளிமாவட்ட பகுதிகளில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் தேவைக்கேற்ப மூலப்பொருட்கள் வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்தார் அவர்.
கோடிக்கணக்கில் வியாபாரம்
மண் வகைகளை பக்குவப்படுத்துவதற்காக சூடேற்றும் ஆலைகள் 20 இடங்களில் தற்போது இயங்கி வருகின்றன. ஒரு கிலோ மூலப்பொருளை சூடேற்ற ஆறு ரூபாய் கட்டணமாக பெறப்படுவதாக தெரிவித்தார் வெங்கடேசன்.
விருத்தாசலம் (சிட்கோ) செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் 67 பெரிய நிறுவனங்கள் உள்ளன. அருகிலேயே 300 சிறு தொழிற்சாலைகள் (குடிசை தொழில் செய்பவர்கள்) உள்ளன. இதன்மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
“இங்கு பொறியியல் தொடர்புடைய ஆலைகளில் பயன்படுத்தப்படும் சிறிய ஸ்க்ரூ, நட், போல்ட் போன்ற சிறிய உபகரணங்கள் முதல் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வகை குழாய் வகைகள், பொம்மைகள் அலங்கார பொருட்கள் வரை பல்வேறு வகையான பீங்கான் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூபாய் 100 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை இந்த பகுதியில் வருமானம் கிடைக்கின்றது” என்கிறார் வெங்கடேசன்.
‘ஆராய்ச்சி மையங்கள் தேவை’
குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் செராமிக் தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன, ஆனால் இங்கு இல்லை என்றார் செராமிக் நிறுவனத்தை நடத்தி வரும் பார்த்தசாரதி.
ஆராய்ச்சி மையம் இங்கு இருந்தால் இன்னும் தொழிலை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.
“வடமாநிலங்களில் இந்த தொழிலுக்கு நல்ல முக்கியத்துவம் தருகின்றனர். பல மாநிலங்களில் செராமிக் தொழில் நிறுவனங்களுக்கு எரிவாயு போன்ற எரிபொருள்களையும் அரசே விநியோகம் செய்கிறது. ஆனால் இங்கு அதுபோன்று இல்லை” என்றார் அவர்.
மேலும், குஜராத்தில் பைப்லைன் மூலமாகவே எரிபொருளை வழங்குகிறார்கள், இங்கு அதுபோன்று இல்லை என்றும் பார்த்தசாரதி தெரிவித்தார்.
“இந்த தொழிலுக்கு எரிபொருள் மிக முக்கியமானது. இந்த பீங்கான் பொருட்கள் செய்வதற்கு 50% எரிபொருள் செலவாகும். மூலப்பொருட்கள் செலவு 20% தான். எனவே, அரசாங்கம் எங்களுக்கு குறைந்தபட்ச செலவில் எரிபொருள் கிடைப்பதற்கான உதவி செய்தால் நன்றாக இருக்கும்,” என வலியுறுத்தினார்.
‘படித்தது மெக்கானிக்கல், பணி செய்வது செராமிக்’
இப்பகுதியை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகவும் பீங்கான் பொருட்களை தயார் செய்கின்றனர்
இரண்டாவது தெருவில் வசிக்கும் அபிஷேக் மற்றும் அவரது தாயார் சுமதி இருவரும் பொம்மை செய்து கொண்டே பிபிசி தமிழிடம் பேசினர்.
“நான் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து சென்னையில் பணி செய்து வந்தேன். எனக்கு அங்கு திருப்தி இல்லை. எனது அம்மா சுமதிக்கு வயதாகிறது என்பதால் நான் விருத்தாசலத்திற்கு வந்து அவருக்குத் துணையாகவும் உதவியாகவும் இருக்கின்றேன். சென்னையில் இருந்து சம்பாதித்ததை விட இங்கு நான் அதிகமாகவே சம்பாதிக்கின்றேன்” என்றார் அபிஷேக்.
ஒரு நாளைக்கு 300 பொருட்கள் செய்து முடிப்பதாக கூறும் அவர், அதன் மூலம் ரூ.1,200 சம்பளம் கிடைக்கும் என்றும் கூறினார்.
சொந்தமாக குடிசைத்தொழில்
அங்கு மூன்றாவது குறுக்குத் தெருவில் சிலை செய்து கொண்டிருந்த தெரேசா, “நான் சிறுவயதில் இருந்தே இந்த தொழிலை செய்து வருகின்றேன். தற்போது நாங்கள் குடிசை தொழிலாக சொந்தமாகவே செய்து வருகின்றோம். நாங்கள் செய்யும் பொம்மைகளை வியாபாரிகள் எங்களிடம் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். வியாபாரிகள் வராத நேரங்களில் இங்கிருக்கும் குடோன்களில் நாங்கள் நேரடியாக சென்று விற்பனை செய்து வருகின்றோம், அதில் எங்களுக்கு லாபம் சற்று குறைவாக கிடைக்கும்” என்றார்.
அருகிலுள்ள சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வரும் சாத்துக்குடல் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, “நான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சிறிய நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். எனக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் கிடைக்கின்றது. நான் சிறிய பொம்மைகள் மற்றும் அகல் விளக்குகளையும் செய்து தருகிறேன்” என கூறினார்.
தங்களுக்கான சம்பளத்தை முறைப்படுத்தி, அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறார் மகாலட்சுமி.
‘அனைத்து உற்பத்தியாளர்களையும் பங்குதாரர்களாக அங்கீகரிக்க வேண்டும்’
உற்பத்தியாளர் கந்தசாமி (ஜனநாயக உற்பத்தியாளர் சங்க செயலாளர்) பிபிசி தமிழிடம் பேசும்போது, “2000ம் ஆண்டு வரை இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை சுடுவதற்காக அரசாங்கமே சுடுசூலை வைத்திருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மூடப்பட்டது. தற்போது ஒரு சில தனிநபர்கள் சுடுசூலை வைத்துள்ளார்கள். இதை தவிர்த்து சிட்கோ உதவியுடன் இங்குள்ள நபர்களையும் பங்குதாரர்களாக கொண்ட சுடுசூலை மையங்களை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.
‘உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) விருத்தாசலம் பகுதி மேலாளர் சரவணபவ பிபிசி தமிழிடம் கூறுகையில், “விருத்தாசலம் பகுதியில் இயங்கி வரும் பீங்கான் தொழிற்பேட்டை தற்போது முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் தொடர்ந்து தொழில் செய்து வருபவர்களுக்கு முறையான வாடகை ஒப்பந்தம் முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு கட்டங்களாக பிரித்து முதல் கட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன” என்று கூறினார்.
எரிபொருள் தேவை தொடர்பாக ஐஓசிஎல்-யிடம் பேசி பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள செராமிக் நிறுவனங்களுக்குத் தேவையான மொத்த எரிபொருள் அளவு குறித்துக் கேட்டு அது கிடைப்பதற்கு பரிந்துரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இப்பகுதி தொழிலாளர்கள் மற்றும் தொழில் மையங்கள் மேம்படுவதற்கு உண்டான அனைத்துப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘நடவடிக்கைகள் எடுக்கப்படும்’
செராமிக் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து, சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “சுடுகலன் விரைவில் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே உள்ள செராமிக் டிப்ளமோ கல்லூரியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படும். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி நெறிமுறைப்படுத்தி அனைத்து தொழில் முனைவோர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கைகள் அனைத்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்கேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு