by wp_shnn

நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்றைய தினம் பல்கலைக்கழக முன்றலில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மாணவர் ஒன்றித் தலைவர் கு.துவாரகன் மற்றும் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன், ஆகியோரால் கையெழுத்திட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்துப்பீடங்களினதும் மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்பமிட்டு போராட்டத்திற்கு வலுச் சேர்த்தனர்.

தொடர்ந்து, அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் “வெஞ்சிறையின் குரல்” எனும் பாடல் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினரால் குறித்த போராட்டத்தின் நிறைவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அத்துடன் அக்கினிச் சிறகுகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இப்பாடலானது மாணிக்கம் ஜெகன் அவர்களின் பாடல் வரிகளில், சங்கீர்த்தனனின் குரலில், சிவ.பத்மஜனால் இசையமைக்கப்பட்டது

இதேவேளை கையெழுத்துப் போராட்டத்திற்கு தலைமையேற்று கருத்துரையாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன், தமிழ் போர்க் கைதிகளின் கைதானது தனியே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பார்க்கப்பட கூடிதொன்றல்ல; மாறாக அனைத்துல மயமாக்கப்பட வேண்டிய தமிழினப் படுகொலையின் நீட்சியேயாகும் எனக் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், தற்போது விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் 10 அரசியற்கைதிகளில் எட்டு பேரின் மீதே நீதிமன்ற வழக்குகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், இருவர் எவ்வித வழக்குகளுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இனப்படுகொலைப் போரின் நீட்சியான போர் கைதிகளின் கைதுகளை நாம் நோக்க வேண்டும். எமது சுயநிர்ணயத்திற்கான கோரிக்கையை அனைத்துலகப் படுத்துவதற்கும் அதனை வலுச் சேர்ப்பதற்கும் ஜெனீவா சமவாயம் உள்ளிட்ட பன்னாட்டு சமவாயங்களிற்கு உட்பட்டு போர்க் கைதிகள் (War Prisoners) என்ற சொற்பதமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அது சிறிலங்காவின் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குட்பட்டு அரசியற் கைதிகளாக (Political Prisoners) சுருக்கப்பட்டுள்ளது.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிறிலங்காவின் சிங்கள – பெளத்த ஆட்சிகள் அனைத்தும் தொடர்ந்தும் பன்னாட்டுச் சமூகங்களை சமாளிப்பதற்காக வாக்குறுதிகளை வாரி வாரி இறைத்து வருகின்ற போதிலும் எங்கள் நிலையில் மட்டும் எந்த ஏற்றங்களும் நிகழ்ந்ததாகவில்லை.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதில் ஒன்று தான் இனப்படுகொலையின் நீட்சியான போர்க் கைதிகளின் விடுதலை.

காலில் வடு என்றால் காலை வெட்டி எறிவதாக இல்லாமல், அந்த வடுக்களை ஆற்றுவதாக நல்லிணக்கம் அமைய வேண்டும். நல்லிக்க உரையாடல்களை தொடங்கும் அனுர அரசு உண்மை நல்லிணக்கத்தில் நம்பிக்கை இருந்தால் அதனை போர்க்கைதிகளின் விடுதலையில், இனப்படுகொலைக்குப் பொறுப்புக் கூறுவதில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தை ஏற்று அங்கீகரிப்பதில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிப்பதில் காட்ட வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம் எனக் குறிப்பிட்டார்

தொடர்புடைய செய்திகள்