தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்!

by wp_shnn

வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 

கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம். அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும். அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம். 

புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது. 

தமிழ் மக்கள் மத்தியில் 75 வருடமாக தேசிய இனப்பிரச்சனை புரையோடிப் போயுள்ள பிரச்சனையாக இருக்கிறது. அது தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு புதிய அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மிடம் இருக்கிறது. 

கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளூராட்சி தேர்தல் நடந்து முடிந்து ஓரிரு மாதங்களில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம்.

இந்த அரசாங்கம் மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரம் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் நாம் கருதுகின்றோம்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் சரியான அறவிப்புக்களை வெளியிடுமாக இருந்தால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலத்தை உருவாக்கி முழுமையான சுயாட்சியை உருவாக்குவதற்கான கருத்துக்கள அல்லது அறிக்கைகளை எல்லோருடனும் இணைநது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் கொடுப்போம். 

அதில் முக்கியமாக தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனைக்கு பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தமிழ் மக்கள் இந்த மண்ணில் முழுமையான சுயாட்சியோடு வாழ்வதற்கு தேவையான விடயங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனமாக இருக்க வேண்டும் என நாம் பேசியுள்ளோம். இது தொடர்பில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்