மரணத்தை வென்ற முதியவர்: நின்று போன இதயம் ஆம்புலன்ஸ் வேகத்தடையில் ஏறி, இறங்கியதும் மீண்டும் துடித்தது எப்படி?
- எழுதியவர், பிரியங்கா ஜக்தாப்
- பதவி, பிபிசி மராத்திக்காக
-
ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போது, திடீரென அந்த நபரின் உடலில் அசைவு தெரிந்து, அந்த நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தால் எப்படி இருக்கும்?
இந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் நடந்துள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் தீவிரம் அதிகம். முதியவரின் உறவினர்களால் இது ஓர் அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டாலும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
கோலாப்பூரில் உள்ள கஸ்பா-பவ்டாவை சேர்ந்த ஒரு முதியவர் மரணப் படுக்கையில் இருந்து ‘திரும்பி வந்தார்’ என்று அப்பகுதி முழுவதும் பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தை அடுத்து இந்த செய்தி ஊடகங்களிலும் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
இறந்துபோன முதியவர் மீண்டும் உயிர் பெற்று வந்தது பெரிய அதிசயம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது அதிசயமா அல்லது மருத்துவ அலட்சியமா என்பதுதான் கேள்வி.
உண்மையில் என்ன நடந்தது? முதியவருக்கு என்ன ஆனது?
‘முதியவர் இறந்து கொண்டிருக்கிறார்’
பாண்டுரங் உல்பேவின் பேரன் ஓம்கார் ரமணே இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
டிசம்பர் 16ஆம் தேதி மாலை பாண்டுரங் உல்பேக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், மாலை 6:30 மணியளவில் அவரது குடும்பத்தினர் கங்கவேஷில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
முதியவருக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னார். பாண்டுரங் உல்பேவின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே, அவரது ஒரே மகள் மற்றும் மருமகன் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர்.
“இதற்கிடையில், சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது, பாண்டுரங் உல்பேவின் உடல் முற்றிலும் அசைவற்றுப் போனது. இதயத் துடிப்பும் நின்றுவிட்டது. இறுதியாக, பாண்டுரங் உல்பேவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மதியம் 12.30 மணியளவில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து வருவதாகத் தெரிவித்தனர்” என்று ஓம்கார் கூறுகிறார்.
மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், கடந்த 17ஆம் தேதி நள்ளிரவில் பாண்டுரங் உல்பேவை குடும்பத்தினர் ஆம்புலன்சில் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவனையில் இருந்து கிளம்பும் போதுகூட அவரது உடல் அசைவற்று இருந்துள்ளது. எனவே அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் கருதினர்.
அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் தொடங்கினர்.
எல்லாவற்றையும் மாற்றிய வேகத்தடை
வீட்டில் பாண்டுரங் உல்பேவின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
உல்பே சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, பாண்டுரங்கின் உடல் கடுமையாக ஆட்டம் கண்டது. சிறிது நேரம் கழித்து, அவரது விரல்கள் அசைந்ததை பேரன் ஓம்கார் ரமணே கவனித்தார்.
தாத்தாவின் விரல்கள் அசைவதைக் கண்டவுடன், தன்னிடம் இருந்த ஆக்ஸிமீட்டரை கொண்டு அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்ததாக ஓம்கார் கூறினார்.
அதன் பிறகு, தாத்தா உயிருடன் இருப்பதை உணர்ந்த அவர், உடனடியாக ஆம்புலன்ஸை கஸ்பா பவ்டாவில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்குத் திருப்பினார்.
இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக, டிசம்பர் 17 அன்று பிற்பகல் 3 மணியளவில் உல்பேவுக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
பூரண குணமடைந்து டிசம்பர் 30ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீடு திரும்பிய பிறகு, அவரது வீடியோ மற்றும் இந்தச் சம்பவங்களின் முழுப் பின்னணி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
ஆனால், எந்த மருத்துவமனைக்கு அவரை முதலில் அழைத்துச் சென்றார்கள், எந்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாகக் கூறினார் என்ற எந்தத் தகவலையும் தெரிவிக்க குடும்பத்தினர் தயாராக இல்லை.
மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவர், இது அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம் என்று கூறினார்.
சிவில் சர்ஜன் என்ன சொன்னார்?
பாண்டுரங் உல்பேவுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள, பிபிசி மராத்தி கோலாப்பூர் மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவரான மருத்துவர் சுப்ரியா தேஷ்முக்கிடம் பேசியது. இது தொடர்பாக பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினரிடம் தகவல் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.
“பாண்டுரங் உல்பேவின் ஈசிஜியில் நேர்க்கோடு தோன்றியதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்ததாக ஓம்கார் ரமணே எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்” என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார்.
இருப்பினும் விதிகளின்படி, அவ்வாறு நேர்க்கோடு தோன்றியதுமே எந்த நோயாளியும் உடனடியாக இறந்ததாக அறிவிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார். “ஒரு மணிநேரத்திற்குப் பிறகே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். அதுவரை நோயாளியின் இதயத்துடிப்பை மீட்டெடுக்கப் பல்வேறு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம்” என்றும் அவர் கூறினார்.
“முதியவர் விஷயத்தில் இப்படி எதுவும் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஆம்புலன்சில் உறவினர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்” என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார்.
இதில் சம்பந்தப்பட்ட மருத்துவரின் அலட்சியம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த தேஷ்முக், “சம்பந்தப்பட்ட மருத்துவர் இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்துள்ளார். முதல் தவறு, இதயம் துடிப்பதை கவனிக்காமல் நோயாளி இறந்துவிட்டதாக உடனடியாக அறிவித்தது. இரண்டாவது தவறு, பிரேத பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.”
“இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை அவசியம் என்று கூறிய மருத்துவர் தேஷ்முக், இறப்புச் சான்றிதழை வழங்காமல் இதயம் துடிக்கவில்லை என்று வெறுமனே கூறி பாண்டுரங் உல்பேவை வீட்டுக்கு அனுப்பியது பெரிய தவறு” என்று தெரிவித்தார்.
இதயம் மீண்டும் துடித்தது எப்படி?
அப்படியானால், பாண்டுரங் உல்பே எப்படி சுயநினைவுக்கு வந்தார் என்று மருத்துவர் தேஷ்முக்கிடமும் கேட்டோம்.
“மாரடைப்புக்குப் பிறகு, இதயம் திடீரென நின்றுவிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க, நோயாளிக்கு இதய மசாஜ் அல்லது இதயத்தில் ஊசி செலுத்தப்படும். ஆம்புலன்ஸ் வேகத்தடையின் மேல் ஏறியபோது பாண்டுரங் உல்பேவின் உடல் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி அவரது இதயத்தை செயல்பட செய்திருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவரோ, சம்பந்தப்பட்ட மருத்துவமனையோ இந்த விவகாரம் குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையின் பெயரை தெரிவிக்க பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
குடும்பத்தின் மூத்தவர் மரணப் படுக்கையில் இருந்து மீண்டு வந்திருப்பது அந்தக் குடும்பத்திற்கு ஒரு அதிசயமான நிகழ்வு. ஆனால் வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியும் உள்ளது. எனவே ‘அந்த’ மருத்துவரின் அலட்சியம், குடும்பத்தினருக்கு பெரிய சோகத்தை கொடுத்திருக்கும்.