“எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனை வேண்டி மொற் பர்த் பண்டிகையை கொண்டாடினர் தோடரின பழங்குடிகள்.
நீலகிரியில் குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர், தோடர், கோத்தர் என ஆறு பண்டைய பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இதில் தோடரின மக்கள் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 65 மந்துகளில் மூவாயிரம் தோடர்கள் நீலகிரியில் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களின் மொழி, உடை, பாவனைகள் முற்றிலும் வித்தியாசமானவை. இவர்களின் மொழியை கற்றுக்கொள்வது மிகவும் கடினமான விஷயம்.
மொற் பர்த் பண்டிகை: இந்த பழங்குடியினரின் வாழ்வில் முக்கிய அங்கம் வசிப்பது எருமைகள். கால்நடை பராமரிப்பாளர்களான இவர்கள் பால் பொருட்களை உட்கொள்ளும் சைவர்கள். தங்களது அனைத்து இறை வழிபாடுகள் மற்றும் விசேஷங்களில் இவர்களது எருமைகளுக்கு முதலிடம் உண்டு. அத்தகைய எருமைகள் விருத்தியடைய வேண்டும், தங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என வேண்டி மார்கழி மாதம் இவர்கள் கொண்டாடும் பண்டிகையே மொற் பர்த்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ கொண்டாடப்படுவது வழக்கம். இதில், மாவட்டத்தில் உள்ள தோடரின மக்கள் பங்கேற்று கோலாகலமாக கொண்டாடுவர். இந்தாண்டுக்கான பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் தலைமை மந்தான தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்து கொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன்போ மற்றும் ஓடையாள்போ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோயில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளதால் தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்தினர். “எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும். நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனிடம் வேண்டினர்.
கொண்டாட்டம், கோலாகலம்: ஆண்கள் வழிபாடு நடத்தி முடிந்ததும், பெண்கள் கொண்டாட்டத்தில் இணைகின்றனர். தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடிய படி நடனமாடுகின்றனர். இவர்களை தொடர்ந்து ஆண்கள் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றனர்.
பின்னர், முதியவர்கள், இளவட்ட கற்களை தூக்கி தங்கள் இளமையை நிரூபிக்க இளைஞர்களை அழைக்கிறார்கள். குமரி பெண்கள் முன்னிலையில் கற்களை தூக்கி விட முடியுமா என்ற சந்தேகத்தில் சிலர் தயங்க, சிலர் தங்கள் பலத்தை காண்பிக்கும் வாய்ப்பாக அங்கிருக்கும் இளவட்ட கற்களை அலேக்காக தூக்கி தோள்களில் நிறுத்தி பெருமிதத்துடன் சுற்றியிருப்பவர்கள் மீது தங்கள் பார்வையை வீசி பின் நோக்கி கற்களை வீசியெறிகின்றனர்.
இளவட்ட கற்கள் தூக்கும் பழக்கம் தமிழகத்தில் இருந்து மறைந்துவிட்ட நிலையில், தோடரின மக்கள் தங்களது பாரம்பரிய விழாக்களில் இளவட்ட கற்களை தூக்கி பாரம்பரியத்தை நிலைநாட்டி வருகின்றனர். இளவட்ட கற்கள் தூக்கும் விளையாட்டு நிறைவடைந்ததும் பெண்கள் விருந்து பரிமாறுவதில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். பால், நெய், இனிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக உணவு விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
விருந்தை உண்டதும் பெண்கள் வரிசையாக வந்து முதியவர்களின் பாதங்களை தொட்டு வணங்க, தங்கள் முறைப்படி வலது காலை தூக்கி அந்த பெண்களின் தலை மீது வைத்து ஆசிர்வாதம் செய்கின்றனர். விழா நிறைவடைந்ததும் பிரியாவிடை பெற்று தங்களது சொந்த மந்துகளுக்கு புறப்படுகின்றனர் தோடர் மக்கள். இந்த விழாவில் தோடரின மக்களின் தலைவர் மந்தேஸ் குட்டன், அடையாள் குட்டன், பீட்ராஜ், தோடரின நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மந்தேஸ் குட்டன் கூறும் போது, மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், எங்கள் எருமைகள் விருத்தி அடையவும் மக்கள் வளம் பெறவும் மார்கழி மாதம் எங்களின் தலைமை மந்தான முத்தநாடு மந்தில் இறைவனை வேண்டி சிறப்பு வழிப்பாடு நடத்துவோம். இந்த விழா தொடங்கப்பட்ட பின்னரே பிற மந்துகளில் பிற விஷேசங்கள் தொடங்கும் என்றார்.