கட்சிக்குள் அதிகரித்து வரும் அழைப்புகளுக்கு மத்தியில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) லிபரல் கட்சியின் தலைவர் பதவியை திங்கட்கிழமை (06) இராஜினாமா செய்யக்கூடும் என்று நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ‘The Globe and Mail’ செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், ட்ரூடோ உடனடியாக பதவி விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ட்ரூடோவின் கொள்கைகளுக்காக நாட்டின் நிதியமைச்சர் மற்றும் துணைப் பிரதமர் பதவியிலிருந்து கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் விலகிய ஒரு மாதத்திற்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த நிலையில் ட்ரூடோவின் இராஜினாமா அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை சமாளிக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை அமைக்க விரைவான தேர்தலுக்கான புதிய அழைப்புகளை தூண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் ட்ரூடோவின் தாராளவாதிகள் மோசமாக தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வெளிக்காட்டுகின்றன.
2013 ஆம் ஆண்டில், ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.