தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்த ஓரிரு நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் ரவி – என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ஆளுநர் தனது உரையை வாசிக்காமலேயே வெளியேறினார்.
2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று துவங்கிய நிலையில், உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். தேசிய கீதம் பாடப்படாததால், வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் அவை தொடங்குவதாக இருந்தது.
இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு பூங்கொத்து அளித்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். ஆனால், ஓரிரு நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் மாளிகையின் பதிவு
அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில், “தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. மாண்புமிகு குடியரசுத் தலைவரின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நாடாளுமன்றத்தில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ”இன்று ஆளுநர் சபைக்கு வந்தவுடன் தமிழ்த் தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அரசியலமைப்புச் சட்டக் கடமையை அவைக்கு நினைவூட்டியதோடு, பேரவைத் தலைவரையும் முதலமைச்சரையும் தேசிய கீதம் பாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். அரசியலமைப்புச் சட்டத்தையும் தேசிய கீதத்தையும் அவமதிக்கும் இத்தகைய அப்பட்டமான நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஆளுநர் மிகுந்த வேதனையுடன் அவையை விட்டு வெளியேறினார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவு நீக்கப்பட்டு புதிதாக ஒரு பதிவை வெளியிட்டது ஆளுநர் மாளிகை.
முந்தைய பதிவில் இருந்த “மாண்புமிகு குடியரசுத் தலைவரின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நாடாளுமன்றத்தில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது” என்ற வரிகள் இந்தப் பதிவில் நீக்கப்பட்டிருந்தன.
துரைமுருகன் பதில்
ஆளுநர் வெளியேறிய பிறகு அவை முன்னவரான துரைமுருகன் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் முந்தைய ஆண்டுகளில் ஆளுநர் வெளியேறிய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். தேசிய கீதம் குறித்த சர்ச்சை குறித்தும் விளக்கமளித்தார்.
“இது தொடர்பாக ஆளுநர் கடந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பேரவைத் தலைவர் பதிலளித்தார். இந்த அவையில் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவதை அதில் சுட்டிக்காட்டினார். ஆனால், மீண்டும் இதனை ஒரு பிரச்னையாக ஆளுநர் குறிப்பிட்டு, உரையை படிக்காமல் சென்றது அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது. இந்த நாட்டின் மீதும் தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும் இந்தப் பேரவையும் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் என்றும் மாறாத நன்மதிப்பைக் கொண்டது இந்த அரசு” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, விதி எண் 17ஐத் தளர்த்தி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் “ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
இதற்குப் பிறகு, பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவையில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட உரை மட்டுமே சபைக் குறிப்பில் இடம்பெறும். அதுபோல ஊடகங்களும் ஆளுநர் உரையைத் தவிர, சட்டப்பேரவையில் வேறு எந்த நிகழ்வும் நடந்ததாக சொல்லக்கூடாது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நாட்டுப் பண் இசைப்பது குறித்து ஆளுநர் எனக்குக் கடிதம் எழுதினார். அந்தப் பிரச்சனை அப்போதே தீர்க்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. “இது ஆளுநர் உரையல்ல, சபாநாயகரின் உரை. ஆளுநர் புறக்கணித்துச்செல்லவில்லை. திட்டமிட்டு அவர் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
‘உரையை வாசிக்க விருப்பம் இல்லாததால் இப்படிச் செய்கிறார்’
இன்று சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தைக் குறிக்கும் வகையில் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்தனர். பதாகைகளையும் வைத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் அப்பாவு, ” ஆளுநர் தேசிய கீதத்தையெல்லாம் ஒரு சாக்காக சொல்கிறாரே தவிர, உரையை வாசிக்க விருப்பம் இல்லாததால் இப்படிச் செய்கிறார் என புரிந்துகொள்கிறேன். ஆளுநர் முதல் கூட்டத்திற்கு வர வேண்டுமென்பது மரபு. அதற்காக அவரை மரியாதை நிமித்தமாக அழைத்தபோது மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேசினார். ஆனால், ஆளுநர் இப்படிச் செய்கிறார். அடுத்த ஆண்டும் இதேபோல அழைப்போம், வாசிப்பதும் வாசிக்காததும் அவரது விருப்பம். இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது இந்தப் பிரச்சனை இருக்கிறதா? கொள்கை ரீதியான அரசு இருப்பதால் இப்படிச் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. மதச் சார்பற்ற நாடு என அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. மதச்சார்புள்ள நாடு என சொல்கிறார்கள். இப்படி செய்தால் என்ன செய்வது?” என்று தெரிவித்தார்.
ஆளுநர் உரை நேரலை செய்யப்படாதது ஏன் எனக் கேட்டபோது, “ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு இருக்கலாம், நேரலை செய்யப்பட்டதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
முதல் முறையில்லை
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரை நிகழ்த்தும் தினத்தில் இதுபோல சர்ச்சை நடப்பது முதல் முறையில்லை. கடந்த 2023-ஆம் ஆண்டில் அந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது.
உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த உரையில் இருந்த சில வரிகளைத் தவிர்த்துவிட்டு வாசித்தார். சில வாசகங்களை சேர்த்தும் படித்தார். ஆனால், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசித்தார். இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அவர் பேசுகையில்,”தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அவையைவிட்டு அவசரஅவசரமாக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். இது அந்தத் தருணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குப் பிறகு 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது. அன்று தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. இதற்குப் பிறகு தனது உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போதும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.
மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்றும் கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார்.
இதற்குப் பிறகு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவை விதி 17ஐத் தளர்த்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். “2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ், ஆங்கிலத்தில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்ட படியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” என்ற அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.