13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா – 6 மாகாணங்களில் அவசர நிலை
அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கென்டக்கி, விர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.
மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் கிழக்கு நோக்கி நகரும்போது, இன்னும் மிகக்குறைந்த வெப்பநிலையை அமெரிக்கர்கள் எதிர்கொள்வார்கள் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வாஷிங்டன் டி.சி-இல் 5 முதல் 9 அங்குலம் வரையிலான பனிப்பொழிவு உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிக்கு சான்றளிக்க அமெரிக்க நாடாளுமன்றம், திங்கள்கிழமை (ஜனவரி 6) பிற்பகலில் கூடவுள்ளது.
ஆனால் மோசமான வானிலை காரணமாக சில உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளிலிருந்து தலைநகருக்குத் பயணிப்பதில் சிக்கல் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கிழக்கு நோக்கி நகரும் புயல்
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.
2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ள இது வழிவகுக்கும் என்று ‘அக்யூவெதர்’ முன்னறிவிப்பாளர் டான் டிபோட்வின் கூறினார்.
“மிகவும் குறைவான வெப்பநிலை, ஒரு வாரத்திற்கு நீடிக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.
இந்த பனிப்புயலுக்கு காரணமான துருவச் சுழல் (Polar Vertex), பொதுவாக வட துருவத்தைச் சுற்றியே இருக்கும். ஆனால் அது நகர்ந்து விரிவடையவும் கூடும். அவ்வாறு நகர்வதால், தெற்கு பகுதிகளில் வழக்கத்தை விட மிகக் குறைவான வெப்பநிலை நிலவும்.
சனிக்கிழமை (ஜனவரி 4) மாலை பனிப்புயல் தாக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே, சமீப நாட்களாக துருவ சுழல் அமெரிக்காவில் விரிவடைந்து வந்தது.
இது வரும் நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் மோசமான பனிப்பொழிவு மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடும்.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பயணிப்பதை முடிந்தளவு தவிர்க்குமாறும், அமெரிக்காவின் வழக்கமான திங்கட்கிழமை காலை போல இருக்காது என்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரியில், சராசரி வெப்பநிலை -1 செல்ஸியஸாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு இந்த வருடம்தான், மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கிறது.
2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு இருந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கன்சாஸ் மற்றும் மிசௌரி முதல் பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி வரை பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மாற்றத்திற்கான நிபந்தனைகளின் முழு பட்டியலையும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் படி, 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. அமெரிக்காவிற்கு உள்ளே வரக்கூடிய மற்றும் வெளியே செல்லக்கூடிய 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கன்சாஸ் நகர சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கிருந்து புறப்படக்கூடிய 86% விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு