யூனுக்கு எதிரான பிடியாணை உத்தரவை நிறைவேற்றுமாறு தென்கொரிய பொலிஸாரிடம் கோரிக்கை!

by wp_fhdn

யூனுக்கு எதிரான பிடியாணை உத்தரவை நிறைவேற்றுமாறு தென்கொரிய பொலிஸாரிடம் கோரிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) மீதான குற்றவியல் விசாரணைக்கு தலைமை தாங்கும் புலனாய்வு அமைப்பு, ஜனாதிபதியின் கைது தொடர்பான விடயங்களை பொறுப்பேற்குமாறு அந் நாட்டு பொலிஸாரிடம் திங்கட்கிழமை (06) கேட்டுக் கொண்டது.

யூன் சுக் யோலுக்கு எதிரான பிடியாணை உத்தரவினை நிறைவேற்றும் புலனாய்வாளர்களின் முயற்சியை தடுக்க, மனிதச் சங்கிலியை உருவாக்கிய ஜனாதிபதி காவலர்களுடன் வெள்ளிக்கிழமை (03) ஏற்பட்ட பதட்டமான நிலையினை அடுத்து இந்த கோரிக்கை வந்துள்ளது.

உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்தின் (CIO) கூட்டுப் புலனாய்வாளர் குழு மற்றும் காவல்துறை, யூன் தனது குறுகிய கால இராணுவச் சட்டத்தை திணித்ததன் மூலம் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகின்றனர்.

உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் புலனாய்வு அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை (05) தேசிய பொலிஸ் முகவர் நிலையத்தின் துணை நிறுவனமான தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஜனாதிபதி தொடர்பான விசாரணைக் கடமைகளை அலுவலகம் கைவிடாது என்றும் அக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், திங்கள்கிழமை (06) நள்ளிரவுடன் காலாவதியாகவுள்ள யூனுக்கு எதிரான பிடியாணை உத்தரவினை நீட்டிக்குமாறு நீதிமன்றத்தில் கோருவதாகவும் CIO கூறியுள்ளது.

இதனிடையே, கைது பணிகளை மேற்கொள்வதற்கான கோரிக்கையை CIO ஒருதலைப்பட்சமாக பொலிஸ் தலையீடு இல்லாமல் செய்ததாகவும், அது தொடர்பில் சட்டப்பூர்வ மறுஆய்வு நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யூன் மீதான கூட்டு விசாரணைக்கு தலைமை தாங்கி வரும் CIO, வெள்ளிக்கிழமை யூனை கைது செய்ய முயன்றனர்.

ஆனால், ஜனாதிபதி பாதுகாப்பு சேவையுடனான பல மணி நேர முற்றுகைக்குப் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்